தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதிகள்!

தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதிகள்!

தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதிகள்!

நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோ மீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சிணைகள் இருந்திருக்காது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


(‘முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது கேரளாவோடு சேர்க்கப்பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள் கூட.)

நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீர்மேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத் தான், ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோ மீட்டர்கள்.

இது போன்று பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக். அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும் விட பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும் பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர். அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீர்மேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்த போது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீர்மேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்த போது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்). அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்ட போது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.
இந்த 1,400 சதுர கிலோ மீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்… இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது. பவானி நதிப் பிரச்சினை கிடையாது. தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது. சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக் கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோ மீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம். சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில் கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்த போது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின. இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு. மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின் போது நடந்தது என்ன தெரியுமா? வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள் படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோ மீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள். இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியது கூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால் கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது. கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.
பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால், பெங்களூரு விவகாரம் வந்த போது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம். இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோ மீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவை விட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவை விட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும் கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களை விட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>