தாழிகள், பானைகள், சுடுமண் குடுவைகள்’ – கீழடி 6 – ம் கட்ட அகழாய்வு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிலையில் (19.2.2020) அன்று கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. கீழடி மட்டுமன்றி கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது. 6-ம் கட்ட அகழாய்வுப் பணியில் கொந்தகை ஈமக்காட்டில் ஆய்வுகள் செய்யப்படுகிறது. கீழடியின் தொடர்ச்சியான அகழாய்வில் ஈமக்காட்டை அகழாய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கொந்தகை கால்நடை மருத்துவமனைக்கு எதிரே உள்ள இடத்தில் காணப்படும் பழைமையான ஈமக்காட்டை ஆய்வு செய்தபோது முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இந்தத் தாழிகளை தொல்லியல் துறையினர் அடுத்தகட்ட ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது வரை 6-ம் கட்ட அகழாய்வில் 8 தாழிகள், 5 பானைகள், 3 சுடுமண் குடுவைகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கிடைத்துள்ளன.

கொந்தகையில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழி ஒன்று சுமார் இரண்டடி உயரம் என வெளியில் தெரிய வந்துள்ளது. அதை முழுவதுமாக எடுக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கீழடியில் தொடர்ச்சியான அகழாய்வில் கொந்தகை ஈமக்காட்டை ஆய்வுப் பணியை முக்கியமானதாகக் கருதி தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு தங்கி அகழாய்வுப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் பண்பாடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கீழடிக்கு வந்து அகழாய்வுப் பணியை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள கட்டுமான சுவரின் தொடர்ச்சியாகவே இது இருந்திருக்கின்றது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். முழுவதும் செங்கற்களால் ஆன கட்டுமானச் சுவர் மற்றும் வட்ட வடிவிலான பானை போன்ற அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: