கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ல் மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இதனைத்தொடர்ந்து தமிழக தொல்லியல்துறை மூலம் 4ம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் 19ம் தேதி 55 லட்ச ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் 26 குழிகள் தோண்டப்பட்டு அதில் ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். 3 மாதமாக நடந்த அகழாய்வில் 4 ஆயிரத்து 500 பொருட்கள் கண்டறியப்பட்டன. எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், உறைகிணறு, சமையல் அடுப்பு, தங்க காதணி, அரசு முத்திரை, மண் சக்கரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தாலும் தமிழக தொல்லியல் துறை இதுவரை எந்த பொருட்களையும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் காண்பிக்கவில்லை.
கடந்த பத்து நாட்கள் நடந்த அகழாய்வில் மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள், மருத்துவ குறிப்பு எழுதி வைக்கப்பட்ட ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவத்தில் பழங்கால தமிழர்கள் கொடிக்கட்டி பறந்ததற்கான பல ஆதாரங்கள் கீழடியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மருந்து கிண்ணங்கள் அனைத்தும் புனல் போன்ற அமைப்பை கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருசில பொருட்களின் அடியில் கருமை நிறம் காணப்படுவதால் மருந்துகளை அனலில் வைத்து அவர்கள் தயாரித்துள்ளதும் கண்டுபிடிகப்பட்டுள்ளது.
பல மண்பாண்ட பொருட்கள் விரிசல்களுடன் இருந்தாலும் உடையாமல் காணப்படுவதாகவும், மண் கிண்ணங்கள் அனைத்தும் கீழ்பகுதி கூர்மையாக இருப்பதால் மருந்துகளை அரைக்கும் போது கீழ்பகுதி வழியாக மருந்துகள் சேகரிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்விற்கு அனுப்ப உள்ளதாகவும் அதன்பின்தான் இவற்றின் காலம், பயன்பாடு தெரியவரும் எனவும் தெரிவித்தனர். மத்திய தொல்லியல் துறையினர் கண்டெடுத்த பொருட்களை பொதுமக்களிடம் காண்பித்து விளக்கமளித்தனர் என்றும், அதே போல தமிழக தொல்லியல் துறையினரும் இதுவரை கண்டெடுத்த பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று மணலூர் பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.