தொல்லியல் துறையிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் தூண்டுதலே கீழடி அகழாய்வுக்கு அடுத்த மாதம் மூடு விழாவா?

தொல்லியல் துறையிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் தூண்டுதலே கீழடி அகழாய்வுக்கு அடுத்த மாதம் மூடு விழாவா?

தொல்லியல் துறையிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் தூண்டுதலே கீழடி அகழாய்வுக்கு அடுத்த மாதம் மூடு விழாவா?

தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட கீழடி அகழாய்வு வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக வருகின்ற தகவல்கள் காரணமாக தமிழர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் மணலூருக்கு அருகே மத்திய தொல்லியல் துறையால் தொடங்கப்பட்ட கீழடி அகழாய்வு, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் தமிழகத்தில் செழித்து விளங்கியது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த கீழடி அகழாய்வு, தமிழர்களின் ஒட்டு மொத்த வரலாற்றையே புரட்டிப்போட்டது.

இதன் காரணமாக இந்தியா மட்டுமன்றி உலகமே கீழடி அகழாய்வின் முடிவுகள் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கியது. இரண்டு கட்ட அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள், 6 ஆயிரத்திற்கும் அதிகமான பழம் பொருட்கள் என தோண்டத் தோண்ட தமிழர்களின் பழங்கால நாகரிகம் வெளிப்படத் தொடங்கியது.

இந்நிலையில் 2ஆம் கட்ட அகழாய்வின்போது, கண்டறியப்பட்ட சாயத்தொட்டி, கழிவுநீர் வெளியேறும் வாய்க்கால்கள், உறைகிணறுகள் என மிகச் செழுமை மிக்க தமிழர் நாகரிக வாழ்வியல் முறை கண்டறியப்பட்டது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் கண்டறியப்பட்ட தொல்லியல் சின்னங்களுள் சில கிறிஸ்துவுக்கு முற்பட்ட பழமையைக் கொண்டதாக அறிவித்தார்.

தமிழகத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுள் ஒன்றாக கீழடி மாறியுள்ளதைத் தொடர்ந்து, தமிழர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் கீழடி அகழாய்வில் முக்கிய கவனம் கொடுக்கத் தொடங்கினர்.

கடந்த 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு கீழடி அகழாய்விற்கு மத்திய அரசும், மத்திய தொல்லியல் துறையும் போதுமான முக்கியத்துவம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த பிப்ரவரியில் அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக கடந்த மே மாதம் 27ஆம் தேதி பூமி பூஜையுடன் மூன்றாம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

இதற்கிடையே முதல் இரண்டு கட்ட அகழாய்வின்போது கீழடிக்குப் பொறுப்பாக இருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அஸ்ஸாமுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர் அகழாய்வில் ஈடுபட்டிருந்த ஓர் அலுவலரை பணியிட மாற்றம் செய்தது மிகவும் தவறு என்றும், இது கீழடி அகழாய்வை மழுங்கச் செய்யும் முயற்சி எனவும் மத்திய தொல்லியல் துறையின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் கீழடி அகழாய்வை முடிவுக்குக் கொண்டு வர மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளதாகவும், மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்களை மக்களின் பார்வைக்கு வைக்காமலேயே, மூட்டை கட்டி மைசூரு ஆவணக் காப்பகத்திற்கு கொண்டு செல்ல முயற்சி நடப்பதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த மே மாதம் பூமி பூஜை நடைபெற்றபோதே, கீழடிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் ஸ்ரீராமன், கீழடியில் நடைபெறும் ஆய்வில் வெளிக்கொணரப்படும் தொல்லியல் பொருட்கள் மற்றும் ஆய்வுகள் குறித்து அவ்வப்போது தகவல் பகிர்வதற்காக ‘கீழடி மீடியா குரூப்’ என்ற பெயரில் வாட்ஸப் குழு ஒன்றை உருவாக்கினார்.

ஆனால் இன்றைய நாள் வரை மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட எந்தவொரு கண்டுபிடிப்புகளுமோ அல்லது தகவல்களோ பகிரப்படவேயில்லை. ஒரே ஒரு முறை கீழடி அகழாய்வுக் களத்தில், பார்வையிட வரும் நபர்கள் பார்த்துச் செல்வதற்காக ஃபிளக்ஸ் பேனர்கள் 16 எண்ணிக்கையில் வைக்கப்பட்டிப்பதாக அக்குழுவில் தகவல் வந்தது. அந்த பேனரிலும் இடம் பெற்றவை அனைத்தும் கடந்த இரண்டு கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களின் படங்கள் மட்டுமே. மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட எந்த பொருட்களும், தகவல்களும் அதில் இடம்பெறவில்லை.

இது குறித்து டெல்லியைச் சேர்ந்த தற்போது ஓய்வு பெறும் வயதிலுள்ள மூத்த தொல்லியல் அலுவலர் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டு கூறிய தகவல்களாவன, ‘கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லியில் மத்திய தொல்லியல் துறைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கீழடி அகழாய்வை முடிவுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டு அதற்குரிய உத்தரவு வாய்மொழியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை எக்காரணத்தை முன்னிட்டும் பத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரியப்படுத்தப்படாமல் மைசூருக்குக் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

மூன்றாம் கட்ட அகழாய்வு என்பது மத்திய தொல்லியல் துறையின் சார்பாக நிகழ்த்தப்பட்ட கண்துடைப்பு வேலைதான். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கீழடியைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடி அகழாய்வை மூன்று ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்வோம் எனக் கூறியதன் அடிப்படையில் தற்போது ஆய்வினை நிறைவு செய்கிறார்கள். அதேபோன்று தற்போது கிடைத்துள்ள பொருட்கள் குறித்த விவரங்கள் எதுவும் நீதிமன்றத்தின் கண்ணில் படக்கூடாது என்பதும் இவர்களது நோக்கமாக உள்ளது’ என்றார்.

மேலும் அந்த அதிகாரி கூறுகையில், ‘கீழடி தொடர்பாக நடைபெறும் எந்த விசயமும் அமைச்சர் மகேஷ் சர்மாவுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. தொல்லியல் துறையிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் தூண்டுதலே இதற்குக் காரணம்’ என்று அதிர்ச்சிகரமான தகவலையும் சொன்னார்.

மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நிறைவு என்பதே சரி.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முறையே 2015 & 2016 ஆகிய வருடங்களில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. இரண்டு கட்ட ஆய்வுகளும் சனவரி தொடங்கி செப்டெம்பர் வரை மட்டுமே நடந்தது.

அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை “வடமேற்கு பருவமழை காலம் ” என்பதால் ஆய்வுகளை மேற்கொள்ள இயலாது. அவ்வகையில் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு செப்டெம்பர் முடிய முடிவுக்கு வருகிறது.
இப்போது நாம் செய்யவேண்டியது நான்கு விடயங்கள்…

1) மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன என்ற பட்டியலையும், ஒளிபடத்தையும் வெளியிட வைக்கவேண்டும். (இதுவரை அதுசார்ந்த ஒரு தகவலும், ஒளிபடமும் வெளிவரவில்லை)

2) 4-ஆம் கட்ட அகழாய்வு சனவரியிலேயே தொடங்க அழுத்தம் தரவேண்டும். (மூன்றாம் கட்ட அகழாய்வு நிதி ஒதுக்கல், அகழாய்வுக்கு மொத்தமாக முடிவுகட்ட என பல்வேறு உள்ளடி வேலைகள், கண்காணிப்பாளர் & கோ. மாற்றம் என நடந்து, தாமதமாக மே மாதம்தான் அகழாய்வு தொடங்கியது). இம்முறை அதுபோல் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3) தென்னிந்திய தொல்லியல் தலைமையகமான மைசூருக்கு அப்பொருட்களை எடுத்து செல்லாமல் இங்கேயே பாதுகாக்க ஏற்பாடு செய்யவேண்டும். அதற்கான அழுத்தத்தை நாம் தரவேண்டும்.

4) கார்பன் பகுப்பாய்விற்கு (பீட்டா அனாலிசிஸ்-அமெரிக்கா) இம்முறை குறைந்தபட்சம் 10 மாதிரிகளையாவது அனுப்பவேண்டும். (கடந்தமுறை 2 மாதிரிகள் மட்டுமே அனுப்பப்பட்டது என்பதை நினைவிற்கொள்க). அதற்கான நிதியை அதிகப்படுத்தவேண்டும் (முதல் இரண்டு கட்ட அகழாய்வு மாதிரி பொருட்கள் ஆய்வுக்கு அனுப்ப 1 இலட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டது)

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் காலப் பழமையைக் கூறி நாடாளுமன்றத்திலேயே பெருமை பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, உடனடியாகத் தலையிட்டு கீழடியில் தொடர் அகழாய்விற்கு வழி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதனை முடிவுக்குக் கொண்டு வரக்கூடாது என்பதே தமிழர்களின் விருப்பமாக இருக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: