ஆதி மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பிய போது அவன் வாழ்ந்த இடத்தில் சூழ்ந்திருந்த கற்பாறைகளில் கோடுகளால் வெளிப்படுத்தினான். அந்தக் கற்பாறைக் கோடுகளே ஆதி ஒவியமாக அறியப்படுகின்றன. புள்ளியில் தொடங்கிய கோடுகள் நீண்டு, வளைந்து, நெளிந்து, பல உருவக் கோடுகளாய்ப் பரவி அவர்களது வாழ்க்கை மகிழ்வுகளையும் ஆடல் பாடல்களையும் வேட்டைக்குப் பயன்படுத்திய கருவிகளையும் ஓவியக் கோடுகளாகத் தீட்டி இருக்கிறார்கள். இக்கோடுகளே வரலாற்றைப் பதிவு செய்யும் சாட்சியங்களாக விளங்குகின்றன.
உலக நாகரிகத்தின் முதன்மையானது என்று குறிப்பிடப்படும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் முதற்கொண்டு இன்றைய கணினிக் காலம் வரை கோடுகளே முதன்மை பெற்று வருகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களாக ஏராளமான சுடுமண் சிற்பங்கள் முத்திரைகளாகப் கிடைக்கப் பெற்றுள்ளன. கற்பனைத் திறத்திற்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். இரண்டு கொம்புகளே உடைய மனிதன், மீன், எருது, வரிக்கோடுகளையுடைய புலி, மரம், காண்டாமிருகம், எருமை, காளை, யானை, உடைந்த பானைகள், பிறப்பு பற்றிய முத்திரைகள் கிடைத்துள்ளன. இச்சின்னங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
உலகத்தின் பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஏடறியா வரலாற்றுக்கு முந்தையக் காலக் கோட்டோவியங்கள் தமிழகத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இக்கோடுகளில் ஆதித்தமிழர்களின் வாழ்நிலை சித்தரிக்கப்பட்டுள்ளது. குகை ஒவியங்கள் பெரும்பாலும் நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. தருமபுரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகின்றான். இவ்வோவியம் வெண்ணிறக் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. தென்னார்க்காடு மாவட்டம் கீழ்வாலை என்ற ஊரில் உள்ள இரட்டைப்பாறையில் செம்மண் வண்ணத்தினால் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்படுகிறார்கள். இவ்வோவியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகிறார்கள். சேத்தவாரை என்ற இடத்தில் எழில் மிக்க மான் உருவ ஓவியம் காணப்படுகின்றது.
ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் செம்மண் நிற ஓவியக் கோடுகளால் வரையப்பட்டுள்ளன. உள் பகுதிகளில் வெண்மை நிறம் பூசப்பட்டுள்ளன. இவ்வோவியங்களில் ஒரே ஒரு மனித உருவம் காணப்படுகின்றது. இவை கீழ்வாலை ஓவியத்தை ஒத்திருப்பதாகக் கலையியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் அருகில் உள்ள வேட்டைக்காரன் மலையில் உள்ள ஓவியங்களில் யானையும், குதிரையும், மனிதர்களும் காணப்படுகின்றன. ஆறு மனித உருவங்கள் கைகோர்த்து நடனமாடுவது போல் காணப்படுகின்றன. யானை, குதிரை ஆகிய விலங்குகளில் மனிதர்கள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன. இவையொத்த ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாசினாக்குடியில் காணப்படுகின்றன. மனிதர்கள் யானையில், புலியில், மானில், மயிலில் அமர்ந்த நிலையில் உள்ளனர். இவர்கள் கடவுளர்கள் என்று நம்பப்படுகின்றனர்.
இவ்வோவியங்கள் 2300 ஆண்டு வகையைச் சேர்ந்தவகையாகும். இவை போல் ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் போன்ற இடங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. கிருஷ்ணகிரி மல்ல சமுத்திரத்தில் உள்ள ஓவியங்கள் வெள்ளை நிறக் கோடுகளால் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு விலங்கு வியக்கும் வண்ணம் காணப்படுகின்றது. மனிதனின் தலையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பான தலைப்பாகை காணப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் தலைவன் ஏற்றுக் கொண்ட நிலையை ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக் குகை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்ணிறக் கோட்டோவியங்களாகவே காணப்படுகின்றன. இவ்வோவியங்களில் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் அரசனும், இளவரசனும் வீற்றிருக்க அருகில் ஆயுதம் ஏந்திய வீரர்களும் காணப்படுகிறார்கள். இவை சமுதாய வாழ்க்கையில் அரசு உருவான காலத்தைப் எதிரொளிப்பதாக இருக்கலாம். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் உள்ள குகையில் காணப்படும் கோடுகள் மிக மிகத் தொன்மையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இன்னும் ஏராளமான குகைகளில் நமது முன்னோர்களின் கலைப்படைப்புகள் மறைந்திருக்கலாம்.
ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நமது வரலாறு மேலும் விரிவடைய வாய்ப்புண்டு. இருக்கும் ஓவியங்களும் நம் மக்களால் பாதுகாக்கப்படாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ஓவியக் கோடுகளை நம் கலைஞர்கள் பல்வேறு ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், முத்திரைகள், உலோகத்திலும், சுடு மண்ணிலும் காணப்படுகின்றன. இவை கோட்டு வடிவங்களாகவும், புடைப்பு அச்சு முறையிலும் அமைந்ததாகவும் காணப்படுகின்றன. அரசர்களின் கொடி, அவர்கள் வணங்கிய கடவுளர்கள், அவரவர் சின்னங்கள் ஆகியவற்றையும் கோடுகளால் வரைந்திருக்கிறார்கள். செப்புத் தகடுகளில், ஓலைச் சுவடிகளில் ஓவியக் கோடுகளோடு எழுத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். வரலாற்றை, மருத்துவத்தை, புராணத்தை, இலக்கியங்களை ஓவியத்தோடு படைத்திருக்கிறார்கள். காதல் மங்கையரின் மார்பகங்களிலும், முதுகுகளிலும், செம்பஞ்சுக் குழவையால் ஓவியம் வரைந்ததைத் தொய்யில் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பெண்கள் தங்கள் வீட்டின் முன்வாசலில் சுவரில், தெருக்களில் கோலங்கள் போட்டுள்ளனர். தம் கற்பனைகளில் மிதந்து வரும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பூக்கள் என்று தம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் ஆயிரம் ஆயிரம் கோடுகளால் வெளிப்படுத்தியுள்ளனர். திரைச் சிலைகளில் முதலில் கோடுகள் போட்டு அதன் தன்மை குலையாமல் வண்ணங்கள் தீட்டும் கலையை நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.
“ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்குஓவிய விதானத் துரைபெறு நித்திலத்துமாலை தாமம் வளையுடன் நாற்றி”
என்ற சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதை வரிகளால் அறியலாம். தோலைப் பதப்படுத்தி அதில் ஓவியக் கோடுகளை வரைந்து உள்பகுதியில் வண்ணங்கள் குழைத்துத் தீட்டி தோல்பாவை மூலம் மக்களுக்குக் “கதை சொல்லிகளாக” வாழ்ந்து கலையை வளர்த்திருக்கிறார்கள்.
”இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மாமரப்பாவை சென்று வந்தற்று”
என்ற திருக்குறள் அடிகளில் மரப்பாவை பயிற்று வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “கை புனைந்து இயற்றாக் கவின்பெறுவனப்பு” என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. “கண்ணுள் வினைஞர்” என்று ஓவியர்களை பழம்பெரும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஓவியத்தை “ஓவம்” என்கிறார்கள். மணிமேகலையில் “ஓவியச் செந்நூல் உரைநூல் கிடைக்கையும்” என்று வருகிறது. நடுகல் வழிபாடு என்பது ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை நீண்ட வரலாறு கொண்டதாகும். கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரையில் ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பல்லவர் காலமாகும். போரில் வீர மரணம் அடைந்தோரின் கற்களின் மேற்புறத்தில் செதுக்குச் சிற்பமாகவும், கோட்டுச் சிற்பமாகவும் வடித்துள்ளார்கள். வீரர்களின் பெயர் மற்றும் நிகழ்வுகளை எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள். பின்னாளில் இதுவே குல தெய்வ வழிபாடாகவும் மாற்றம் பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டம் குடந்தை அருகே கி.பி. 884 திரும்புறம்பியப் போரில் மாண்ட போர் வீரர்களின் நினைவாகப் “பள்ளிப் படை வீடு” என்ற நடுகல் கோவில் உள்ளது. நடுகல் செதுக்குச் சிற்பங்கள் இலக்கணங்களை மீறிப் கோட்டோவியங்கள் சிறப்பாக்கப்பட்டுப் பக்க வாட்டில் உருவங்கள் அகழ் ஓவியக் கோடுகளாகவும் வெளிப்படுகின்றன.
நடுகற்களே முப்பரிமாண வடிவங்களுக்கு முன்னோடி எனலாம். கோடுகள், ஓவியங்கள், செப்புத் தகடுகள், அச்சுகள், துணிகள், கற்கள், உடல்கள், வீட்டு வாசல்கள் என்று பல்வேறு தளங்களில் இருந்த கோடுகளும் ஓவியங்களும் பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலம் என்று காலங்கள் தோறும் விரிவுபடுத்தப்பட்டு வந்தன. சோழர்கால ஓவியங்கள் கி.பி. ஆயிரத்தைச் சேர்ந்தவை. இவ்வோவியங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் பாதுகாப்பாக வரையப் பட்டுள்ளன. இவற்றின் ஓவியக் கலையின் மேன்மை தெரிவதோடு அஜந்தா ஓவியத்தின் சாயலோடு இவை ஒத்துப் போகின்றன. இவை இன்னும் அழியாமல் இருப்பதற்கு FRESCO என்னும் சுவர் ஓவிய முறையில் வரையப்பட்டதும் ஒரு காரணமாகும். ராசராச சோழன், கருவூரார், நடன மகளிர், வீரர்கள், நடனமாடும் இசைக்கலைஞர்கள், சிவபூத கணங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இவையெல்லாம் கவர்ச்சியான பல வண்ணங்களோடு கோடுகளால் சிறப்பான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
ஒன்பதாம் நூற்றாண்டு ஓவியங்களாகப் பாண்டியர் காலச் சித்தன்னவாசல் ஓவியங்கள் திகழ்கின்றன. பனைமலை, காஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்களையும் இவற்றோடு குறிப்பிட வேண்டும். சித்தன்னவாசல் ஓவியங்களில் அரசர், அரசி, மீன்கள், வாத்துகள், எருமைகள், நிறைந்த தாமரைக்குளம் ஆகியவை பாண்டியர் கால ஓவியக் கலைஞர்களின் கைத் திறமைக்குச் சான்றாக உள்ளன.17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர் கால ஓவியங்கள் தமிழகம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. காஞ்சி திருப்பருத்திக்குன்றம், திருவாரூர் கோவில், சிதம்பரம் கோவில், குடந்தை பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, தஞ்சை, மதுரை, அழகர்கோவில், திருவலஞ்சுழி என எல்லாக் கோவில்களிலும் ஓவியங்கள் நிறைந்து காணப்பட்டன. திருவலஞ்சுழி, பட்டீசுவரம், திருமங்கலக்குடி ஆகிய இடங்களிலுள்ள ஓவியங்களைச் குடமுழுக்கு என்ற பெயரால் அழித்து விட்டார்கள். திருவாரூர் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓவியங்கள் கேட்பாரற்று வவ்வால் எச்சத்தாலும் மழையின் ஒழுகலாலும் அழிந்து கொண்டிருக்கின்றன. திருவிடை மருதூர்க் கோவிலில் வரைந்திருந்த ஓவியங்கள் ஏராளம். “சித்திரபிரகாரம்” என்ற சுற்றுப் பாதையில் தற்போது எல்லாம் மறைக்கப்பட்டுத் தமிழன் காண்பதற்கும் கற்பதற்கும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள். தமிழனுக்கு என்று இருந்த ஓவியக் கலை வரலாற்றை எழுதுவதை விட, அதைக் காப்பதற்கான முயற்சிதான் இன்று மிக இன்றியமையாத் தேவையாகும்.