தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம்,சென்னிமலை-யிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி யிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்திலும், காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இவ்வூர் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்க காலம் (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும். கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.
இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் செ.இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள், முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன.
தொன்மையான தொழில் நகரம்:
கொடுமணல் சங்க இலக்கியத்தில் “கொடுமணம்” என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கு, திறமை மிக்க கைவினைக் கலைஞர் இரும்பை சக்தி வாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு, உருக்கி எஃகாக மாற்றினர். அந்த உலோகம் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
அதுபோலவே, கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்பு கொண்டிருந்தது.
கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு மற்றும் பலவகை பாசி மணிகள் எகிப்து, உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. கொடுமணலுக்கும், மேற்குக் கடற்கரையில் முசிறி துறைமுகத்திற்கும் (இன்று கேரளத்தில் “பட்டணம்” என்று அழைக்கப்படும் நகர்) இடையே வணிக வழித் தொடர்பு இருந்தது. ஏற்றுமதிப் பொருள்கள் முசிறிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, சிப்பி, கிளிஞ்சல் அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன.
உரோமைப் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது.
கிமு 500க்கு முற்பட்ட தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.