நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் “பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி” ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
பாடியோர் :
குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் – வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
நற்றிணைக் காட்டும் வாழ்க்கை :
நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவைச் சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூது” என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
எடுத்துக்காட்டுப் பாடல்கள் :
- என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே – நற்றிணை 28 – முதுகூற்றனார் - விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே! (பா.172)