திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார்.
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
நான்கு யுகங்களை கடந்தது :
இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.
இவருக்கு பொய் ஆகாது :
ஒரு வியாபாரி, பொதிச் சுமையாக, மாடுகள் மீது மிளகு மூட்டை ஏற்றிச் சென்றுள்ளார். மாறுவேடத்தில் சென்ற சிவன், மூட்டைகளில் என்ன என கேட்ட போது, மிளகுக்கு இருந்த மதிப்பு காரணமாக, பாசிப் பயிறு என கூறியுள்ளார். 15 நாட்களுக்கு மேலாக பயணித்து, சந்தைக்குச் சென்று பார்த்த போது, மிளகு மூட்டைகள் அனைத்தும் பாசிப் பயிறு மூட்டைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறியுள்ளார்.இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு; பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வியாபாரியும் வந்து, சுக்ரீஸ்வரரை வணங்கியதால், மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்களுக்கு, மிளகு ஈஸ்வரரே பரிச்சயம். மருகுக்கு, இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கிறது. என நம்புகின்றனர்.
படிக்கட்டு இல்லை:
வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.
கோவில் மேல் கோவில் :
தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.
இரண்டு நந்தி :
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார். பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
மிளகீசன் :
சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் ‘மரு’ உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் ‘மரு’க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் ‘மிளகீசன்’ என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், ‘ஆளுடைய பிள்ளை’ என்று குறிக்கப்படுகிறார்.
கோயில் குறித்த சிறப்பம்சங்கள் :
1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.
2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் – வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.
3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.
4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)
5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.
6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் “தீப ஸ்தம்பம்” இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.
7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு “சிற்ப ஸ்தலங்களில்” இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.
8) வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.
9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை “குரக்குதை நாயனார்” என்று வழிபட்டுள்ளனர்.
10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத் துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை. சுற்றாலத் துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை ஆர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது. ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.