ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள்,காசுகள், வரலாற்றுச் சுவடுகள் குறித்து களஆய்வு மூலம் சேகரித்த தகவல்களைத் தொகுத்து கட்டுரையாக எழுதி ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார். பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத் துவங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை, உலோகத்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை, பனை ஓலை போன்றவைகளை எழுதகூடிய பொருட்களாக பயன்படுத்தினர்.

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றை வாசிக்க ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையம் பயிற்சி அளித்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி விசாலி தன் வீட்டில் இருந்த பல தலைமுறைக்கு முந்தைய முன்னோர்கள் பயன்படுத்திய பழைய ஓலைச்சுவடிகளை தேடி அவற்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் வரவு எழுதும் வழக்கம் இருந்ததையும் கண்டறிந்துள்ளார்.

ஓலைச் சுவடி குறித்து மாணவி விசாலியின் பிபிசி தமிழிடம் கூறியபோது, ” இது திருப்புல்லாணியைச் சேர்ந்த பிச்சைப் பண்டிதர் மனைவி குட்டச்சி என்பவர் காலமானபோது எழுதப்பட்ட கருமாந்திர மொய் வரவு ஆகும். இது எழுதப்பட்ட நாள் பிங்கள ஆண்டு அற்பிசை மாதம் 23ஆம் நாள் வியாழக்கிழமை (08.11.1917) ஆகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 100 அண்டுகளுக்கு முன்பே, கருமாந்திர காரியத்தின் போது மொய் வரவு எழுதி வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.இதில் மொய் எழுதிய அனைவரும் ஒரு ரூபாய் மொய் கொடுத்துள்ளனர்.” என்கிறார் அவர்.

”இந்த ஓலைச்சுவடியில் தமிழ் ஆண்டு, தமிழ் மாதம், தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இறப்பு நிகழ்ந்த நேரத்தை மணி, திதி, நட்சத்திரம் ஆகியவற்றால் குறித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆங்கில ஆண்டுகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தபோதிலும் பெரும்பாலானவர்கள் தமிழ் எண்கள், தமிழ் மாதம், தமிழ் ஆண்டுகளையே பயன்படுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. ஓலைச்சுவடிகளில் புள்ளி வைத்து எழுதுவதில்லை. புள்ளி உள்ள எழுத்துக்களை சேர்த்து எழுதும் வழக்கம் இருந்துள்ளதை இதில் காணமுடிகிறது.” என விவரித்தார் விசாலி.

இப்பகுதி மாணவர்கள் இதே போல் பாண்டியர், சோழர், டச்சுக்காரர் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேயா ஆகிய நாடுகளில் ஆங்கிலேயர் காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகளைக் கண்டெடுத்துள்ளனர்.

”இலங்கை காசு 1 சதம் ஒன்றும், அரை சதம் இரண்டும் கிடைத்துள்ளன. இவை கி.பி.1901, 1912, 1926 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவை. இவற்றின் ஒரு பக்கத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின் மார்பளவு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மறுபக்கத்தில் தாளிப்பனை மரம் உள்ளது. அதனருகில் காசின் மதிப்பு தமிழிலும் சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளன.” என கூறுகிறார் அவர்.

இது குறித்து, ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு,”ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்கள் ராமாயாணத்துடன் தொடர்புடையன. சேதுக்கரைக் கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். மேலும் வைகையின் கிளை ஆறான கொற்றக்குடி ஆறு, திருப்புல்லாணி வழியாகச் சென்று சேதுக்கரையில், கடலில் கலக்கிறது. இதனால் இக்கடலோரம் பழைய காசுகள் கிடைப்பதுண்டு.” என்கிறார்.

மேலும் அவர், ”ஆங்கிலேயர் ஆட்சியில், இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. புனித நீராடலுக்காக இலங்கையில் இருந்து மக்கள் இங்கு வந்துள்ளார்கள். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று திரும்பி வந்தபோது அங்குள்ள காசுகளை கொண்டு வந்துள்ளனர்.” என்கிறார்.

பண்டைய காலத்து பொருள்களை சேகரிக்கும் மாணவி நமீதா,“ எல்லா இடத்திலும் பொருட்களை தேடினேன் அப்போ, முதல்ல பிளாக் அண்ட் ரெட் கல் கிடைத்தது. அது பண்டைய காலத்துல பண்படுத்தியது என பிறகு தெரியவந்தது. பிறகு ஒரு மணி கல் கிடைத்தது. இந்த மணி கல் இரண்டாயிரம் ஆண்டு பழமையான மணி செய்யப்பட்ட கல் என்று ஆசிரியர் கூறினார்“என்றார்.

இந்த மாணவிகளால் தேடி எடுக்கப்பட்ட பொருள்களின் பழமை தன்மை குறித்து தொல்பொருள் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கத்திடம் கேட்ட போது,” மண்ணின் மேல்; பரப்பில் மாணவர்களால் தேடி எடுக்கப்படும் அனைத்து பொருள்களையும் நான் பார்த்து இருக்கிறேன். அந்த பொருள்கள் பண்டைய வெளி நாட்டை சேர்ந்த நாணயங்கள் மற்றம் பண்டைய கால பயன்பாட்டில் இருந்த ஓலை சுவடிகள்” என தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>