உலகிலேயே மிகக்கொடிய அடக்குமுறைச் சட்டமாக குற்றப்பழங்குடி சட்டம் – Criminal Tribes Act (CTA) 1871 இயற்றப்பட்டு தொடக்கத்தில் வட-இந்தியாவில் மீனா, ஜாட், பஞ்ஜாரா, ராமோஜி போன்ற வீரகுடி மக்களுக்கு எதிராகவும், பின்பு 1911-ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் தமிழகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 537 சாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் ஏவப்பட்டது. தமிழகத்தில் இந்தப் பட்டியலில் இருந்த சாதிகளின் எண்ணிக்கை 79. நாடோடிகளாக இருப்பவர்கள், விவசாயம் செய்யாதவர்கள், அடிக்கடி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள், கால்நடைகளை வளர்க்காதவர்கள், அரச பரம்பரையில் வந்தவர்கள் என சொல்லிக் கொண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடு படுகிறவர்கள், ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களை நடத்தி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுபவர்கள் எல்லாம் குற்றப் பழங்குடியினர் என பட்டியல் போட்டிருந்தது பிரிட்டிஷ் அரசு.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
தமிழகத்தில் 06.05.1914-இல் மதுரை கீழக்குடி கள்ளர்களுக்கு எதிராகவும், பின்னர் 05.06.1918-இல் ஒட்டுமொத்த பிறமலைக் கள்ளர்களுக்கு எதிராகவும் அமல்படுத்தப்பட்டது. இம்மக்கள் சாலையோரம் நின்றாலே கைது செய்து விசாரணையே இல்லாமல் தண்டிக்கப்பட்டனர். வெறும் சந்தேகத்தின் பேரில் பல பேர் தூக்கிலிடப்பட்டனர், நாடு கடத்தப்பட்டனர். இந்தச் சட்டத்தின்படி, 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இரவானதும் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது தாலுகா அலுவலகத்தில் போய் தங்கிவிட வேண்டும். அங்கே ‘ஏ’ ரிஜிஸ்டர், ‘பி’ ரிஜிஸ்டர் என இரண்டு பதிவேடுகள் இருக்கும். இரவில் தங்க வரும் ஆண்கள், ‘ஏ’ ரிஜிஸ்டரில் ஒவ்வொரு நாளும் கைநாட்டு வைக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூர் செல்ல நேரிட்டால், அந்தப் பகுதி கர்ணத்திடம் ராதாரிச் சீட்டு என்ற ஒப்புகைச் சீட்டு பெற்று, அதை ‘பி’ ரிஜிஸ்டரில் பதிவு செய்த பிறகே செல்ல முடியும்.
மணமகனாக இருந்தாலும், திருமணத்தன்று இரவு வீட்டில் தங்க முடியாது. கட்டாயம் போலீஸ் ஸ்டேஷனில் போய் படுத்துவிட வேண்டும். பெற்றவர்களோ உடன் பிறந்தவர்களோ செத்துக் கிடந்தால் கூட இரவில் வீட்டில் தங்கக் கூடாது. இரவில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் சோதனை என்ற பெயரில் ஆண்களை படுத்தி எடுத்தது வெள்ளைக்கார காவல்துறை. அந்த அளவுக்கு கொடூரமான சட்டமாக இருந்தது குற்றப் பழங்குடிச் சட்டம்.
இச்சட்டத்திற்கு முன்பே 1911-இல் 5,456 கள்ளர்களை கப்பலில் இடம் இல்லாததால் கடலில் தள்ளிவிட திட்டமிட்டபோது தென்னார்காடு மாவட்ட ஆட்சியர் ஆஸ்தினின் தலையீட்டால் தப்பினர். அவர்கள் இன்றும் சொந்த மண்ணிலேயே அஸீஸ்நகர், ஒட்டேரி, பம்மல் குடியிருப்புகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இச்சட்டத்தின் கீழ் ரேகை பதிவு செய்தவற்காக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள காளப்பன்பட்டி, போத்தம்பட்டி, பெருங்காமநல்லூர், தும்மக்குண்டு, குமரம்பட்டி ஆகிய ஊர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதிகாரிகள் சிந்துபட்டியில் 02.03.1920-இல் முகாமிட்டனர். கள்ளர் நாட்டு தலைவர்கள் 24.03.1920-இல் தும்மக்குண்டு மந்தையில் ஒன்றுகூடி தேவசகாயத் தேவர் தலைமையில் 8 பேர் கொண்ட ரேகை எதிர்ப்பு கமிட்டி அமைத்து ஜார்ஜ் ஜோசபை வழக்குரைஞராக நியமித்தனர்.
