மதுரை அருகே, கீழடி அகழாய்வில், 6,018 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என, தமிழக தொல்லியல் துறை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை அருகே கீழடியில், 110 ஏக்கரில் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல் அகழாய்வு நடக்கிறது. கீழடியில் கிடைத்த, பழங்கால பொருட்களை, மத்திய தொல்லியல் துறையினர் சேகரித்துள்ளனர். அப்பொருட்களை, பெங்களூரிலுள்ள அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல, மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் மியூசியம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கனிமொழி மதி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக தொல்லியல்துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது, கீழடி அகழாய்வில், 6,018 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1,893 பொருட்கள், 2016ல் பெங்களூரு அருங்காட்சியக ஆய்விற்கு எடுத்துச் செல்லப்பட்டன. மீதி, 4,125 பொருட்கள் கீழடியில் உள்ளன. மண்பானை, ஓடுகள், பாசி, உரக்கிணறு, நாணயங்கள், இரும்பு, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, மத்திய கலாசாரத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்ட நீதிபதிகள், விசாரணையை, ஜூன், 13க்கு ஒத்தி வைத்தனர்.