முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், தொடர்ந்து தமிழ் வளர்க்கும் எதிர்கால சிந்தனையில் நான்காம் தமிழ் சங்கத்தை வள்ளல் பொன். பாண்டித்துரை தேவர் 1901-ல் நிறுவினார். மேலும், தமிழாய்வுக்கு உதவும் வகையில் பாண்டியன் நூலகமும் உருவாக்கினார். நூல்கள், ஓலைச்சுவடிகளை திரட்டி நூலக வளர்ச்சிக்கு அவர் உதவினார். தற்போதும் பழமை மாறாத இந்நூலகம் சிறந்த தமிழாய்வுக்கு பெரிதும் பயன்படுகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
நான்காம் தமிழ் சங்க செயலர் மாரியப்ப முரளி கூறியது: மதுரை செந்தமிழ் கல்லூரிக்குள் செயல்படும் இந்நூலகத்தில் நூலாசிரியர், பதிப்பு, வெளிவந்த ஆண்டு உள்ளிட்ட விவரங்களை கணினிப்படுத்தி எளிதில் எடுத்து படிக்கலாம். இங்குள்ள அரிய 40 புத்தகங்கள் அமெரிக்க தேசிய நூலகமான ‘லைப்ரரி ஆப் காங்கிரஸ்’ சார்பில் நுண்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கும்போது, இங்கிருந்து 60 ஓலைச்சுவடிகளும், செந்தமிழ் இதழ் தொகுப்புகளும் வழங்கப்பட்டன.
உலக தமிழராய்ச்சி நிறுவனமும் இங்குள்ள முக்கிய நூல்களைப் படியெடுத்துள்ளது. புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளியும் 2015-ல் இந்நூலக ஓலைச்சுவடிகளை நகல் எடுத்தது.
நூலகச் சிறப்பு:
இந்த நூலகத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் சங்க நூல்கள் மட்டும் 15 ஆயிரம். கல்லூரி நூல்கள் 17 ஆயிரம். எம்.பில், பி.எச்.டி ஆய்வேடுகள் 1,300, இதழ்கள்-45, குறுந்தகடுகள் 200, ஓலைச் சுவடிகள்-200. தமிழ் சங்கம் துவங்கிய நாள் முதல் நாட்டின் பல பகுதியில் இருந்து தொகுத்த அரிய ஏட்டுச் சுவடிகள் தமிழாராய்ச்சிக்கு உதவியாக இருந்தன. இதிகாசம், புராணம், பிரபந்தம், நிகண்டு, நீதி சாஸ்திரம், இலக்கியம், இலக்கணம், சைவம், மருத்துவம், இசை, பிரயோகம், ஸ்தோத்திரம், தத்துவம், கணிதம், ஆகமம், யோகா உட்பட பல்துறை சார்ந்த ஓலைச்சுவடிகளும் இங்குள்ளன.
தமிழ் கிரந்தம், தெலுங்கில் எழுதிய 200 ஓலைச்சுவடிகள் பாதுகாத்து, மின்னணுவாக்கம் செய்யப்பட்டுள்ளன. பழமையான பதினெண் சித்தர்கள் மகாமருத்துவம் பொருந்திய தேரையர் வைத்திய காவியம்-(1894), திருக்குறிச்சி விவேகம்-(1899) நன்னூல் காண்டியுரை-(1900), விதான மாலை-(1900), ஜானகிபரியை தமிழ் நாடகம்-(1901, ஞானாமிர்த மூலம், உரை (1903), புலவராற்றுப்படை- (1903), இனியவை நாற்பது (1903), நேமிநாதம் (1903), தமிழ் சொல்லகராதி (1905), மதுரை தமிழ் சங்க மான்மியம் (1907) என பல்வேறு பழமையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
கல்லூரி, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் பாண்டியன் நூலகத்துக்கு வருகின்றனர். தமிழகத்தில் அதிக மாணவர்கள் பயன்படுத்தும் நூலகமாகவே உள்ளது. உலகளவில் சிறந்த தமிழாய்வுக்கு உதவும் இந்நூலகத்தில் நூல் அறிமுகம், திறனாய்வு, மதிப்புரை, வாசிப்பு அனுபவ பகிர்வுகள் நடக்கின்றன. புதிய நூல், விருது பெற்ற நூல்கள் மாணவர், வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
ம.பொ.சி, முன்னாள் தமிழக அரசு வரலாற்றுக்குழு உறுப்பினர் ராமசாமி, ஜெர்மன் தென்னாசியக் கழக தாமோதரன், தமிழ் மொழி அகாதெமி தலைவர் ரா. காந்தி, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முத்துவேலு, தமிழ் இணையக் கல்விக் கழக உமாராஜ், மலேசிய பேராசிரியர் வீரலட்சுமி, ராமகிருஷ்ணாமடம் சுவாமி சுப்ஜானந்தா, கனடா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த கல்வியாளர்களும் இங்கு வந்து சென்றுள்ளனர். தொடர்ந்து வெளிநாட்டினர் வருகின்றனர்.
அரிய புத்தக பொக்கிஷமான இந்நூலகத்தை விரிவாக்கம் செய்து கருத்தரங்க கூடம் அமைக்கப்படும். இதற்கு மத்திய, மாநில நிதியை கோர உள்ளோம். 1996-ல் தமிழக அரசு ரூ.45 லட்சம் நிதி வழங்கியது. தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், உ.வே.சா நூலக அரிய நூல்களை கணனி மயமாக்குவதுபோல் பாண்டியன் நூலக அரிய நூல்களை அரசு கணினிமயமாக்க வேண்டும். ஆண்டுக்கு 5 புதிய புத்தகம், பழைய புத்தகங்களை புதுப்பிக்க அச்சகம் உருவாக்கப்படும். வாசிப்பை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.