குமரி உருவான வரலாறு! இப்படியாகத் தான் நமக்கு கிடைத்தது குமரி மாவட்டம்!

குமரி உருவான வரலாறு! இப்படியாகத் தான் நமக்கு கிடைத்தது குமரி மாவட்டம்!

குமரி உருவான வரலாறு! இப்படியாகத் தான் நமக்கு கிடைத்தது குமரி மாவட்டம்!

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதிதான் நமது தமிழகமும் சென்னை மாநிலம் என்ற பெயரில் புதிய எல்லை வரையறைக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு மாநிலமாக உருவானது. இதே நாளில்தான் கன்னியாகுமரி மாவட்டமும் பிறந்தது. அது, பிறந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


குமரி உருவான வரலாறு குமரி மாவட்டம் (தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய வட்டங்கள்) திருவிதாங்கூர் (கேரளா) சமஸ்தானத்துடன் இருந்த காலத்தில் பாடசாலைகளில் தமிழ் மொழிக்கு அனுமதியில்லை. மலையாளம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. சாதி ரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சார்ந்த தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே கவனித்து வந்தது. அப்போது கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த கோலப்பன், ”திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் வேலைகளுக்குக் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் கீழ்தான் இயங்க வேண்டும்” என்றார். அதை நடைமுறையிலும் கொண்டு வந்தார். இதனை காங்கிரஸ் தமிழ் பகுதி தலைவர்களான டாக்டர் நாயுடு, காந்திராமன், சிவதாணுபிள்ளை மற்றும் அக்கரை நீலகண்டபிள்ளை ஆகியோர் எதிர்த்தனர் 1935-ம் ஆண்டு இந்திய மாகாணங்களுக்கு ஓரளவு சுயஆட்சி கிடைத்தது. அதைக் கண்ட, மன்னர் ஆட்சிப் பொறுப்பில் வாழ்ந்த சமஸ்தானக்காரர்களும் தங்களுக்கும் ஜனநாயக உரிமை வேண்டுமென விரும்பினர். திருவிதாங்கூரும் மன்னர் ஆட்சியில் இயங்கியதால் இங்கும் சமஸ்தானக் காங்கிரஸ் தோன்றியது. 1938-ல் இந்தக் காங்கிரஸ், திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

சமஸ்தான காங்கிரஸுக்கும் திவானுக்கும் ஏற்பட்ட இறுதிப் போராட்டத்தில் திருவிதாங்கூர் தமிழர்கள் அதிகமாக ஈடுபடவில்லை. திருவிதாங்கூர் தமிழர்கள் சமஸ்தான காங்கிரஸை ஆதரிக்காதது மலையாளிகளுக்கு வெறுப்பை தந்தது. இந்தியாவை மொழிவாரியாகப் பிரித்து இணைத்து ஆட்சி நடத்துவது என அகில இந்திய காங்கிரஸ் கருதிய நீண்ட கால கொள்கையை, சுதந்திரம் கிடைத்த பிறகு செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தது. இதன் பிரதிபலிப்பாக மொழிவாரி மாநில குரல் எங்கும் எழுந்தது. இந்தக் குரல் திருவிதாங்கூரில் எழுவதற்கு சமஸ்தானம் தடையாக இருந்தாலும் டெல்லி சூழ்நிலையை ஒட்டி கேரளத்திலும் இது மேலோங்கியது. மலையாளப் பிரதேசங்களில் மூன்றாகப் பிரிந்து செயல்பட்ட அரசியல் ஸ்தாபனங்களாகிய மலபார் மாகாணக் காங்கிரஸ், கொச்சி பிரஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஆகிய மூன்றின் பெருந்தலைவர்கள், காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளைக் கேரள மாநிலமாக அமைக்க வேண்டும் என முடிவெடுத்தனர். சமஸ்தான காங்கிரஸ் வேலைகளைச் செயல்படுத்த திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸின் கட்டுப்பாட்டில் நாகர்கோவிலில் டிவிஷன் கமிட்டி ஒன்று இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானக் காங்கிரஸின் ஒரே லட்சியம் திருவிதாங்கூரினுள் மன்னரின் கீழ் மக்களின் பொறுப்பாட்சி ஏற்படுத்துதல் என்பதுதான். ”தமிழ் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!’ 1945-ம் ஆண்டு இறுதியில் மலபார், கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஆகிய மூன்றின் தலைவர்கள் கூடி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பை ஐக்கிய கேரளமாக அமைக்க வேண்டும் என தீர்மானம் போட்டனர். தென்திருவிதாங்கூர் பகுதிகளில் கேரள காங்கிரஸுக்கு உறுப்பினர்களைச் சேர்த்து குழுக்கள் அமைப்பதற்கு

