தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல்!

தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல்!

தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல்!

வரலாறு காணாத வகையில், காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு. உபரி நீரைச் சேமிக்க வழியில்லை. பெரும் பகுதி வெள்ள நீர் கொள்ளிடத்தில் பாய்ந்து, வீணாக கடலில் கலப்பது மட்டுமல்ல, பற்பல பேரழிவுகளையும் ஏற்படுத்தி, பெரும் துன்பம் விளைவிக்கிறது. வீணாக கடலில் கலக்கும் வெள்ள நீரில், ஒரு பகுதியையாவது சேமிக்க, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

ஆறுகளில் தடுப்பணை கட்டி, நீரை தேக்கினால், பல நன்மைகள் விளையும். வீணாகக் கடலில் கலக்கும் நீர் ஒரு பகுதியாவது சேமிக்கப்படும்; அவ்வட்டாரத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் உயரும்; குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். தடுப்பணை கால்வாய் மூலம் பாசன வசதி கிடைக்கும்; தடுப்பணை கால்வாய் மூலம் வட்டார ஏரி, குளங்களை நீர் பெறச் செய்யலாம். எனவே, தடுப்பணைகளை கட்டுவது, மிக மிக அவசியமாகும். தடுப்பணையின் பயனை நன்கு உணர்ந்த கொங்கு மண்டல மக்கள், எட்டு ஆறுகளில் மொத்தம், 90 தடுப்பணைகள் கட்டி பயன் பெற்றதை, கொங்கு ஆவணங்களான, ராமபத்திரன் பட்டயம், தென்கரை நாட்டுப் பட்டயம் ஆகியவை கூறுகின்றன.

நொய்யலாற்றில்-32 தடுப்பணைகள், அமராவதியாற்றில்-20, மீன்கொல்லியாற்றில்-18, நல்ல மங்கையாற்றில்-6, பவானியாற்றில்-4, உப்பாற்றில்-4, நன்காஞ்சியாற்றில்-4, குடகனாற்றில்-2 தடுப்பணைகளும் கட்டப்பட்டன.

இவற்றில் பல, இன்னும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, பெருவெள்ளப் பெருக்கால் கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் உட்பட, பல இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டதைக் கண்டோம். கரைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. நம் முன்னோர் காடு அழித்து நாடாக்கி, ஊர் உண்டாக்கி, மக்களைக் குடியமர்த்து முன், முதலில் நீர்நிலைகளையே ஏற்படுத்தினர்.

‘ஆறு இல்வழி ஆறு தோற்றுவித்தும், குளம் இல்வழி குளம் தொடுவித்தும், முயல் பாய்இடம் கயல் பாயப்பண்ணியும்’ செயல் புரிந்தனர்.

கல்வெட்டுகள் கரைப் பாதுகாப்பு தொடர்பாக சில செய்திகள் கூறுகின்றன. கரைகளைச், ‘சிறை’ என்றனர். நீரைக் கட்டுக்குள் அடக்கிச் சிறைப் படுத்துவதால், கரைகளை, ‘சிறை’ என்றனர்.

‘நட்டன் ஏரியும், நட்டன் சிறையும், நட்டன் வாயும், நட்டன் காலும், என் மக்கமக்கள் காப்போமாக’- என்பது ஒரு கல்வெட்டு.

‘வாய் – மதகு, கால் – வாய்க்கால், வாயிலிருந்து வரும் கால் வாய்க்கால்’ கரைகளைக் கட்டும் போது, கரையின் நடுவே நிறைய மணல் போட்டுக் கட்டினர். ‘நான் மணல் ஒழுக்கிக் கட்டிய நல்ல பிறப்பான் ஏரிக்கரை’, ‘நான் மணலிட்டுக் கட்டிய தாழி ஏரி’- என்கிறது ஒரு கல்வெட்டுத் தொடர். இன்றும் கரை அடைப்பை நீக்க, மணல் மூட்டைகளைப் பயன்படுத்துவதே வழக்கமாக உள்ளது. மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து, மழை ஆகியவற்றால், கரையின் அளவு குறையலாம்.

ஓர் ஊரார் கோவில் பண்டாரத்தில் கடன் பெற்று, தங்கள் ஊர் ஆறு, ஏரிக் கரைகளை, ‘உசர அட்டப் பெறவும், அகல அட்டப் பெறவும் கரை தான் நீள அட்டப் பெறுவதாகவும்’ செய்தனர். அதனால் நீர், ‘வேண்டும் அளவு கோக்கப்’ பெற்றதாம். கரைகள் பாதுகாப்பிற்கு, நீர் நிலைகள் தொடர்ந்து துார் வாரி, அதன் ஆழம் குறையாமல் பாதுகாக்க வேண்டும். துார் வாருதலை, ‘குழி குத்துதல்’ என்று கல்வெட்டு கூறுகிறது.

ஊர் மக்கள் அனைவரும், அவரவருக்கு இட்ட அளவு, குழி குத்துதலில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஒரு கல்வெட்டு, ’12 வயதிற்கு மேல், 80 வயதிற்கு உட்பட்டோர் அனைவரும், குழி குத்துதலில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டளையிடுகிறது. கோவிலுக்குக் கொடை கொடுப்பது போல், கரைகளைப் பராமரிப்பதற்கும் தனியாகக் கொடை கொடுத்தனர். முதல் வாடாக் கடமையாக மூலப் பொருள் வைத்து, அதில் வரும் வட்டியைக் கொண்டே கரை பாதுகாக்கப்பட்டது. அதனால், எந்த இடையூறும் இல்லாமல், தொடர்ந்து கரை பராமரிப்பு நடைபெற்றது. கரிகால் சோழன் கல்லணை கட்டும் முன், காவிரியில் கரை கட்டியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பொன்னிக் கரை கண்ட பூபதி’ என்று கரிகாலன் பாராட்டப் படுகிறான். கல்வெட்டுகள், காவிரிக் கரையைக், ‘கரிகாலக் கரை’ என்றே கூறுகின்றன. கரைகளை இரவும், பகலும் உலாவிப் பார்த்து, குறை கண்டால் தெரிவிக்க ஆட்களை நியமித்தனர். கரை பாதுகாப்பிற்குப் பொருள் இல்லாத இடங்களில், மீன்பிடி குத்தகை வருவாய் கரை பராமரிப்புக்கு பயன்படுத்தப்பட்டது. கரைகட்குக் குலை என்ற பெயரும் உண்டு.

கரைகட்குச் சேதம் விளைவிப்பது, மிகப் பெரும் பாவமாகக் கருதப்பட்டது. கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொல்வது பெரும் பாவம் என்று கல்வெட்டு கூறுவது போல, ஏதேனும் தவறு செய்தால், ‘காவிரி குலை குத்தினான் பாவம் பெறுவான்’ என்று கல்வெட்டு கூறுகிறது. கம்பர் பாடிய தனிப்பாடல் ஒன்றில், ஆறுகளில் கரை உடைவது, பெண்கள் கற்பு தவறுவது போன்றது என்கிறார். ‘நீதி ஒழுக்கம்’ எனும் கொங்கு நாட்டு நீதி நுால், ‘அடைத்த குளத்தை முறிக்காதே, குளத்தில் கல் விட்டு எறியாதே’ என்று கூறுகிறது. கரைகளைப் பாதுகாத்தது போல, ஆற்றில் துாய்மையையும் பாதுகாத்தனர். பவானியில் காவிரிக் கரையில் உள்ள கல்வெட்டு, ‘காவிரியில் குளிப்பவர் ஆடை துவைக்கக் கூடாது, பாத்திரம் கழுவக் கூடாது, ஆடு, மாடு கழுவக் கூடாது’ என்று எச்சரிக்கை செய்கிறது; மீறினால் அபராதம் உண்டு. நாமும் நம் முன்னோர் வழி நீர்நிலைக் கரைகளைப் பாதுகாப்போம்.

  • புலவர் செ.ராசு
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: