நொய்யல் : வண்ணத்தாங்கரை கெளசிகா நதியாக உருமாறிய வரலாறு !

நொய்யல் : வண்ணத்தாங்கரை கெளசிகா நதியாக உருமாறிய வரலாறு !

கோவையில் மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலைகளில் பயணம் செய்வோர் ஆறோ, நீரோடையோ இல்லாத இடங்களில் ‘கெளசிகா நதி’ என்ற பெயர்ப் பலகையை கவனிப்பார்கள். கோவை மக்களே கேள்விப்படாத இந்த பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு உள்ளது. அதற்கும், நொய்யலுக்கும் அதிக சம்பந்தம் உள்ளது.

தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் “அவிநாசி தெக்கலூர் வண்ணத்தாங்கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்மாறி உருவங்கள் சில செமி ஃபாசில் வடிவில் கிடைக்கப் பெற்றன. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆண்டுகளுக்குள் பல்லாயிரக்கணக்கான மாடுகள் நொய்யல் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, அவை செமி ஃபாசிலாகியிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். செமி ஃபாசில்கள் கிடைத்த வண்ணத்தாங்கரைதான் கெளசிகா நதி.

நொய்யலை உருவாக்கும் வெள்ளியங்கிரி மலையின் வடக் கிழக்கே பல மலைகளைக் கடந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சென்றால் குருடி மலை வரும். கடல் மட்டத்திலிருந்து 473 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைக் காடுகளிலிருந்து தன்னாசிப் பள்ளம், தாளமடல் ஓடைப் பள்ளம் உள்ளிட்ட நீரோடைகள் உருவாகி, தென் கிழக்கே பாய்கின்றன. இவை இடிகரை, அத்திப்பாளையம், கோவில் பாளையம், வாகராயம் பாளையம், தெக்கலூர் வரை 52 கிலோ மீட்டர் பயணித்து, வண்ணத்தாங்கரை அருகேயுள்ள கணியன் பூண்டி கிராமத்தில், கிழக்கு நோக்கி வரும் ஆண்டிபாளையம் நொய்யலில் கலக்கிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இந்த ஆறு, தன்னாசி பள்ளம், தாளமடல் ஓடை, பெரும் பள்ளம், கரைப்பள்ளம், வண்ணத்தாங்கரை பள்ளம் என்று பல பெயர்களைப் பெற்றுள்ளது. நொய்யல் ஆறு காவிரியில் சேரும் வரை, மலை மற்றும் மேட்டுப் பகுதிகளிலிருந்து குதித்தும், பாய்ந்தும் வருகிறது. எனவே தான், நொய்யலின் நீரோடைகள் பள்ளம், பெரும் பள்ளம் என்று அழைக்கப்படுகின்றன.

52 கி.மீ. நீள துணை ஆறு :

நொய்யலுக்கு ஏராளமான பள்ளங்கள் இருந்தாலும், பெரும் பள்ளமாக விளங்கியது தான் இந்த 52 கிலோ மீட்டர் நீள நீரோடை தான். இதனால் பெரும் பள்ளம் என்று அழைக்கப்பட்ட இதை நொய்யலின் துணை ஆறு என்றும் கூறலாம். இந்த பெரும்பள்ளம் ஆதி காலத்தில் எந்த வேகத்தில் ஓடி வந்திருக்கும்? வெள்ளக் காலத்தில் நொய்யலுடன் இணையும் இடத்தில் நீரடித்து, நீர் விலக்கம் ஏற்படும் போது, அள்ளி வந்த பொருட்களை எப்படி கரை ஒதுக்கியிருக்கும் என்பதெல்லாம் கற்பனைக்கே எட்டாத விஷயங்கள்.

இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், இதன் தோற்றுவாயான குருடி மலையிலிருந்தோ, அதற்கு கீழிருந்தோ மனிதர்களையும், கால் நடைகளையும் பெரும் பள்ளம் கொண்டு வந்து, நொய்யல் கலக்கும் இடத்தில் சேர்த்திருக்க வேண்டும். அதுவே வண்ணத்தாங்கரையில் செமிஃபாசில் வடிவில் நமக்கு கிடைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

வண்ணத்தாங்கரையில் கிடைத்த மண்பாண்டங்கள், சில ஓடுகளில் காணப்பட்ட எழுத்துக்களை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு செய்த போது, அவை 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு புரதானமான நதிதான் இப்போது மறைந்த நதியாக, வெறும் அறிவிப்பு பலகை மட்டுமே வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்கு முன் இந்த நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

இப்போது, 52 கிலோமீட்டர் தொலைவும் வறண்டே காணப்படுகிறது. நதி காணாமல் போனதற்கு, பருவநிலை மாற்றம், மழை குறைவு உள்ளிட்ட காரணங்களைக் கூறலாம். ஆனால், உண்மையில் இதன் நீர்ப்பிடிப்புப் பகுதியிலேயே சேதம் தொடங்கி விடுகிறது.

