லெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி!

லெப்டினன் கேணல் திலிபன் உண்ணாவிரத மேடையின் அருகே உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்!

“புரட்சி” என்கிற வார்த்தைக்குப் அடுத்து நமது நாட்டில் மதிப்பு இழந்துவிட்ட ஒரு வார்த்தையாக இருப்பது உண்ணாவிரதப் போராட்டம். அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல், மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக நம்மால் தேசப் பிதா என்றழைக்கப்படும் காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது. காந்தி செய்து கொடுத்த ஆயுதத்தை பலர் தனது கொள்கைகளுக்காக பயன்படுத்தினர். அனால் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தோர் என்பது சிலரே. அவற்றில் மிகவும் முக்கியமானவர் திலீபன் என்று அழைக்கப்படும் பார்த்திபன் இராசையா. இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் இடத்தைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை செல்வாவின் மிதவாதப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீரோ, எச்சிலோ விழுங்கப் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 -1987 அன்று இறந்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள் :

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறையின் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

லெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி!

முதல் நாள் – ஈழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45-க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார். உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது. வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, யாசர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப்பட்டது. தொடர்ந்து கவிதைகள், உண்ணாவிரத விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து திலீபனை சந்தித்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30-க்கு உறங்கினார் .

இரண்டாம் நாள் – அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட திலீபன் சிறுநீர் மட்டும் கழித்து விட்டு முகம் கழுவி தலைவாரிக் கொண்டார். அனைத்து செய்தித் தாள்களையும் படித்து முடித்தார். இளைஞர்கள் பலர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்கள். தான் பேச விரும்புவதாக திலீபன் கூற, அவரது நண்பர்கள் சக்தி விரையமாகிவிடும் என்று நண்பர்கள் மறுத்தார்கள் . இரண்டே நிமிடம் என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிட உரையாற்றினார். அன்று இரவும் பிரபாகரன் வந்து திலீபனைப் பார்த்தார். பனிரெண்டு மணிக்கு உறங்கச் சென்றார் திலீபன்.

மூன்றாம் நாள் – காலையில் எழும் போதே திலீபனின் உதடுகள் தண்ணீர் அருந்தாதால் வெடித்து இருந்தது. கண்கள் சற்று உள்ளே போயிருந்தன. மிகவும் சோர்வாக இருந்தார். சிறுநீர் கழிக்கச் சென்ற திலீபன் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார். காலை ஒன்பது மணி முதல் இளைஞர்கள் வெள்ளை உடையில் வந்து குவிய ஆரம்பித்தார்கள். கண்ணீர் கவிதைகளும் வீர உரைகளும் முழங்கிக் கொண்டிருந்தன. அன்று பெருமழை பெய்தது. அன்று இரவு அவரது உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அனால் திலீபன் மறுத்துவிட்டார். மிகவும் சிரமத்திற்குள்ளான திலீபன் உறங்கும் போது மணி ஒன்று .

நான்காம் நாள் – அதிகாலை ஐந்து மணிக்கே திலீபன் எழுந்துவிட்டார் . சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவரால் நடக்க முடியவில்லை என்பதால் அவரது படுக்கையிலேயே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. பிறகு அவரை மெதுவாக மேடைக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார்கள். திலீபன் வயிற்றை பிடித்துக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். சிறிது சிறுநீர் வெளியேறியது. இந்தியத் துணைத் தூதுவர் கென் பேச்சு வார்த்தைக்காக வந்தார். அவரை ஆண்டன் பாலசிங்கமும் மாத்தையாவும் சந்தித்துப் பேசினார். சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார வந்து திலீபனைச் சந்தித்தார். சோர்வில் விரைவாகவே திலீபன் உறங்கி விட்டார்.

ஐந்தாம் நாள் – திலீபனால் இன்று எழவே முடியவில்லை. உடல் பயங்கரமாக வேர்த்துக் கொட்டியது. ”சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்” என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்திய சமாதானப் படையினரின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். மக்கள் அவர் மீது கோபமாக இருந்தனர். திலீபனைச் சந்தித்து விட்டு மேலிடத்தில் பேசுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆறாவது நாள் – திலீபனால் இன்று பேச முடியவில்லை. வழக்கம் போல் மக்களும் பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிரிகேடர் ராகவன், கமாண்டர் ஜெயக்குமார், கடற்படை தளபதி அபயசுந்தர் ஆகியோரிடம் இந்திய அரசு பேசியது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஏழாவது நாள் – இந்திய பத்திரிக்கைள் வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள் . தனது இருண்டு போயிருந்த விழிகளைத் திறந்து பார்த்தார் . அவர்கள் கேட்கும் கேள்வி திலீபனின் காதில் விழவில்லை.அவர்கள் சத்தமாக பேச வேண்டி இருந்தது. திலீபனின் குரலே மாறி கரகரவென இருந்தது. “எந்த முடிவும். நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும். இல்லையெண்டால். நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் கைவிடமாட்டன்.” என்றார்.

எட்டாவது நாள் – அதிக மக்கள் வந்ததால் அவர்களின் நிழலுக்காக கொட்டகைகள் போட ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் தமிழ் மக்களிடம் அதிக புகழ் பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் போராளி மதன் திலீபனைப் போல் இரண்டு நாட்களில் தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடங்கப் போவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் பரவியதை விட அதி வேகமாக அஹிம்சைப் போராட்டம் தீயெனப் பரவியது. திலீபன் எல்லோரின் ஆதர்ச சக்தியாக இருந்தார். அன்று திலீபனால் பேச முடியவில்லை, நடக்க முடியவில்லை, எழ முடியவில்லை ஆனால் வெகு சுலபத்தில் பல்லாயிரம் பேரை அஹிம்சை வழிக்குத் திருப்பி இருந்தார். அனைத்து யாழ் அரசு அலுவலகங்களையும் மக்கள் முற்றுகையிட்டு மறியல் செய்தனர். அனைத்துமே அமைதி வழிப் போராட்டம். மேடையில் பேசமுடியாத மக்கள் எல்லாம் எழுத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். இதற்காக ஒரு பத்து பேர் கை வலிக்க வலிக்க எழுதிக் கொண்டிருந்தார்கள். எழுதிய கருத்துக்கள் எல்லாம் அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்பட்டது.

ஒன்பதாவது நாள் – திலீபனின் உடலில் மெல்லிய உதறல் வர ஆரம்பித்திருந்தது. உதடுகள் பாளம் பாளமாக வெடித்து இருந்தன. காலையிலேயே 5,000 மக்கள் வந்திருந்தார்கள். ஆனால் திலீபன் கண்ணைத் திறக்கவில்லை. இந்தியப் படை தென் பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங் இலங்கை வந்து பிரபாகரனைச் சந்தித்தார். ஒரு மணி நேர பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. பகல் ஒரு மணிக்கு இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் இந்தியத் தூதுவர் ஜெ.என். திக்சித், திபேந்தர் சிங், இந்திய தூதரகப் பாதுகாப்பு அதிகாரி குப்தா ஆகியோர் இந்தியாவின் சார்பிலும் விடுதலை புலிகளின் சார்பில் அவ்வியகத்தின் தலைவர் பிரபாகரன், தளபதி மாத்தையா, அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம், வழக்கறிஞர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

பத்தாவது நாள் – திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனிதனுக்கு சராசரியாக இருக்க வேண்டிய நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 72 . திலீபனின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 52. சாதாரண ரத்த அழுத்த அளவு (120/80) இருக்க வேண்டும். ஆனால் திலீபனின் நாடித் துடிப்பு (80/50). தனது சக்தி முழுவதையும் திரட்டி திலீபன் இரண்டு வரி பேசினார் “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன் ”. மக்களின் போராட்டம் அதிகரித்தது பல்வேறு ஊர்களில் மக்கள் அடையாள உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்கள். 6,000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர்.

பதினோராவது நாள் – உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். அனிச்சையாக அவரது உடல் அசைவதன் மூலமே அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது. அவர் பாதி கோமா நிலையில் இருந்தார். பெரிய கட்டில் ஒன்றை கொண்டு வந்து அதில் அவரை மாற்றினார்கள். அப்போது தான் அவர் படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருந்ததை பார்த்தார்கள். திலீபனுக்கு வேறு உடை மாற்றினார்கள். திலீபனுக்கு மிகவும் பிடித்த “ஓ மரணித்த வீரனே! – உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா” என்கிற பாடலைப் பாடினார்கள். அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே கோமாவில் விழுந்தார்.

அந்த இரவு அழுது கொண்டே விடிந்தது. தொடர்ந்து 265 மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58 க்கு வீர மரணம் அடைந்தான். அதிகாரத்துவம் அவனை சாக விட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது.

திலீபனின் இறுதி உரையிலிருந்து…

என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சி.. யில் மிதக்கின்றது.

நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டு விட்டதை என் கண்கள் பார்க்கின்றன.

நான் திருப்தி அடைகிறேன்.

இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.

ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

நான் நேற்றும் கூறிவிட்டேன். எனது இறுதி ஆசை இதுதான்.

நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.

…எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது.

இதில் பிழைகள் இருக்கலாம்.

இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: