கீழவெண்மணி படுகொலை – நாயுடுவை ஒருவரியேனும் கண்டிக்காத பெரியாரின் நீண்ட அறிக்கை!

கீழவெண்மணி படுகொலை - நாயுடுவை ஒருவரியேனும் கண்டிக்காத பெரியாரின் நீண்ட அறிக்கை!

கீழவெண்மணி படுகொலை – நாயுடுவை ஒருவரியேனும் கண்டிக்காத பெரியாரின் நீண்ட அறிக்கை!

கீழ வெண்மணிப் படுகொலை குறித்து 28.12.1968இல் பெரியார் ஒரே நாளில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். “இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மனுதர்மம் தான் கோலோச்சும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அவ்வறிக்கையின் முக்கிய சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு:


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான். அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மனுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகித்தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படி (அயோக்கியர்களாகும்படி) தூண்டிவிட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது!

சட்டம் மீறுதல் மூலமும் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலமும் காரியத்தை சாதித்துக்கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள். புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆக வேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்திரியாகவும் மற்றும் மந்திரிகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலைமையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்’ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்று கூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்,

1. காந்தியார் கொல்லப்பட்டார்.

2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

4. நீதி ஸ்தலங்கள் , ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப் பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டி விட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாச வேலைகளாக காரியங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை. சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதி ஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழி வாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் – அமைச்சர்கள் நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதி ஸ்தலங்களும், நீதிபதிகளும் எங்களுக்கு மேலாக இருப்பதால் – எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றதன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவற்றைக் கட்டு பிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதி ஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக – எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதி ஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மனு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ் நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மனுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி – அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும்.

அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும். இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது –

1.காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கி விட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில் , நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத் தன்மைகள் இல்லையயன்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய- பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையயன்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக்கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலையில் எப்படி இருந்தாலும் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

“Patriotism is the last refuge of a scoundrel” தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் -ஜான்சன்

(விடுதலை 28.12.1968)

( குறிப்பு: கீழ வெண்மணிப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாரும் பிராமணர்கள் அல்ல, பெரியாரின் மொழியில் சொன்னால் அவர்கள் சூத்திரர்கள். சாதி வெறி பிடித்த கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிப்பதற்குப் பதிலாக, செத்துப்போன காந்தியை காரணம் கூறி, நாடு குட்டிச் சுவராகி விட்டது என்று கூறுவதில் யாதெனும் பொருளுண்டா? இந்தியாவை ரஷ்யாவோ, அமெரிக்காவோ ஆள வேண்டும் என்று விண்ணப்பம் போடுவதுதான் சுயமரியாதை பேசுபவருக்கு அழகா?
கீழ வெண்மணி மக்களுக்காக போராடி வந்த கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட வேண்டுமாம்! கொடுங்கோலன் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு தண்டனை வாங்கித் தராத தி.மு.க.வும், தஞ்சை மாவட்ட நிலவுடைமையரின் பதுங்குகுழியாக இருந்த பேராயக்கட்சியும் இந்திய அரசின் ஆதரவோடு கட்சி நடத்தலாமாம்! மற்ற இயக்கங்களை எல்லாம் அழித்து விட வேண்டுமாம்! கீழ் வெண்மணித் தீயில் மடிந்த மக்களுக்கு கடுகளவேனும் அனுதாபம் காட்டாத, கோபால கிருஷ்ண நாயுடுவை ஒருவரியேனும் கண்டிக்காத பெரியாரின் இந்த நீண்ட அறிக்கை திசை திருப்புவதற்கென்று விடப்பட்ட அறிக்கையாக எண்ணத் தோன்றுகிறது)

நன்றி: சுகுணா திவாகர், “மிதக்கும் வெளி” இணையப் பக்கத்திலிருந்து இவ்வறிக்கை எடுக்கப்பட்டது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>