தஞ்சையில் வரலாற்றை வெளிப்படுத்தும் தேவார ஓவியம் !

தஞ்சையில் வரலாற்றை வெளிப்படுத்தும் தேவார ஓவியம் !

தஞ்சையில் வரலாற்றை வெளிப்படுத்தும் தேவார ஓவியம் !

தஞ்சையில் இராஜராஜீச்சரம் என்னும் பெருங்கோவிலைத் தோற்றுவித்த மாமன்னனின் வரலாற்றையும், அதற்கு ஆற்றிய தொண்டின் சிறப்பையும், இக்கோவிலின் சிறப்பையும், இராஜராஜன் படைத்த ஈடு இணையிலா ஓர் ஓவியத்தைப் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.

கல்வெட்டில் மூவர்:

இராஜராஜன், பெரும்பாலும் மறைந்து போன தேவாரத் திருப்பதிகங்களை தில்லையம்பதியில் கண்டெடுத்தான். ஆதலின், அவனுக்கு திருமுறை கண்ட சோழன் என்று பெயர் உண்டு. இராஜராஜன் இக்கோவிலைக் கட்டியபோது, இக்கோவிலில் தேவாரம் பாடிய மூவர் உருவங்களும், செப்புத் திருமேனிகளாக செய்து கொடுக்கப்பட்டன. இவர்களின் பெயர்கள், நம்பி ஆரூரன், திருநாவுக்கரையர், திருஞான சம்பந்தடிகள் என, கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. நம்பி ஆரூரரான சுந்தர மூர்த்தி நாயனார் உருவத்துடன், நங்கை பரவையின் உருவமும் செய்தளிக்கப்பட்டது. இதே கல்வெட்டில் தான் இராஜராஜனுடைய உருவமும், அவன் தேவி, லோக மகாதேவி உருவமும் செய்தளித்ததாக குறிப்புள்ளது. இராஜராஜனை பெரிய பெருமாள் என்று கல்வெட்டு கூறுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


திருப்பதியம் விண்ணப்பம் :

இதிலிருந்து இராஜராஜனுக்கு தேவார மூவரின் பால் இருந்த ஈடிலா பக்தியும், தேவாரப்பதிகங்களின் பால் இருந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன. இப்பதிகங்களுக்கு, “தேவாரம்’ என்ற பெயரும், இக்கல்வெட்டிலிருந்து தான் அறிகிறோம். மூவரிலும் சுந்தர மூர்த்தி நாயனாரிடம் இருந்த பக்தி, மிக உயர்ந்தது எனக் காண்கிறோம். கல்வெட்டில் அவர் பெயரே முதலில் கூறப்படுவதே இதற்கு எடுத்துக்காட்டு. இக்கோவிலில் தேவாரப் பதிகங்கள் பாட, ஐம்பதின்மர் திருப்பதிகம் விண்ணப்பம் செய்வோரை, இராஜராஜன் நியமித்ததும் இதற்குச் சான்று. இராஜராஜன், சுந்தரரின் சரிதத்தை, கருவறையைச் சுற்றி வரும் உள் சுற்றில், ஓவியமாகப் படைத்துள்ளான். வரலாற்றையே ஓவியமாக படைத்த முதல் தமிழ் மன்னன், இராஜராஜனே. ஒரு சுவர்ப் பகுதி முழுவதும், அடி முதல் மேல் முகடு வரை, பெரும் ஓவியமாக இது காட்சியளிக்கிறது. இராஜராஜனுக்கு சுந்தரர் மீது இருந்த ஈடுபாட்டுக்கு, இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. சுந்தரரின் வரலாற்றை வரையும் போது, இராஜராஜன் வியத்தகு முறையை கையாண்டுள்ளான். சுந்தரர் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு, அவற்றைச் சித்தரிக்க, சுந்தரரின் தேவாரப் பாடல்களையே எடுத்துக் கொண்டு, அவற்றில் வரும் செய்திகளையே ஓவியமாகப் படைத்துள்ளான்.

சுந்தரரின் சுயசரிதை:

சுந்தர மூர்த்தி நாயனார் தமது தேவாரப் பதிகத்தில் தம்மைப் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை கொடுப்பது வழக்கம். அவ்வகையில் தமது திருநாவலூர் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும், சிவபெருமான் தம்மை திருவெண்ணெய் நல்லூரில் வைத்து, ஆட் கொண்டார் எனப் பாடுகிறார். “ஓர் ஆவணத்தால் எம்பிரானார் என்னை வெண்ணை நல்லூரில் வைத்து ஆளுங் கொண்டார்’ என்று கூறுகிறார். சில இடங்களில் சிவபெருமானை, “பித்த’ என்று இவர் அழைப்பர். திருவெண்ணை நல்லூரில், சபை முன் ஆவணத்தைக் காட்டி, சிவபெருமானின் அடியானாகி, “பித்தா பிறை சூடி பெருமானே’ என்று பாடினார் அல்லவா! இந்த தடுத்தாட்கொண்ட காட்சியைத் தான் இராஜராஜன் முதல் காட்சியாக தன் ஓவியத்தில் படைத்துள்ளான்.

தடுத்தாண்ட காட்சி :

காட்சி, கீழ் பகுதியிலிருந்து தொடங்குகிறது. சுந்தரர், மணக்கோல மன்னர் போல் நிற்கிறார். திருமணம் காண வந்த பெரியோரெல்லாம் அமர்ந்திருக்கின்றனர். எதிரில் ஒரு கரத்தில் தாழங்குடையும், மறுகரத்தில் ஓலை ஆவணச் சுவடியையும் காட்டி, நீள் தாடியும், கூன்மேனியும், குறும்புப் பார்வையும் உடையராய் பொல்லாக் கிழவனாய் வந்து நிற்கிறார். இவன் என் அடிமை என்று கூறுவார் போல், கையில் உள்ள எழுத்தொடு கிடந்த ஓலையை காட்டுகிறார். அமர்ந்திருந்தோரில் சிலர் வியக்கின்றனர். சிலர் முகத்தே, “யார் இக்கிழவர்?’ எனக் கோபம் வெளிப்படுகிறது. சிலர் முகத்தே, ஏளன சிரிப்பு காணப்படுகிறது. சிலர் வேகமாக எழுவார் போல் காணப்படுகின்றனர். சிலர் புருவம் நெறித்து, கையை விரித்து, தம் கடுப்பைக் காட்டுகின்றனர். காட்சி வலப்புறம் தொடர்கிறது. கிழவர், ஓட்டமும் நடையுமாக வெண்ணெய் நல்லூருக்கு செல்கிறார். எல்லாரும் அவரைப் பின்பற்றிச் செல்கின்றனர். எதிரில் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள, “அருட் துறை’ கோவில் காணப்படுகிறது. “இது தான் நான் உறையும் இடம்’ என, பெருமான் நம்பி ஆரூரருக்கு காட்டுவார் போல், போகும் காட்சி. இங்கு தான், “பித்தா பிறை சூடி’ என்னும் பாடல் பாடியது. “அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே’ என்னும் ஈடிலாப்பதிகம். இந்த ஓவியத்தை 150 ஆண்டுகளுக்கு பின் வந்த சேக்கிழார் பெரு மான், இக்காட்சியை அப்படியே பாடியுள்ளார்.

ஆரூர் மூலட்டம் :

இரண்டாவது இதற்கு மேல் உள்ள பகுதியில் தொடங்குகிறது. அதில் முதலில் ஒரு கோவில் காணப்படுகிறது. அது சோழர் காலத்தில் கட்டப்பட்ட மத்திம பிரசாதம் என்னும் நடுத்தர விமானம். அதன் முன் மண்டபம் ஒன்று இணைந்து, அதில் ஆனந்த நடம்புரியும் ஆடவல்ல பெருமானின் உருவம் காணப்படுகிறது. அதன் முன், சுந்தரர் அமர்ந்து காணப்படுகிறார். இரு கரங்களையும் கூப்பி பாடுகிறார். அருகில் ஒரு குளம் காணப்படுகிறது. அதில், தாமரை மலர்கள் மலர்ந்து காணப்படுகின்றன. அருகில் ஒரு பெரியார் நிற்கிறார். பின்புறம் மரங்கள் காணப்படுகின்றன. முதலில் இது எவ்வூரில் நடைபெற்ற காட்சி என தோன்றும். சற்று ஆழ்ந்து ஆய்ந்த போது, உண்மை பளிச்சிட்டது. இக்காட்சியை இராஜராஜன் தேர்ந்தெடுத்தது சுந்தரரின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஊர் என்பது, அவர் பாடலில் இருந்து வெளிப்படுகிறது.

ஆற்றில் போட்டது குளத்தில் :

இது திருவாரூர் மூலட்டானத்து சுந்தரர் பாடிய போது அமைந்த காட்சி. கோவிலின் அருகில் ஒரு குளம் உள்ளதைக் கண்டோம். அக்குளத்தில் தாமரை மலர்களைக் கண்டோம். அதன் நடுவிலிருந்து நீரில் மூழ்கி வெளிப் போவார் போல, ஒருவர் முகம் மட்டும் காணப்படுகிறது. சுந்தரர் முதுகுன்றம் சென்ற போது, பரவைக்காகப் பொன் கொடுங்கள் என, பரமனைப் பாடினார். அங்கு பரவையின் அழகை வர்ணித்து அவள் ஆடுகின்றவள் என்பதையும் உரைத்துக் கேட்கிறார். “மின் செய் நுண்ணிடையாள் பரவையிவள், “மைந்தாருந் தடங்கண்ணாள் பரவை’ “படியாரும் இயலாள் பரவை’ “பந்தணையும் விரலாள் பரவை இவை தன் முகப்பே அருளாய்’ என்று கேட்க, பெருமான் பன்னீராயிரம் பொன் கொடுத்தார். இவை திருவாரூரில், பரவை வீட்டை அடைய வேண்டும் என்று யாசிக்க, இங்குள்ள மணி முத்தா நதியில் இட்டால், ஆரூரில் குளத்தில் அவை கிட்டும்’ என அருளினார். ஆதலின், இது ஆற்றில் இட்டு ஆரூரில் குளத்தில் எடுத்ததைச் சித்தரிக்கும் காட்சி. இதை சுந்தரர் தமது, “பொன்னும் பொருளும் தருவானை’ என்னும் பதிகத்தில் இறுதியில், “காரிகை காரணமாக ஆரூரை மறத்தற்கரியானை’ என்று பாடியுள்ளார். ஆரூர் கோவிலில் தாமரைப் பொய்கை இருந்தது என்பதையும் சுந்தரர் கூறியுள்ளார். அவர், “தாமரைப் பொய்கை ஆரூரான்’ என்று பாடுகிறார். மேலும், “செந்தன் பவளந்திகழும் சோலை இதுவோ திருவாரூர்’ என்றும், “செங்கால் நாரை சேரும் திருவாரூர்’ என்றும், “ஆயம்பேடை அடையும் சோலை ஆரூர்’ என்றும் சோலையைப் பாடுகிறார். இதைச் சித்தரிப்பது போல ஆரூர் கோவிலின் அருகில் அழகிய மரங்கள் நிறைந்த சோலைகளை ஓவியத்தில் காண்கிறோம். இவற்றில் செருந்திமரம் நிறைந்திருக்கும் என்று சுந்தரர் பாடுவதும் ஓவியத்தில் காணலாம். ஆதலின் தஞ்சை ஓவியத்தில் நாம் காண்பது சுந்தரரின் தேவாரப் பாடலே என்பது உறுதியாகிறது. தேவாரப் பாடலின்றேல் இக்காட்சி என்ன என அறிதல் அரிதே.

வெள்ளானைக் காட்சி :

தஞ்சையில், திருவாரூர் காட்சிக்குப் பிறகு சுந்தரர், வெள்ளை யானை மீது ஏறி, சேரமான் பெருமாள் குதிரை மீது ஏறி உடன் வர ஆகாய மார்க்கமாக விண்ணுலகு செல்லுதல் காட்சியாகத் தொடர்கிறது. ஓவியத்தில் சுந்தரர் ஏறிச் செல்லும் யானை மிகவும் அழகான யானை. அத்துடன் அதன் மத்தகம், கழுத்தும், காலும், உடலும், வாலும் எழிலான அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன் தந்தம், நான்கு தந்தங்களாக காட்சியளிக்கின்றன. சுந்தரர் மிகவும் கம்பீரமாக ஐராவதமான அந்த யானை மீதமர்ந்து செல்கிறார். முன்னே சேரமான் எழிலார் குதிரை மீதமர்ந்து செல்கிறார். இவர்கள் செல்வது ஆகாயம் எனக் குறிக்க காலின் கீழ் மேகங்கள் எல்லாம் சுழன்று சுழன்று செல்கின்றன. இவை கடல் நீரிலிருந்து உறிஞ்சிய மேகங்கள் எனக் காட்ட, கடல் வாழ் மீன்கள், நண்டுகள், ஆமைகள் மேகங்களின் ஊடே காட்டப்பட்டுள்ளன. அவர்களின் எதிரிலும், மேலும் தேவர்களும் கந்தர்வர்களும் அவர்களை எதிர் கொண்டு வரவேற்கின்றனர். இவைகள் அனைத்தும், எழில் சொட்ட சொட்ட இராஜராஜனின் கலை ரசனைக்கு எடுத்துக் காட்டாகவே திகழ்கின்றன. திருநொடித்தான் மலை என்ற பதியின் பதிகத்தில் பத்துப் பாடல்களிலும், பெருமாள் சுந்தரர் தமக்கு யானை அளித்ததைக் கூறுகிறார்.

