”கரூர், அமராவதி ஆற்றில், பழமையான கிரேக்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது,” என, சேலம், பாராமஹால் நாணயவியல் சங்க இயக்குனர் சுல்தான் தெரிவித்தார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
சேலத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில், கரூர், அமராவதி ஆற்றில் மணல் எடுத்த போது, கரையின் ஒரு பகுதியில், கிரேக்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது. அதை எடுத்த தொழிலாளியிடம் இருந்து, ஆய்வுக்கு பாராமஹால் நாணயவியல் சங்கம் சார்பில் வாங்கி வந்து, பாதுகாத்து வருகிறேன். நாணயத்தின் முன்புறம் கிரீக் நாட்டு இளவரசி, மறுபுறம் மன்னர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. உலோகம், செம்பை கொண்டுள்ள இந்த நாணயம், 7.70 கிராம் எடை உள்ளது.
அதில் உள்ள எழுத்துக்கள் மூலம், கி.மு., 320 ம் ஆண்டு காலத்தில் நாணயம் புழக்கத்தில் இருந்துள்ளது தெரிகிறது. இளவரசி தலைமுடியின் பின் விளிம்பில், கிரீக் எழுத்தும், மன்னர் தலையின் இடது புறம், தலைக் கவசத்தின் மீது, மூன்று எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. முழு வட்ட வடிவமின்றி, கைகளில் வெட்டி வடிவமைக்கப்பட்டதாக உள்ளது.
இது, உலக வரலாற்றில் வல்லமை மிகுந்த நாகரிகமாக கருதப்படும் கிரேக்க நாகரிகத்துடன், தமிழகம் தொடர்பில் இருந்ததையே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.