யாழ்ப்பாணக் கோட்டை

JaffnaFortஇலங்கையின் வடபாகத்தின் தலையாக அமைந்திருக்கின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் அழகினை விபரிக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள வரலாற்றுக் கட்டமைப்புகளும் பண்பாட்டு விழுமியங்களும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை இன்றும் பறைசாற்றுகின்றன.

ஊர்காவற்றுறை கோட்டை, காங்கேசன்துறைக் கோட்டை, வெற்நிலைக்கேணி கோட்டை என்பன கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இயக்கச்சி கோட்டை, ஆனையிறவுக்கோட்டை, பூநகரிக்கோட்டை என்பன பாதைக்கடவைகளில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இத்தகைய நிலைய முக்கியத்துவத்தினால் கடலிருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப்பது எளிதாகவிருந்தது.

யாழ்ப்பாணத்தின் மையமாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் கரையோரத்தில் தன் கம்பீரமான வடிவத்தை இழந்து சிதிலமான நிலையில் இன்றும் கோட்டை காணப்படுகின்றது. யாழ்ப்பாணக்குடா நாட்டின் தெற்கே பண்ணைக் கடற் கரையோரத்தில் கம்பீரமாகக் கோட்டை அமைந்திருந்தது. இக்கரையோரத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரால் மீளமைக்கப்பட்ட கோட்டையாகும்.

யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் மிக அற்புதமானதாகும். அதுமாத்திரமல்லாமல் கீழைத் தேசத்திலுள்ள கோட்டைகள் யாவற்றிலும் மிகப் பலமானதும் பாதுகாப்பானதுமான கோட்டை என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதத்துரைக்கப்பட்டதாகும்.

முதலில் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்தது. பின்னர் போர்த்துக்கேயர் அப்பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக்கினர். ஒல்லாந்தர் இக்கோட்டையைப் புனரமைத்தனர். முதலில் ஐங்கோண வடிவில் உள்கோட்டையின் வடிவம் அமைக்கப்பட்டது. இதனை 1680 இல் கட்டி முடித்தனர். கோட்டையின் சுற்றுப்புறக் கட்டமைப்பு 1792 இல் நிறைவுற்றது.

யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கடற்புறமாக இரண்டு கொத்தளங்களையும் நிலப்பக்கமாக மூன்றையும் கொண்டுள்ளது. உள்கோட்டையின் சுற்றளவு 6300 அடிகளாகும். கொத்தளத்தின் ஒரு பக்கத்தளம் 340 அடிகளாகும். யாழ்ப்பாணக் கோட்டை மதிலின் உச்சி 20 அடி அகலமானது. அடித்தளத்தில் 40 அடி அகலமானது. கோட்டைச் சுவர் 30 அடி உயரமானது. கோட்டையைச் சுற்நி 132 அடி அகலமான அகழியுள்ளது. அகழிச் சுவரோடு சின்னக்கோட்டைகள் அமைந்துள்ளன. இவை முருகைக்கற்களினால் மூடப்பட்ட கூரைகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டைகள் யாவும் முருகைக் கற்களினால் அமைக்கப்பட்டவை. இக்கோட்டைகள் கடற்கரையோரங்கனில் அல்லது பாதைக் கடவைகளில் அமைந்திருந்தன.

யாழ்ப்பாணக்கோட்டைக்குள் கவனர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன கட்டப்பட்டன. பிற்காலத்தில் ராணி மாளிகையில் வைத்து கைதிகள் விசாரிக்கப்பட்டார்களாம். கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று `கடற்பாதை மற்றையது நிலப்பாதை. `கடற்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழி தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறம் நிலப்பாதையாகும். கோட்டைக்குள் தென் கிழக்குப் பகுதியில் ஒரு சதுரங்கத் தேவாலயம் அமைந்திருந்தது. இன்று இக்கட்டிடங்கள் எதனையும் காணமுடியாது.

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்ற சதியொன்று நடந்தது. நல்லூர் முதலியாராகவிருந்த பூதத்தம்பி இதில் பங்குபற்நினான் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் யாழ்ப்பாண நிர்வாக மையமாக யாழ் கோட்டை விளங்கியதால் அதை இராசவாசல் என சிறப்பாக அழைத்தார்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: