கீழடிக்கு இணையான தொல்லியல் களம் ராஜபாளையம் மாங்குடியில் கண்டுபிடிப்பு!

கீழடிக்கு இணையான தொல்லியல் களம் ராஜபாளையம் மாங்குடியில் கண்டுபிடிப்பு!

கீழடிக்கு இணையான தொல்லியல் களம் ராஜபாளையம் மாங்குடியில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே மாங்குடியில் சங்க காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் ,இரும்புப் பொருட்கள் மற்றும் துளையிடப்பட்ட சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் போராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான போ. கந்தசாமி கூறியதாவது:

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தேவியாற்றின் ஓரத்தில் அமைந்துள்ள மாங்குடியில், சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் காணப்படுகின்றன. புன்செய் நிலப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்ட போது , விவசாய நிலத்தில் ஏராளமான கருப்பு சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகள் சிதறிக் காணப்படுகின்றன. இவற்றில் ரோமானிய மண்பாண்ட வகை ஓடுகளும் அதிகளவில் உள்ளன. துருப்பிடித்த நிலையில் சிறு கத்தி போன்ற இரும்புப் பொருள், சுடுமண் துளையிடப்பட்ட மூக்கு கெண்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேவியாற்றின் தெற்குப் பகுதியில் மண் மூடிய நிலையில் உறை கிணறுகளும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவற்றை வைத்து , மிகப் பழமையான கீழடிக்கு இணையான நாகரிகம் இருந்துள்ளதை நிரூபிக்கும் வகையில் ,பல தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகிறது.

12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிகப்பெரிய நந்தி சிற்பம் ஒன்று, வாய்ப்பகுதி உடைந்த நிலையில் பாதிக்கு மேல் மண்ணில் புதைந்துள்ளது. துர்க்கை , காளி தெய்வ சிற்பங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதன் அருகிலே கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. பழங்காலத்தமிழில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டில், பாண்டிய நாட்டின் ராணுவ படை ஒன்று பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. காளியம்மன் கோயில் அருகில் சோழர் காலத்தைச் சேர்ந்த அழகிய வேலைப்பாடுடைய தூண் ஒன்றும், மண்ணில் சாய்ந்துள்ள நிலையில் உள்ளது.பழமையான விநாயகர் சிற்பம் இடது புறத்தில், சிறு தூண் போன்ற அமைப்புடன் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சிற்பம் வழிபாட்டு நிலையில் உள்ளது. இச்சிற்பங்களை ஆராயும் போது, இங்கு சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது. மாங்குடி தேவியாற்றின் தென்பகுதியில் மேலும் அகழ்வாய்வு செய்தால், இப்பகுதியின் வரலாற்றை முழுமையாக வெளிக் கொண்டு, கீழடிக்கு இணையான நாகரிகம் வெளிவரக்கூடும், என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>