என் நீண்ட கால நண்பர் ஒருவர், சில பல்லவ காசுகளின் படத்தை எனக்கு அனுப்பி, இவை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன் என, கேட்டுக் கொண்டார். அவருக்கு, பண்டைய காசுகளை ஆய்வதில் உள்ள ஆர்வத்தையும், அதை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைக்கும் பாங்கையும் கண்டு வியந்தேன். இக்காசுகளின் உலோகம், எடை, குறுக்களவு போன்ற தகவல்கள் அவருக்குக் கிடைக்காததால், அவர், அவைகளைக் கொடுக்கவில்லை. புகைப்படங்களை ஆய்வு செய்தேன்.முன்புறம், ஒரு காளைமாடு நின்ற நிலையில் உள்ளது. நல்ல கொழுத்த காளையான அது, பல்லவர் கால கோவில்களில் உள்ள நந்தியையும், பல்லவர் காசுகளில் உள்ள உருவையும் ஒத்து உள்ளது. தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகம் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய, ‘பல்லவா காசுகள்’ என்ற நுாலில் வெளியிட்டுள்ள காளை உருவங்களைப் போலவே, இவை தென்படுகின்றன. அதனால், இவை பல்லவர் காசுகள் என்பதில் ஐயமில்லை. இக்காளைகளின் மேல் பகுதியில் வளர்ச்சி தொடங்கும் நிலையில் உள்ள கிரந்த எழுத்துகள், ஒரே வரியில் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டேன். மொத்தம் நான்கு எழுத்துகள் உள்ளன. முதல் எழுத்து பல காசுகளில் உடைந்து இருந்தாலும், சில காசுகளில் தெளிவாக, ‘வீ’ என்று தெரிகிறது. இரண்டாவது எழுத்து, ‘ர’. மூன்றாவது எழுத்து ‘கூ’. நான்காவது எழுத்தும், அடிப்பகுதி உடைந்து காணப்படுகிறது. ஆயினும், இரண்டு காசுகளில், ‘ச’ என, உள்ளது.அதன்பிறகு, சமஸ்கிருதத்தில், ‘ஹ’ என்பதை குறிக்கும் இரு புள்ளிகள் உள்ளன. இவற்றை இணைத்துப் படிக்கும்போது, ‘வீரகூச’ என்ற பெயர் வெளிப்படுகிறது. இதிலிருந்து, இந்தக் காசை வெளியிட்டவன், ‘வீரகூர்ச்சன்’ என்ற பெயர் கொண்ட பல்லவன் என்று தெரிகிறது. காளை உருவமும், இப்பெயரும், ஒரு வட்டத்தின் உள்ளே காணப்படுகின்றன.பல்லவர்களில் முதலாம் மகேந்திர வர்மனுக்கு முன் ஆண்ட, 10 பல்லவ அரசர்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவர்களில், குமாரவிஷ்ணு, விஷ்ணுகோபன், சிவஸ்கந்தவர்மன், சிம்மவர்மன் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவர்களில் வீரவர்மன் என்ற பெயரும், வீரகூர்ச்சவர்மன் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவர்கள் வெளியிட்ட பல செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவற்றில், நெல்லுார் மாவட்டத்தில், ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. அது, ‘தர்சபுரம்’ என்றும், ‘தர்சி’ என்னும் இடத்தில், பல்லவ மன்னன் தானம் கொடுத்ததையும் கூறுகிறது. ஆனால், அச்செப்பேட்டின் ஒரு இதழ் தான் கிடைத்துள்ளது; முழுமையாக கிடைக்கவில்லை. இதில், வீரகூர்ச்சவர்மன் என்ற பல்லவன் குறிக்கப்பட்டுஉள்ளான். அவனே இச்செப் பேட்டை காஞ்சிபுரத்தில் இருந்து வெளியிட்டான்.இக்காசுகள் எல்லாம் அவனால் அப்போது வெளியிடப்பட்டவை எனக் கொள்ளலாம்.இக்காசுகள் அனைத்திலும் பின்புறம் ஒரு அழகிய வட்டத்திற்குள் ஒரு புலியும், அதற்கு மேலே ஒரு கெண்டை மீனும், ஒரு வில்லும் உள்ளன. இம்மூன்றை, ‘வில், கயல், புலி’ சின்னம் என்று கூறுவது தமிழ் மரபு. ஒரு மன்னன், சேரர், சோழர், பாண்டியரையும் வென்றான் என, இம்மூன்று சின்னங்களும் ஒருங்கே பொறிக்கப்படுவது, சங்ககாலத்திலிருந்தே வழங்கி வரும் மரபாகும்.சிலப்பதிகாரத்தில், பாண்டிய மன்னன் கயல், வில், புலி சின்னத்தை இமயத்தில் பொறித்தான் என, ஆய்ச்சியர் குரவையில் குறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சேரன் செங்குட்டுவனும், வடபுல அரசர்களுக்கு தண் தமிழ் நாட்டின் ஆணை என்று, ‘வில்கயல்புலிச்’ சின்னம் பொறித்த ஓலையை அனுப்பினான் என, சிலம்பில், ‘காட்சிக்காதையில்’ காண்கிறோம். அங்கு இம்மூன்று சின்னங்களும், ‘தமிழ்நாடு’ என்பதையே குறிக்கிறது எனக் காண்கிறோம்.காசின் பின்புறத்திலுள்ள மூன்று காசு சின்னங்களிலும், புலி தான் மிகவும் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. புலி, சோழ மன்னர்களின் சின்னம். பல்லவர்கள் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, சோழர்களைத்தான் முதலில் வென்று, காஞ்சி முதல் காவிரி வரை கைப்பற்றி ஆண்டனர். முற்காலப் பல்லவர்களின் மூலம், சேர, சோழ, பாண்டிய, களப்பிரர்களை வென்றதாகக் கூறிக் கொள்கின்றனர். ஆதலின், பல்லவன் முதன்முதலில் தமிழ்நாட்டின் வட பகுதியை கைப்பற்றியபோது தோன்றிய மரபை, இக்காசுகள் வெளிப்படுத்துகின்றன என்று கூறலாம். ஆதலின் மூன்று சின்னங்களையும் இவர்கள் ஏற்றதாலும், காஞ்சியையே தலைநகராகக் கொண்டமையால், இவர்கள் தமிழர்களாகவே வாழ்ந்தனர் என்பதை இக்காசுகள் சுட்டுகின்றன.
— டாக்டர் இரா.நாகசாமி