29.03.1920 அன்று அனைவரும் போத்தம்பட்டி வந்து ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் ஆணை பிறப்பித்தனர். “சர்கார் சட்டத்திற்குப் பணிய வேண்டியது குடிகள் கடமை. அதேபோல் காட்டுமிராண்டி சர்கார் பிரயோகிக்கும் அடக்குமுறைச் சட்டத்தை எதிர்க்க வேண்டியதும் குடிகளின் கடமை’ என்று கூறி அங்கு செல்ல மறுத்து விட்டனர்.
“அடக்குமுறையில் சட்டம் பிறப்பித்து எங்கள் வகுப்பினரை அடிமைப்படுத்தப் பார்க்கிறது அரசு, நீங்களும் உங்கள் ஏகாதிபத்திய வெறிபிடித்த வெள்ளையர் அரசும் அழியும் காலம் தூரத்தில் இல்லை’ என்று எச்சரித்தனர்.
அதன் விளைவு 02.04.1920-ஆம் தேதி இரவோடு இரவாக பயணம் செய்து பெரும் ஆயுதப்படை பெருங்காமநல்லூரை 03.04.1920-ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு சுற்றிவளைத்தது.
காட்டை அழிக்க முடியும் – அலை
கடலைத் தூர்க்கவும் முடியும்
மேட்டை அகழ்த்த முடியும் – விரி
விண்ணை அளக்கவும் முடியும் – உரிமை
எண்ணத்தை ஒடுக்குதல்
எவ்வாறு முடியும்
என்ற பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் சுமந்து வாழும் பூர்வகுடி வீரமக்கள் “நாங்கள் நிரபராதிகள், பட்டாதாரர்கள், களவுத் தொழில் செய்யாதவர்கள்’ இந்தப் பிராந்தியத்தில் வாழும் சகோதர சமூகத்தினர்களுக்குப் பாதுகாவலர்கள், தோழர்கள், உங்கள் அரசு பிறப்பித்திற்கும் சட்டம் கண் மூடித்தனமானது.
எங்கள் நாட்டின் பால் பற்றுதல் கொண்ட தேசிய உணர்ச்சியை ஒடுக்குவதற்கு முற்படுகிறது வெள்ளையர் சர்க்கார். எங்கள் உயிர் உள்ள மட்டும் ரேகைப் பதிவு செய்யமாட்டோம். மீறிப் பலவந்தப்படுத்தினால் போரிட்டு மடிந்தாலும் மடிவோம், மானம் இழந்து உயிர் வாழ மாட்டோம்’ என்று முழங்கினர். மூண்டது போர். மடிந்தனர் நூற்றுக்கணக்கானோர். பிணக்குவியல் புதைக்கப்பட்டது.
ஆயுதபலம் வீரத்தை வென்றது. பல உண்மைகள் மறைக்கப்பட்டன. மதுரையில் வழக்குரைஞர் சாமி தலைமையில் 200 கிராம மக்கள் ஒன்று கூடி நீதி விசாரணை கோரினர். விசாரணை மறுக்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலை உலகம் முழுவதும் கண்டிக்கப்பட்டதால், அதைவிட கொடுமையான பெருங்காமநல்லூர் படுகொலைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.
அரசு 11 பேர் இறந்ததாக கணக்கு காட்டியது. முத்துத்தேவர் நூலில் 17 பேர் மாண்டதாக பட்டியலிட்டுள்ளார். 05.04.1920-இல் மாவட்ட ஆட்சியர் ரீலியின் அறிக்கையில் “இந்த சம்பவம் குறித்து எனக்கு கிடைத்த முதல் தகவல் 03.04.1920 அன்று மதியம் 1 மணியளவில் முத்துமாயத் தேவர் என்பவர் அனுப்பிய தந்திதான். அதில் அவர் குற்றப்பழங்குடி சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மறுத்ததற்காக 70 பேர் சுடப்பட்டு விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்’ என்று கூறியுள்ளார்.
ஆனால் அங்கு கூடியிருந்தோர் 3,000 பேர் என்றும் 70 துப்பாக்கியேந்திய ஆயதப்படை வீரர்கள் குண்டுகள் அனைத்தையும் பயன்படுத்தி விட்டனர் என்றும் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் கவர்னர் ஜெனரல் அலுவலக குறிப்பில் உள்ளது.
இந்த சம்பவத்திற்கு உரிய அங்கீகாரம் இன்றும் கிடைக்கவில்லை. இந்த விடுதலை போர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது மட்டும்தான் இம்மக்களின் ஒரே கோரிக்கை.
இந்த கொடிய சம்பவத்தை மறைப்பதற்காக கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் கல்வி, விவசாயம், தொழில், கூட்டுறவு, வேலைவாய்ப்பு மையம் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அதன்பின் தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வரதராஜுலு நாயுடு, கே.டி.கே தங்கமணி, ஜீவா, ராமமூர்த்தி போன்றோரின் சீரிய முயற்சியால் ரேகைச் சட்டம் 05.06.1947-இல் நீக்கப்பட்டது. அனந்தசயன ஐயங்கார் கமிட்டியின் பரிந்துரைப்படி 30.08.1952-இல் இந்தியா முழுவதும் இச்சட்டம் நீக்கப்பட்டு அவர்கள், ஈசப என்று அழைக்கப்பட்டனர்.
ஆனால் அந்த கொடிய சட்டத்தால் சமூகத்தில் அடித்தட்டிற்கு தள்ளப்பட்ட இம்மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்தப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. மாறாக இம்மக்களுக்கு எதிராக “பழக்கவழக்க குற்றவாளிகள் சட்டம்’ என்ற பெயரில் அதே ரேகைச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2000-ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தும், 2007-இல் ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாட்டை அகற்றும் மையம் பரிந்துரைத்தும் அச்சட்டம் நீக்கப்படவில்லை.
இன்றும் இந்தியா முழுவதும் வாழும் இம்மக்களுக்கு எதிராக பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுள்ளதை டி.என்.டி. – ஆர்.ஏ.ஜி. இயக்கத்தினர் பதிவு செய்து வருகின்றனர்.
சுதந்திர இந்தியாவில் வெள்ளையர் வழங்கிய நலத்திட்டங்களை பறித்தத்தோடு, 30.07.1979-இல் அரசு ஆணை 1310-இன் மூலம் 68 சாதியினருக்கு பழங்குடி என்று வழங்கி வந்த சாதிச் சான்றிதழை சமுதாயம் என்று மாற்றி அதுவரை அவர்களுக்கு வழங்கி வந்த இலவச உயர்கல்வி பறிக்கப்பட்டு விட்டது.
இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட நாடோடி இன மக்கள் இன்று வரை எந்த சாதிப் பிரிவு பட்டியலிலும் இல்லாததால் ஆதார் அட்டை கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இம்மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இல்லை.
சுதந்திர இந்தியாவில் பல ஆணையங்கள் பல பரிந்துரைகள் வழங்கியும் அவையெல்லாம் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு மத்திய அரசின் ரெங்கி கமிஷன் வழங்கிய 76 பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
26.07.2016-இல் தமிழகம் வந்த தேசிய டி.என்.டி. ஆணையர், ஊடக சந்திப்பின் போது மதுரை கீரத்துறை ஓடக்கரையில் வாழுகின்ற டி.என்.டி. மக்கள் நரக வாழ்க்கை வாழ்கின்றனர் என்று கூறியிருந்தார். 2007-இல் தமிழகத்தில் உருவாக்கிய சீர்மரபினர் நலவாரியத்திற்கு பல ஆண்டுகளாக உறுப்பினர் நியமனம் இல்லாததால் நலத்திட உதவிகள் இம்மக்களுக்கு வழங்கப்படாமல் அத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படாமல் உள்ளது.
2014 ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கும் டி.என்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. 2016-இல் தேசிய டி.என்.டி. ஆணையம் வழங்கிய டி.என்.டி. மக்களுக்கான தனி நிதி நிறுவனம், தனி குறைதீர்க்கும் மையம், தனி அதிகாரி, இலவச வீடு போன்ற இடைக்கால பரிந்துரைகளை மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத் போன்ற மாநிலங்கள் செயல்படுத்தின. ஆனால், தமிழகத்தில் மட்டும் அந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தவில்லை.
வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமெனில் வளமான பாரம்பரியத்திற்கு செந்தக்காரர்களான, வரலாற்றால் வஞ்சிக்கப்பட்ட இந்த பூர்வகுடி மக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி அவர்களையும் சமூக ரீதியாக கல்வி ரீதியாக முன்னேற்ற மத்திய – மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
05.06.2017 – குற்றப்பழங்குடிகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நூற்றாண்டின் தொடக்கம்.