குருடி மலைக்கு கிழக்கே விழும் முக்கிய நீரோடை வடக்கு நோக்கி திசை திருப்பப்பட்டு, அப்பகுதியில் வேளாண் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தன்னாசிப் பள்ளம், தாளமடல் ஓடை மலை மீதே வறண்டு விட்டது. பெரும்பள்ளத்தின் பாதையில் 12-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும், அதையொட்டி குளம், குட்டைகளும் உள்ளன. மழைக் காலங்களில் மட்டும் அவற்றில் தண்ணீர் நிரம்புகிறது.

பெரும் பள்ளத்துக்கு என்ன வாயிற்று :

ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன் வழி யோரக் கிராமங்களில் 20, 30 அடியில் தண்ணீர் கிடைத்த கிணறுகள், வற்றி விட்டன. பின்னர், 300 அடி, 400 அடியில் ஆழ் குழாய்க் கிணற்றில் தண்ணீர் வந்தது. தற்போது, 1,000 அடி, 1,300 அடியில் தான் தண்ணீர் கிடைக்கிறது. இந்த விபரீதத்தை உணர்ந்த சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு இயக்கம் என்று அமைப்பைத் தொடங்கினர். பின்னர் தான், பெரும் பள்ளத்துக்கு என்ன வாயிற்று என்று ஆராயத் தொடங்கினர்.

நதி உருவாகும் இடத்திலேயே ஆழ் குழாய் கிணறுகள் மூலம் தனியார், பொது நிறுவனங்கள் நீர் உறிஞ்சுவது தெரிந்தது. மேலும், தெக்கலூர், வண்ணத்தாங்கரை முதல் காமநாயக்கன்பாளையம் வரை வண்டல் மண்ணைத் தோண்டி, ஆயிரக்கணக்கான லாரிகளில் கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மண் எடுப்பதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, மண், மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டாலும், நீர் உறிஞ்சும் நிறுவனங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

எனினும், “ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரையாவது குளம், குட்டைகளிலும், புதிய தடுப்பணையிலும் தேக்க வேண்டும். அதற்காக, ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தன்னாசி பள்ளம், வண்ணத்தாங்கரை ஓடை, தாளமடல் ஓடை, பெரும்பள்ளம் என்றெல்லாம் அழைக்காமல், கெளசிகா நதி என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும். கெளமார மடாலயக் குறிப்புகளிலும், கலசைப் புராணத்திலும், கரியகாளியம்மன் கோயில் தல புராணத்திலும் கௌசிகா நதி என்ற பெயர் உள்ளது. எனவே, இந்தப் பெயரை மக்களிடமும், அரசிடமும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், 25 ஊராட்சிகள் சார்பில் அந்தந்தப் பகுதியில் பெரும் பள்ளம் சென்ற இடங்களில் கெளசிகா நதி என்று பெயர்ப் பலகையை வைத்துள்ளனர்.

பல்வேறு இயக்கங்கள், பொதுநல அமைப்புகள் ஆகியவை தொடர்ந்து நதி மீட்பு விழிப்புணர்வு பேரணிகளை நடத்துகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகள் கெளசிகா நதி குறித்து பேசுகின்றனர்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் :

இது குறித்து அத்திக்கடவு – கெளசிகா நதி மேம்பாட்டுச் சங்க செயலாளர் கூறும் போது, “அத்திக்கடவு- அவிநாசித் திட்டத்தைச் செயல்படுத்துமாறு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் வரும் கடைசி நீர் நிலை அக்ரகார சாமக்குளம்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் நீர் நிலைகள் நிரப்பப்பட்டு, உபரி நீர் அக்ரகார சாமக்குளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெளசிகா நதியில் விடப்படும் என அரசின் திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பவானியின் உபரி நீரைக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டம். இதில் உபரி நீர் கிடைத்து, அதை கெளசிகாவில் விடுவது சாத்தியமற்றது. எனவே, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திலேயே கெளசிகா நதியையும் இணைக்குமாறு வலியுறுத்துகிறோம். மேலும், குருடி மலை பகுதிகளில் பெருமழை வரும்போது, அதை தேக்கும் வகையில் உடனடியாக தடுப்பணைகள், நீர்நிலைகளை உருவாக்க முடியாது. எனவே, ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள், தடுப்பணைகளை இப்போதே சீரமைப்பதுடன், இந்த நதி தடத்தில் மேலும் 20 தடுப்பணைகளை கட்டுமாறு வலியுறுத்துகிறோம். இதன் மூலம் நொய்யலின் முக்கிய துணை நதி மீட்கப்படும். எனவே, இதில் இணைந்து போராட நொய்யல் நதி மீட்பு இயக்கங்கள், விவசாயிகள் முன்வர வேண்டும்” என்றார்.

கெளசிகா நதி மீட்பு தொடர்பாக, கோவை வேளாண் பொறியியல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், நதியின் பாதை, அது பயன் பெறும் கிராமங்கள், அமைக்க வேண்டிய தடுப்பணைகள் தொடர்பாக 6 மாதங்களுக்கு மேலாக கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ரூ.55 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயாரித்து, அரசுக்கும் அனுப்பியுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: