தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மாயமான, ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி யின் உருவம் பொறித்த தங்கச் சிலைகளை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக இந்து சமய அற நிலையத்துறை முன்னாள் அமைச் சர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:
சோழ நாட்டை ஆண்ட ராஜராஜ சோழன் 9-ம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் பெருவுடையார் கோயில் என்ற சிவன் கோயிலை கட்டினார். இது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படுகிறது. திராவிட சிற்பக்கலையை பிரதிபலிக்கும் விதமாக இந்த கோயிலில் 80 டன் எடையுள்ள ஒரே கல்லை 190 அடி உயரத்தில் வைத்து கட்டியுள்ளனர்.
இந்தக் கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனுக்கும், அவரது மனைவிக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவர்களது உருவம் பொறித்த தங்கச் சிலைகள் இந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்தன. ராஜராஜ சோழனின் சிலை 74 செ.மீ. உயரமும், அவரது மனைவி லோகமகா தேவியின் சிலை 53 செ.மீ. உயரமும் உடையது. இந்த 2 சிலைகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தவை.
1900-ம் ஆண்டு வரை இந்த சிலைகள் கோயிலில் இருந்தன. அதன் பிறகு மாயமாகி உள்ளன. விலை மதிக்க முடியாத இந்த சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 1984-ல் இந்த கோயிலில் நடந்த விழாவில் அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரும், பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், காஞ்சி பெரியவரும் பங்கேற்றனர்.
அந்த விழாவில் தொல்லியல் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியன், தற்போது கோயிலில் இருக்கும் சிலைகள் போலியானவை என்றும், மாயமான தங்கச் சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து அந்த தங்கச் சிலைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர். நானும் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அரசியல் மாற்றங்களால் எந்த நடவடிக்கையும் இல்லை.
தனியார் அருங்காட்சியகத்தில்..
தற்போது இந்த சிலைகள் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளைக்கு சொந்தமான தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளன. இந்த சிலைகளை மீட்க திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் நாகசாமி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சமீபத்தில்கூட இது தொடர்பாக தமிழ் நாளிதழில் கடந்த 5.8.16 மற்றும் 6.8.16 ஆகிய நாட்களில் விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது. மேலும் இந்த சிலைகள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளது. நான் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மீண்டும் இந்த சிலை திருட்டு சம்பந்தமாக விசாரணை நடத்தி அந்த சிலைகளை மீட்க மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவியின் சிலைகளை மீட்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘விலை மதிக்க முடியாத பழங்கால சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டு கொண்டு வருவது தமிழக அரசின் கடமை. மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி இந்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும். எனவே, இந்த மனுவை பொதுநல வழக்காக கருத முடியாது’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
முதலாம் இராஜராஜ சோழன்!