பொன்னாரை ஸ்ரீதரை நியமித்தனர். இவரோடு சமஸ்தான காங்கிரஸ் தலைவர்களும் இறங்கினர். இதனை முதன்முதலில் பி.எஸ்.மணி எதிர்த்தார். கேரள காங்கிரஸ் சார்பாக ஸ்ரீதர் வாசித்த தீர்மானத்துக்குப் பதிலளித்த பி.எஸ்.மணி, ”ஸ்ரீதர் வாசித்த தீர்மானம் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம் என இருக்கிறது. கேரளம் அமைவதானால் அமையட்டும். அதில், கன்னியாகுமரி வரை என இருக்கும் பகுதி நீக்கப்பட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து மொழிவாரி மாகாணம் அமையும்போது திருவிதாங்கூரினுள் அகப்பட்டுள்ள தமிழ் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்” என்று தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடும் விவாதம் நடைபெற்றது. பி.எஸ்.மணியின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே தீர்மானம் நிறைவேறியது. அதன்பின், 1945-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் உருவானது. ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்!’ தெற்கெல்லைத் தமிழர்களின் குரல் தமிழ்நாட்டில் ஒலிக்க வேண்டும் என திட்டமிட்ட அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், கரையாளர் போன்றத் தலைவர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினார்கள். அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸைக் கட்டுப்படுத்த தமிழர் தேசியக் காங்கிரஸ் என்ற போலியான அமைப்பை எதிர் அணியினர் உருவாக்கினார்கள். அதன் பிறகு, சுசீந்திரம் இரவிபுதூரில் கூடிய அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பெயரை ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என பெயர்மாற்றம் செய்து கொண்டனர்.

1947-ம் ஆண்டு ஜனவரியில் சில மாற்றங்களோடு திருவிதாங்கூர் அரசின் புது அரசியலமைப்பு பற்றிய அறிக்கை வெளியானது. அறிக்கையில் மன்னரின் மேலதிகாரத்தில் அமையும் மக்கள் அரசினைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் திவானுக்கு வழங்கப்பட்டது. இதற்கு பலமாக எதிர்ப்பு கிளம்பியது. திருவிதாங்கூர் தமிழர்களுக்கு ஆதரவாக நெல்லை சோமையாஜிலு செயல்பட்டார். 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸின் பொதுக் குழுவில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸை, தமிழ்நாடு காங்கிரஸின் திருவிதாங்கூர் கிளையாக மாற்ற வேண்டுமென்று தீர்மானத்தை ம.பொ.சி. கொண்டு வர, அது காமராஜரின் ஒரு திருத்தத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அது நடைமுறைக்கு வரவில்லை 1947-ம் ஆண்டு மே மாதம், ”திருவிதாங்கூர் காங்கிரஸ் இயக்கத்தை ‘மலையாள மாகாண காங்கிரஸ்’ என்றும் ‘தமிழ் மாகாண காங்கிரஸ்’ என்றும் இரு கூற்றாக்கிச் செயல்படுத்த வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார் ம.பொ.சி. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியில் சுதந்திரத்தின் அடையாளமாகக் தேசியக் கொடியை ஏற்றிய அதேவேளையில் நாகர்கோவில் முனிசிபல் திடலில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் தலைவர் நத்தானியேல் தேசியக் கொடியை ஏற்றினார்.

1949-ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சியை இணைக்க முன்வந்த மத்திய அரசு, தென்திருவிதாங்கூர் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான அண்டை மாநிலமான சென்னை மாகாணத்தோடு இணைக்க இணங்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஏப்ரல் 13-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். நத்தானியேல் தலைமையில் அன்றைக்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருவிதாங்கூர் கொச்சி இணைப்பைக் கூறிய அரசு ஆவணத்தின் நகல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

1950-ம் ஆண்டு செப்டம்பரில் பாளையங்கோட்டையில் மூத்த அமைச்சரான பக்தவத்சலத்தை சந்திக்க நத்தானியேல் மற்றும் நேசமணி போன்ற பல தலைவர்கள் சென்று சமரச உடன்படிக்கை ஏற்படுத்தினர். ஆனால் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அதை ஏற்கவில்லை. ”இரு இயக்கமும் இணைந்து செயலாற்ற வேண்டும்!’ 1951-ம் ஆண்டு ஜூன் மாதம் நாகர்கோவில் வந்த காமராஜர், சமாதானத்துக்கான ஆலோசனைகளைக் கூறினார். இந்த நிலையில், இராமசாமி பிள்ளை தலைமையிலான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போயிற்று. அவரோடு அவர் பிரிவில் இணைந்திருந்த மாதேவன் பிள்ளையும், நத்தானியேலும் இயக்கத்திலிருந்து வெளியேறினர். அப்படியே தாணுலிங்க நாடாரின் பிரிவில் செயல்பட்டு வந்த காந்திராமனும், குஞ்சன்நாடாரும் இயக்கத்திலிருந்து வெளியேறினர். இவர்கள் நான்கு பேரும் இணைந்து நின்று திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இணைப்புக் கமிட்டி ஒன்றை உருவாக்கினர். அவர்கள் ஒரு அறிக்கையும் விட்டனர். அதில், ‘கடந்த ஒரு வருடமாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ளது. இரு இயக்கமும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளோம். நாங்கள் நான்கு பேரும் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இணைப்பு கமிட்டி என்ற பெயரில் காந்திராமன் அவர்களை தலைவராகக் கொண்டு ஒரு கமிட்டியாகச் சேர்ந்திருக்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டனர்.

இவர்களின் நல்லெண்ண முயற்சியை அறிந்த காமராஜர், செப்டம்பர் 17-ம் தேதி நெல்லையில் இரு பிரிவினரையும் அழைத்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், நால்வர் குழுத் தலைவரான காந்திராமனும், நத்தானியேலும் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தில் இருவர் உடல் நலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இருவரின் உண்ணாவிரதத்தால் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் பரபரப்பாயின. ஆனாலும் இரு இயக்கத்தினரும் இணைய முன்வரவில்லை. மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள்! 1951-ம் ஆண்டு டிசம்பர் இறுதியிலும் 1952 ஜனவரியிலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாராளுமன்றத் தேர்தலையும் மாநிலங்களின் தேர்தலையும் ஒருங்கிணைத்து நடத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது. நாகர்கோவில் பாராளுமன்றத்தின் ஒரு தொகுதியாக தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் ஆகிய தமிழ் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு பாராளுமன்றத் தொகுதியானது. அதில் நேசமணி மாபெரும் வெற்றி பெற்றார்.

1954-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நேரத்தில், மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் வலுவடைந்தன. இந்த மொழிவாரி சிக்கலைத் தீர்ப்பதற்கான பரவலான கொள்கை குறித்து பரிந்துரை செய்ய, மாநிலச் சீரமைப்பு ஆணையம் ஒன்றை அமைத்தது மத்திய அரசு. இது இந்தியா எங்கும் பயணம் செய்து 1955-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த நிலையில், தென் திருவிதாங்கூர் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான தி.த.நா.கா. தொண்டர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு போலீஸாரால் சித்ரவதை செய்யப்பட்டனர். மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி கமிஷன் 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியன்று தமது அறிக்கையை வெளியிட்டது.

தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை தாலுகாக்களை புதிதாக அமையவிருக்கும் கேரள மாநிலத்துடன் இணைக்க கமிஷன் பரிந்துரைத்தது. மாநிலங்களை மொழி அடிப்படையில் திருத்தி அமைக்க ஒப்புக்கொண்ட பசல் அலி கமிஷன் தமிழக – கேரள எல்லைகளைத் திருத்தி அமைப்பதில் மொழி அடிப்படையை ஏற்க மறுத்துவிட்டது. குமரிக்கு வயது 60 “பல்வேறு பொருளாதார காரணங்களையும், மற்ற காரணங்களையும் உத்தேசித்து தேவிகுளம் – பீர்மேடு தாலுகாக்கள் திருவாங்கூர் – கொச்சி ராஜ்ஜியத்துக்குத் தேவையானவை” என்பது கமிஷனின் வாதமாக இருந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தி.த.நா.கா. கோரிக்கை விடுத்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டு தி.த.நா.கா. கலைக்கப்பட்டது.

  • த.ராம்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: