சென்னை-யில் ஊர்களின் பெயர் காரணம்!

சென்னை-யில் ஊர்களின் பெயர் காரணம்!

சென்னை-யில் ஊர்களின் பெயர் காரணம்!

பேட்டை, பட்டினம், புரம், நகர், ஊர் என்பன, பொதுவாக இடத்தை குறிக்கும்.

சென்னையின் பல இடங்கள், பாக்கம், பேட்டை, ஊர், புரம், நகர், சாவடி, மேடு என, முடிவதை காணமுடியும்.

ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற, பாக்கம், வாக்கம் என முடியும் ஊர்கள், கடலோர வணிகர்கள் வாழ்ந்த பழமையான குடியிருப்பு பகுதிகள். கொருக்குப் பேட்டை, வண்ணாரப் பேட்டை போன்ற, பேட்டையில் முடியும் பகுதிகளில், சந்தைகள் இருந்துள்ளன. கொரட்டூர், கொளத்துார், போரூர் உள்ளிட்ட, ஊர் என, முடியும் இடங்களில், பழமையான குடியிருப்புகள் இருந்துள்ளன. ரெட்டேரி, பொத்தேரி, வெப்பேரி, வேளச்சேரி போன்றவை, ஏரி இருந்த இடங்களை குறிக்கின்றன. ராமாபுரம், மாதவரம் போன்ற, புரம், வரம் என முடியும் ஊர்கள், எம்.ஜி.ஆர்.,நகர், கே.கே.நகர் போன்ற, நகர் என முடியும் ஊர்கள், பழமையும் புதுமையும் கலந்தவையே. கொத்தவால் சாவடி, வேலப்பன் சாவடி போன்ற, சாவடி என முடியும் இடங்களில், வரி வசூலிக்கப்பட்டது. சைனாபஜார், பர்மாபஜார் போன்ற, பஜார் என முடியும் இடங்கள், கடை வீதிகளை குறிக்கும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சில குறிப்பிட்ட இடங்களுக்கான காரணங்கள், செவி வழி, ஆவண வழியாக வந்தாலும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவே உள்ளன. அவற்றில் சில:

1) 108 சக்தி இடங்களில், 50வது ஊர் என்பதால், ‘ஐம்பத்துார்’ என வழங்கி பின், ‘அம்பத்துார்’ என, மருவியதாகக் கூறப்படுகிறது

2) முஸ்லிம் நவாப் ஒருவரின் குதிரைகளின் பசி போக்கும் பகுதி எனும் பொருளில், ‘கோடா பேக்’ என, வழங்கப்பட்டு, பின், கோடம்பாக்கமாக மருவியதாம்.

3) கூவம் ஆற்றின் முற்பெயரான நுளம்பியாற்றங் கரையில் உள்ள, திருவேங்கட பெருமுடையார் எனும் சிவன் கோவில், சமஸ்கிருதத்தில், சந்தான சீனிவாச பெருமாள் என மாற்றப்பட்டு, சந்தானம் என்பதற்கு, மகப்பேறு என, பொருள் கொள்ளப்பட்டு, பின், முகப்பேர் என, மாறியதாம்.

4) குதிரை வியாபாரியான, சையது அகமது கான், அடையாறு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டியதால், சையது ஷா பேட்டை எனவும், பின், சைதாப்பேட்டை எனவும் மாறியது. சரபோஜி மன்னரின் தாயான, சைதாம்பாளுக்கு சொந்தமான நிலப்பகுதி இருந்ததால், சைதாப்பேட்டையாக மாறியதாகவும் சொல்லப்படுகின்றன.

5) வேலிச்சேரி, வெலிச்சேரி என்று இருந்த பகுதி, வேளச்சேரி என்று மாறியதாகக் கூறப்படுகிறது.

6) ஆறு தோட்டங்கள் எனும் பொருளில் உள்ள, ‘சே பேக்’ எனும் உருது வார்த்தை மருவியதே, சேப்பாக்கம் என, மாறியதாம்.

7) சவுந்தர பாண்டியன் பஜார் என்பதே, பாண்டி பஜார்.

8) பசுக்களை வளர்க்கும் இடையர்கள் அதிகம் இருந்த, பல் ஆ புரம், பல்லவபுரம் எனவும், பின் பல்லாவரம் எனவும் மருவியது.

9) மதராஸ் மாகாண முதல்வரான, பனகல் ராஜாவின் நினைவை போற்ற, பனகல் பார்க் என, பெயரிடப்பட்டது.

10) நீதி கட்சி தலைவர் சர் பி.டி.தியாகராஜரின் பெயரால், தியாகராய நகர் உருவானது.

11) புரசை மரங்கள் அடர்ந்த பகுதி, புரசைவாக்கம் ஆனது.

12) மல்லிகை தோட்டம் நிறைந்த பகுதி. திருக்கச்சி நம்பி ஆழ்வார் இங்கிருந்து, காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு பூ எடுத்து சென்று வழிபட்டார். அப்பகுதி, சமஸ்கிருதத்தில், புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பூந்தமல்லியாக உள்ளது.

13) ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து வந்தவர், முஸ்லிம் துறவியான, ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. அவரை தொண்டியார் எனவும், அவர் வசித்த பகுதியை தொண்டியார் பேட்டை எனவும் அழைத்தனர். தற்போது, தண்டையார் பேட்டை என, மாறி உள்ளது.

14) ஆடு, மாடுகள் மேய்ந்த மைதான பகுதி, மந்தைவெளி.

15) மயிலை எனும், இருவாச்சி பூக்கள் நிறைந்த ஊர், மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் எனும் பொருளில், மயிலாப்பூராக அமைந்தது.

16) முருகன் போர் நடத்தி, திருமணம் செய்த ஊர் என்பதால், போரூர் எனப்பட்டது. பல்லவர் காலத்திலும் இங்கு, போர்கள் நடந்ததாம்.

17) பிரம்பும், மூங்கிலும் அடர்ந்த, பிரம்பூர் பகுதி, பெரம்பூராக மாறியுள்ளது.

18) திரிசூல நாதர் கோவில் இருக்கும் ஊர், திரிசூலம்.

19) அல்லி பூக்கள் நிறைந்த கிணற்றுப்பகுதி அமைந்த ஊர், திருவல்லிக்கேணி.

20) தாமஸ் பாரி வணிகம் செய்த ஊர், பாரிமுனை.

21) மா அம்பலம் இருந்த ஊர், மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்த ஊர், எனும் பொருளில், மாம்பலம் உருவானது.

22) விகடக் கூத்து ஆடும் தேவதாசிகளான, கோட்டாள கொண்டி பெண்கள் வாழ்ந்த பகுதி, கொண்டி. அது தற்போது, கிண்டி என, மாறி விட்டது.

23) குயவர்கள், மண்ணை குழைத்து சேறாக்கி, மாட்டு வண்டியில் ஏற்றும் இடம் சேற்றுப்பட்டு. தற்போது, சேத்துப்பட்டு.

24) முதலில் சூரியோதயம் எழும் மேட்டுப்பகுதி, எழுமீஸ்வரர் கோவில் உள்ள பகுதி, எழும் ஊர் என்றாகி, எழும்பூர் என, அழைக்கப்படுகிறது.

25) பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த, ராயர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பகுதி, அன்று ராயர்புரம்; இன்று, ராயபுரம்.

26) பிரிட்டிஷ் ஆட்சியில், நெசவாளர்கள் குடியேறிய பகுதி, சின்ன தறிகளை வைத்து தொழில் செய்ததால், சின்ன தறிபேட்டையாகவும், தற்போது சிந்தாதரிப்பேட்டை எனவும் உள்ளது.

27) ராமபிரான் அமர்ந்த கூவக்கரை இன்று, இன்றைய அமைந்தகரையாம்.

28) பெரிய குளங்கள் நிறைந்த ஊர் பெருங்குளத்துார்.

29) தற்போது, நந்த வம்சத்தினர், ராமனை வரவேற்ற இடமாம், நந்தம்பாக்கம்.

30) ராமர் தங்கிய இடம், ராமாபுரம்.

31) குன்றுகள் நிறைந்த ஊர், குன்றத்துார்.

32) வரி வசூலித்த இடம், சுங்குவார் சத்திரம்.

33) மா அம்பலத்திலிருந்த சிவன் கோவிலுக்கான நந்தவனம் இருந்த இடம் நந்தவனம், தற்போது நந்தனம்.

34) திருக்குடை வைபவத்தில் பெருமாள், யானை போல் ஓடி தாண்டிய இடம், யானை கவுனி.

35) மாதவன், ஈசனிடம் வரம் பெற்ற இடம், மாதவ வரம், தற்போது மாதவரம்.

36) முருகன், வள்ளியுடன் சேர்ந்த இடம், வள்ளி சேர் பாக்கம், தற்போது வளசரவாக்கம்.

37) தண்ணீரில் மிதக்கும் காட்டுக்கு நடுவில் உள்ள சோலைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, திருவல்லிக்கேணி பெருமாள் இரவில் வந்து தங்கும் இடம், ஈர காடு தங்கல், தற்போது, ஈக்காட்டு தாங்கல்.

38) கோவூர் ஈசனின் மவுளி எனும் கிரீடம் இருந்த இடம், மவுளிவாக்கம், தற்போது முகலிவாக்கம்.

39) அயன் வரம் பெற்ற இடம் அயன் வரம், தற்போது, அயனாவரம்.

40) கொத்தவால் எனும் வரிவசூலிப்பு மையம் இருந்த இடம், கொத்தவால்சாவடி.

41) ஆங்கிலேயர் காலத்தில், தங்கம், வெள்ளி காசுகள் அச்சடித்த இடம், தங்கசாலை, தற்போது, மின்ட்.

42) சென்னையில் வசிக்க வரிகட்ட வேண்டும் எனும் திட்டத்தை முன்மொழிந்த, ஆங்கிலேய பேப்பமன்ஸ் பிராட்வேயின் பெயரில் அமைந்தது தான், தற்போதைய பிராட்வே.

43) தோல் தொழிற்சாலைகளான, ‘குரோம் பேக்டரி’கள் இருந்த இடம், குரோம்பேட்டை.

44) தெய்வநாயக முதலியார் வசித்த ஊர், தெய்வநாயகம் பேட்டை எனவும், தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தென்னம்பேட்டை எனவும் இருந்து, தற்போது தேனாம்பேட்டை ஆனதாக கருதப்படுகிறது.

45) ஆவடி எனும் ஊர், – Armoured Vehicles And Depot of India எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்.

46) நரி மேட்டில் இருந்து, பள்ளத்தில் மண்ணடித்து சமமாக்கிய இடம் மண்ணடி.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>