காலம் கடந்த நிலையிலும், 2000 ஆண்டு பெருமையை பறைசாற்றும் இடைக்கழிநாடு!

2000 ஆண்டு பெருமையை பறைசாற்றும் இடைக்கழிநாடு!

2000 ஆண்டு பெருமையை பறைசாற்றும் இடைக்கழிநாடு!

வளர்ச்சிக்கு ஏற்ப ஊர் பெயர்கள் மருவி வரும் நிலையில், சென்னை – புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, இடைக்கழிநாடு மட்டும் ஊர் பெயர் மருவாமல், இன்றைக்கும் தன் சொந்த பெயரிலேயே காலம் கடந்தும் நிற்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா, இடைக்கழிநாடு பேரூராட்சி பனை, பலா, முந்திரி, மா, தென்னை உள்ளிட்டவை, மிகுதியாக விளையும் பகுதியாகும். இப்பேரூராட்சி, 24 கிராமங்களை கொண்டது. இப்பகுதி, இரண்டு பெரும் உப்பளங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இடைக்கழிநாடு, 2,000 ஆண்டுகளாக மொழி, இலக்கியம், வரலாறு, தொல்லியல், வாணிபம், ஆன்மிகம் என, அனைத்து தலங்களிலும் தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

வரலாற்று தொன்மை இடைக்கழிநாட்டை சோழர்கள், சாலுக்கியர்கள், முகலாயர்கள், பிரெஞ்சுகாரர்கள் என, பலர் ஆட்சி நடத்தியுள்ளனர். மேலும், சங்க புலவர்கள் பலர் தோன்றி இருக்கின்றனர். சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் புலவர் நத்தத்தனார் பிறந்த நல்லுார் இங்கு தான் உள்ளது. ஆலம்பரை கோட்டை தோஸ்த் அலிகான் என்பவரால், 17ம் நுாற்றாண்டில், 15 ஏக்கர் பரப்பில் ஆலம்பரை கோட்டை கட்டப்பட்டது. தற்போது, தொல்லியல் துறைக்கு சொந்தமான இக்கோட்டை, இன்றளவும் சுற்றுலா தலமாக செயல்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அன்றைய நாளில், இங்குள்ள இயற்கை துறைமுகத்தில் இருந்து சணல், உப்பு, சரிகை உள்ளிட்டவை, கீழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த கோட்டையில், பிரெஞ்ச் கவர்னரால் அச்சடிக்கப்பட்ட ஆலம்பரை, ‘வராகன்’ நாணயம், வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்து இருக்கிறது. அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின், சென்னை மாகாண கவர்னர் பக்கிங்ஹாம் பிரபு பெயரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் இடைக்கழிநாட்டில் இருந்து, சென்னை ஹமில்டன் பாலம் வரையில், படகு போக்கு வரத்து செயல்பட்டு இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசராக பிறந்த, போதி தர்மர் சிலை இங்கு இருக்கிறது. மேலும், தமிழ் தேசியம், திராவிட இயக்கம் என பல தளங்கள் இங்கு உள்ளன. கி.பி. 1967ல் வசந்தத்தின் இடி முழக்கமாய், மேற்கு வங்காள டார்ஜிலிங் மலை முகடுகளில் உள்ள நர்சல்பாரி இயக்கத்தில் தோன்றிய போராட்ட உணர்வுகள், இந்தியா முழுவதும் எதிரொலித்த அதன் தாக்கம், இடைக்கழிநாட்டிலும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. மேலும், பெரும் மணல் பரப்பை கொண்ட நெய்தல் திணையையொட்டி அமைய பெற்றுள்ள இடைக்கழிநாட்டில், அன்பிற்கு இலக்கணமான, ‘அன்றில் பறவைகள்’ ஏராளமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

காசிப்பாட்டை :

சாலைகாசிப்பாட்டை சாலை பண்டைய காலத்திலேயே, தமிழகத்தையும், வட இந்தியாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாக விளங்கி வருகிறது. அகத்தியர், லட்சுமணர், சாது சன்னியாசிகள், காசிக்கு தீர்த்த யாத்திரைக்கு செல்வோர் இடைக்கழிநாடு வழியாகவே, சென்று இருக்கின்றனர்.

இதற்காகவே, இச்சாலையின் ஆலம்பரை நாணயப் பொறுப்பாளரான பொட்டியபக்தன் என்பவரால் கட்டப்பட்ட, தர்ம சத்திரங்களில், பக்தர்கள் தங்கி, காலனாவும், கால்படி அரிசியும் பெற்று இளைப்பாரி சென்றிருப்பதை, இங்குள்ள வரலாற்று தொன்மங்கள் தெரிவிக்கின்றன. இந்த தெய்வீக சாலையில், 11ம் நுாற்றாண்டில் ஆண்ட, முதலாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டில் இடைக்கழிநாடு என்று, தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் விளக்கு ஏற்ற, 90 ஆடுகள் தானம் வழங்கியதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சிவானந்தம் கூறுகிறார்.

படகு துறைகிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, முதலியார் குப்பம் படகு துறை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படகு துறையில், கடற்கரையை ஒட்டிய தீவு போன்ற பகுதிக்கு பயணிகள் விரும்பி செல்கின்றனர். விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் இப்படகு துறை சுறுசுறுப்பாகவே காணப்படுகிறது.

உலக பெருந்தமிழ் மக்களின் அடையாளமாக இடைக்கழிநாடு விளங்குகிறது. இதன் உன்னதங்கள், பெருமிதங்கள், வரலாற்று குறிப்புகள் குறித்து இன்றைய தமிழ், தொல்லியல் மற்றும் வரலாற்று மாணவர்கள் தங்கள் தேடல்களை, இடைக்கழிநாட்டிலும் மேற்கொள்ள வேண்டும். வரலாற்றுப் பதிவுகளை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: