திராவிடம்: அண்ணாதுரைக்கு கண்ணதாசன் கேள்விகள்!

திராவிடம்: அண்ணாதுரைக்கு கண்ணதாசனின் கேள்விகள்!

திராவிடம்: அண்ணாதுரைக்கு கண்ணதாசனின் கேள்விகள்!

1961-இல் தி.மு.க.வை விட்டு விலகி ‘தமிழ்த்தேசியக் கட்சி’ தொடங்கியவர் ஈ.வெ.கி.சம்பத். அவரோடு சேர்ந்து தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் கவியரசர் கண்ணதாசன். தி.மு.க.வின் ‘திராவிட கானல் நீர் வேட்டைக்கு’ எதிராக, “அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்” எனும் நூலை கண்ணதாசன் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. இந்த நூறு கேள்விகளுக்கும் அறிஞர் அண்ணாவோ, அவரது தம்பிமார்களோ இது நாள் வரை பதில் அளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 100 கேள்விகளில், 32-கேள்விகள் மட்டும் இங்கு தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


1. ‘மொழிவழி பிரிந்து இன வழி ஒன்று கூடுவது’ என்று திராவிடக் கூட்டாட்சிக்கு இலக்கணம் அமைக்கிறீர்களே! அப்படி மொழி வழி பிரிகிற தமிழர்கள் ஒரு கூட்டமா, அல்லது ஒரு தனி இனமா?

2. தமிழர்கள் தனியான இனம் அல்ல என்றால் பிரிந்து, பிறகு கூட வேண்டிய அவசியம் என்ன?

3. ஒரு மொழியுணர்வு இன அடிப்படையாகாது என்றால், அந்த ஒரு மொழியுணர்வுக்குப் பெயர் என்ன?

4. இனத்தால் ஒன்றுபட்டவர்கள் மொழி வழி பிரிந்து நிற்கவேண்டிய அவசியம் என்ன?

5. ஓரின ஆட்சியாக, திராவிடக் கூட்டாட்சி அமையும் போது விரும்பினால் பிரிந்து போகும் உரிமை எதற்கு?

6. இலங்கையில் தமிழர்கள் இன்னலுக்காளாயினர் என்ற சேதி கிடைத்ததும், தமிழகத்திலே பரந்து காணப்படுகிற துயர் திராவிடத்தின் மற்றைய பகுதிகளில் காணப்படாதது ஏன்?

7. ‘திராவிடத்தின்’ பொதுமொழியாக ஆங்கிலம் இருக்கும் என்றால், திராவிட விடுதலைக்குப் போராடும் கழகத்துக்கு, தமிழில் பெயர் ஏன்?

8. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளைத் தமிழ்நாட்டில் மட்டும் கொண்டுள்ள திராவிட ஸ்தாபனத்துக்கு, ஆந்திரத்தில் எத்தனை கிளைகள், கேரளத்தில் எத்தனை கிளைகள்?

9. இதுவரை இல்லை என்றால், ஏன் இல்லை?

10. கலப்பில்லாத அசல் தெலுங்கன், கலப்பில்லாத அசல் மலையாளி, அசல் கன்னடத்துக்காரன் முன்னேற்றக் கழகத்தில் ஒருவனாவது உண்டா?

11. தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தெலுங்கரிடை, மலையாளிகளிடை, கன்னடத்தவரிடை உண்டா?

12. இல்லையென்றால், அத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் என்றைக்காவது முயற்சி எடுத்ததுண்டா?

13. இந்திமொழிக்குத் தமிழ்நாட்டிலே, கட்சி, சாதி, சமய பேதத்தையெல்லாம் கடந்த எதிர்ப்பு பரவலாக இருக்கும் போது ஆந்திரத்திலும், கேரளத்திலும் அதற்கு அமோக வரவேற்பு இருப்பது ஏன்?

14. இல்லாத இந்திய தேசியத்தை ஏற்படுத்தியே தீரவேண்டும் என்று வீம்புக்காக, காங்கிரஸ்காரராவது கேரளத்தைச் சேர்ந்த கிருஷ்ண மேனனை பம்பாயிலும், வடநாட்டுக் கோயங்காவை விழுப்புரத்திலும் தேர்தலுக்கு நிற்க வைத்தார்கள். திராவிட தேசியத்தின் பெயரால் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் யாரேனும், ஒருவரையானும் கேரளத்திலோ, ஆந்திரத்திலோ நிற்க வைத்தீர்களா?

15. இல்லை எனில் இனியேனும் அப்படிச் செய்கிற எண்ணமோ, தைரியமோ உண்டா?

16. “திராவிட நாட்டை இரண்டு முறையில் பெற முடியும். ஒன்று ஓட்டுமுறை; மற்றொன்று வேட்டுமுறை” என்று சொன்னீர்கள். ஓட்டுமுறையால் திராவிட நாட்டைப் பெறுவதற்கு இந்திய அரசியல் சட்டத்தையே திருத்தியாக வேண்டும் என்பதை அறிவீர்களா?

17. இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான அதிகாரம், சென்னை சட்டசபையிடம் இல்லை என்பதையும், அது டெல்லி பாராளுமன்றத்தினிடம் தான் உள்ளது என்பதும் தெரியுமா?

18. அந்தப் பாராளுமன்றத்தில் கூட, மொத்த அங்கத்தினர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைத்தால் மட்டுமே இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட முடியும் என்பதை அறிவீர்களா?

19. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய ‘திராவிடத்தின்’ அத்தனைப் பகுதிகளிலுமுள்ள பாராளுமன்ற இடங்கள் அனைத்தையுமே தி.மு.க. கைப்பற்றி விடுகிறது என்று வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அது பாராளுமன்றத்தின் மொத்த அங்கத்தினர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகமுடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

20. உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய இந்திமொழிப் பிரதேசங்களின் பாராளுமன்ற அங்கத்தினர் தொகை திராவிடத்தின் பாராளுமன்ற அங்கத்தினர் தொகையைவிட அதிகம் என்பதை அறிவீர்களா?

21. அந்தப் பகுதிகாரர்கள் திராவிட நாட்டுப் பிரச்னை பாராளுமன்றத்தில் தீர்மான உருவில் வரும்போது அதைக் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது நீங்கள் அறியாததா?

22. இந்த நிலையில், டில்லி பாராளுமன்றத்தில், திராவிட நாட்டுப் பிரிவினைக்காக நீங்கள் கொண்டு போகும் எந்தத் தீர்மானமும் தோற்கடிக்கப் பட்டு விடும் அல்லவா?

23. அப்படியானால், திராவிட நாட்டை ஓட்டு முறையில் பெறுவேன் என்பது ஏமாற்று வித்தையா?

24. ஓட்டு முறை இல்லை என்றால், வேட்டு முறை மூலம் பெறுவோம் என்று சொன்னால், அதற்காக நீங்கள் தி.மு.க.வுக்கு இதுவரை தந்துள்ள பயிற்சி என்ன?

25. திராவிடக் கூட்டாட்சிக்கு பார்லிமெண்ட் இருக்குமா?

26. இருந்தால் அந்த பார்லிமெண்டில் தமிழ் உறுப்பினர்கள் மைனாரிட்டியாகத்தானே இருப்பார்கள்?

27. எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்கும் என்று சொல்வீர்களேயானால், இரண்டு மாநிலங்களின் உறுப்பினர்கள் ஒன்றுசேரும் போது, தமிழ் உறுப்பினர்கள் மைனாரிட்டியாகத்தானே ஆகி விடுவார்கள்?

28. ‘திராவிடம்’ என்ற நிலப்பரப்புக்கு சரியான வரையறை எது?

29. தங்கள் ‘திராவிட நாடு’ பத்திரிக்கை 16.9.45 இதழில், ‘திராவிடம்’ என்று தாங்கள் கேட்பது (அன்றைய) சென்னை மாகாணத்தை என்று எழுதியிருக்கிறீர்களே, கவனமுண்டா?

30. அன்றைய சென்னை மாகாணத்தில் மைசூர் இல்லை. திருவாங்கூர்- கொச்சி இல்லை. புதுக்கோட்டை சமஸ்தானம் இல்லை. ஐதராபாத் சமஸ்தானம் இல்லை. குமரி மாவட்டம் இல்லை. இது எப்படித் திராவிடம் ஆகும்?

31. இன்றைக்கு நீங்கள் கேட்கும் ‘திராவிட நாடு’ மேற்குறித்த பகுதிகள் நீங்கியது தானா?

32. ‘இத்தனை கேள்விகளையும் நீ யார் கேட்பதற்கு?’ என்று சொல்லாமல், பதில் சொல்ல முயற்சிப்பீர்களா? முடியவில்லை என்றால், ‘பதில் சொல்ல முடிய வில்லை’ என்று ஒத்துக் கொள்கிற அரசியல் நாணயமாவது உங்களுக்கு இருக்கிறதா?

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: