வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு-1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

வந்தவாசி : வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் சாய்ந்த நிலையில், பலகை சிற்பம் ஒன்று இருப்பதாக நல்லூர் அரசு பள்ளி ஆசிரியர் பாரதிராஜா அளித்த தகவலின்பேரில், திருவண்ணாமலை மரபுசார் அமைப்பை சேர்ந்த ராஜ் பன்னீர்செல்வம், உதயராஜா, சரவணன் ஆகியோர், கடந்த வாரம் அங்கு சென்று சிற்பத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர், இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் கண்ெடடுக்கப்பட்ட இந்த சிற்பம் சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க, வட்டமான முகத்தில் தடித்த உதடுகளுடன், இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்து ஐயனார் காட்சி தருகிறார். கழுத்தில் உருண்டையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பளி போன்ற மாலையும், இரு கைகளில் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார். இடையில் உதர பந்தமும், இடை ஆடையில் உறையுடன் கூடிய குறுவாள் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது.

வலது கையை வலது காலின் முட்டி மீது வைத்து கையை தொங்கவிட்டு, தனது ஆயுதமான செண்டை பற்றிக்கொண்டும், இடது கையை தொடை மீதும் வைத்துள்ளார். இடது காலின் அருகே ஐயனாரின் வாகனமான குதிரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இடது பக்கம் குத்து விளக்கு ஒன்றும் காணப்படுகிறது. இதன் தலைப்பகுதி லிங்கம் போன்ற அமைப்பில் உள்ளது. வடிவமைப்பு  மற்றும் அணிகலன்களை வைத்து பார்க்கையில் இந்த சிற்பம் 9ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்தியது என தெரிய வருகிறது.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பம் பல ஆண்டுகளாக மண்ணில் சாய்ந்தே கிடப்பதால் வெயிலிலும், மழையிலும் நனைந்து சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. தொன்மையான இந்த சிற்பத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>