“வானை “என்னை வந்து எதிர் கொண்டு மத்த யானை அருள் புரிந்தான்’மதித்து அமரரெல்லாம் வலஞ்செய்து என்னை ஏற வைக்க மத்த யானை அருள் புரிந்தான்’
“என்னை மாற்றி அமரரெல்லாம் சூழ அருள் புரிந்தான்’

கயிலையில் தேவார இசையும் ஆடலும் :

இந்தக் காட்சியிலும், இதன் மேல் செல்லும் காட்சியிலும், அமரர்களும், கந்தர்வர்களும் இசைக்கருவிகளை உடுக்கை, மத்தளம், திமிரி போன்ற வாத்தியங்களை வாசிக்க அப்சரப் பெண்கள் எல்லாம் ஒயிலாக ஆடி வரவேற்கின்றனர். இதன் மேல் குள்ளச்சிறுபூதம் ஒன்று குடமுழாவை பலமாக வாசிக்கிறது. மற்றொரு சிவ கணமான குள்ளப்பூதம் குழல் இசைக்கிறது. மேலே அமரர்கள் எல்லாம் சூழ்ந்து நிற்க, எட்டு வசுக்கள் வரிசையாக நிற்க மாயனும் நான் முகனும் நிற்க மலை உச்சியில் கயிலையங்கிரி அமர்ந்து இருக்கிறார் சிவபெருமான். உமை அருகிலே வீற்றிருக்கிறாள். எதிரில் கீழே சுந்தரரும், சேரமானும் அமர்ந்து அண்ணலை கரம் கூப்பி வணங்குகின்றனர். ஆண்கள் எல்லாம் அமர்ந்து கரத்திலே தாளம் கொண்டு கூட்டமாகப் பாடுகின்றனர். அது போல பெண்கள் அமர்ந்து கையில் தாளம் கொண்டு பாடுகின்றனர். இவர்கள் தேவாரம் இசைக்கின்றனரே என்று ஐயுற வேண்டியுள்ளது. தாடி உடையராய் மெலிந்த உடல் கொண்டு தவ முனிவர்கள் தோத்திரம் செய்து நிற்கின்றனர்.

தஞ்சை ஓவியம் தேவார விளக்கம் :

சுந்தரர் கயிலையங்கிரியை அடைந்ததைச் சித்தரிக்கும் இக்காட்சி. சுந்தரர் என்னெவெல்லாம் பாடியிருக்கிறாரோ அவை அனைத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. ஆதலின், இராஜராஜன் சுந்தரர் தேவாரத்தின் விளக்கமாக அவரது பாடல்களையே கொண்டு அவரது சரிதத்தை வரைந்துள்ளது வரலாற்றின் உச்சியாகும். ஆதலின் அவனை திருமுறையை கண்ட சோழன் (கண்முன் நிறுத்தியவன்) என்பதே பொருந்தும். சுந்தரருக்கும் ராஜராஜனுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வளவு விரிவான காட்சிகளை யாரும் பாடவில்லை. சேக்கிழார் இராஜராஜனுக்கு 150 ஆண்டுகளுக்குப் பின் வந்தவர். ஆதலின் அவர் தரும் செய்திகள் இந்த ஓவியத்தின் அடிப்படையில் அமைந்தவை. இராஜராஜனுக்கு கிடைத்த சான்று சுந்தரரின் பாடல்களேயன்றி வேறில்லை. ஆதலின் இதை, “தேவார ஓவியம் ‘என்பதே பொருந்தும்.

Tags: ,

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: