மன்னர் தலையும், செழியன் பெயரும் கொண்ட மேலும் ஒரு கொற்கை பாண்டியர் நாணயம் !

மன்னர் தலையும், செழியன் பெயரும் கொண்ட 5.6 கிராம் எடை உள்ள கொற்கை பாண்டியர் நாணயத்தின் முன்புறம், பின்புறம்.

மன்னர் தலையும், செழியன் பெயரும் கொண்ட 5.6 கிராம் எடை உள்ள கொற்கை பாண்டியர் நாணயத்தின் முன்புறம், பின்புறம்.

மன்னர் தலையும், செழியன் பெயரும் கொண்ட மேலும் ஒரு கொற்கை பாண்டியர் நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்துள்ளார். சமீபத்தில், தொன்மையான தமிழக நாணயங்களைச் சேகரிக்கும் நண்பர் ஒருவர், ஒரு சிறிய வடிவிலான செம்பு நாணயத்தைக் கொடுத்து, அதை ஆய்வு செய்யும்படி கூறினார். அந்த நாணயம், நீண்ட காலம் நீரில் கிடந்தமையால், ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, எளிதில் ஆய்வு செய்ய முடியாத நிலையில் இருந்தது. அவர் அனுமதியுடன், அந்த நாணயத்தை, ரசாயன கலவைகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்தேன். சுத்தம் செய்த பின், நாணயத்தின் முன்புறத்தில், இடதுபுறம் நோக்கி, மன்னரின் தலை அச்சாகி இருந்ததைக் கண்டேன்.மன்னரின் மூக்கு மிகக் கூர்மையான அமைப்பில் இருந்தது. அழகிய மீசையும், தாடியும் இருப்பது போல் தோற்றம் அளித்தது. தலையில் அழகிய கிரீடம் உள்ளது. மன்னரின் முகத்திற்கு எதிரே, நாணயத்தின் இடதுபக்க விளிம்பின் அருகே, கீழிருந்து மேல்நோக்கி, ‘தமிழ்-பிராமி’ எழுத்து முறையில், நான்கு எழுத்துக்கள் உள்ளன. முதலில், ‘செ’, அடுத்ததாக ‘ழி’, மூன்றாவது ‘ய’, நான்காவதாக, ‘ன்’ என்ற எழுத்துக்கள் இருந்தன. இதை, ‘செழியன்’ என, படிக்க முடிந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


முதல் எழுத்தின் தலைப்பகுதி, சரியாக அச்சாகவில்லை. அதேபோல், ‘ழி’ எழுத்தும் சற்று தெளிவில்லாமல் உள்ளது. ‘ய’ மற்றும் ‘ன்’ எழுத்துக்கள் தெளிவாக உள்ளன. நாணயத்தின் பின்புற மத்தியில், தேய்ந்த நிலையில் இரண்டு மீன் சின்னங்கள் இருப்பதைக் கண்டேன். மீன்களைச் சுற்றி இடப்பக்கத்திலிருந்து, ‘செழியன்’ என்ற பெயர், ‘தமிழ்-பிராமி’ எழுத்து முறையில் அச்சாகியிருந்தன. நுட்பமாக ஆய்வு செய்தால் தான், இந்த எழுத்துக்களை எளிதில் அறிய முடியும். நான் ஏற்கனவே மன்னர் தலையுடன், ‘செழியன்’ பெயர் பொறித்த இரண்டு நாணயங்கள் குறித்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறேன். சங்ககால மதுரையை தலைநகராகக் கொண்ட பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் பின்புறத்தில், கோட்டு வடிவுடைய மீன் சின்னம் இருப்பதைப் பற்றியும், ‘செழியன்’ பெயர் பொறித்த சில நாணயங்களின் பின்புறம் இரட்டை மீன்கள் இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். பின்புறம் காணப்படும் இரண்டு மீன் சின்னம், கொற்கைப் பாண்டியரின் தனி ஆட்சியை உறுதிப்படுத்துகிறது என்று கூறியுள்ளேன். அசோக பேரரசர், தன் கிர்னார் கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, சேர, தாம்பரபருணி என்ற நாடுகள், தன் நாட்டின் தென் எல்லைக்கப்பால் இருந்ததாகக் கூறியுள்ளார். நான், சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட, ‘செழியன்’ நாணயங்களை வைத்து ஆய்வு செய்தபோது, தாமிரபருணி நாடு, தென் தமிழகத்தில் தான் இருந்தது. அதன் தலைநகர், ‘கொற்கை’ என்று கூறியுள்ளேன். இப்போது மேலும், மேலும் சான்றுகள் கிடைத்துக் கொண்டிருப்பது, தமிழக தொன்மை வரலாற்றைப் பற்றிய ஆய்வுக்கு அதிகளவு உதவும் என்று நம்புகிறேன்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: