முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்!

முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்!

முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்!

பண்டைய காலத்தில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டன. கோழிச்சண்டையில் வீரமரணம் அடைந்த கோழிக்கு இந்தளூர், அரசலாபுரம் ஆகிய இடங்களில் நடுகல்லும்; கள்ளனையும், விலங்குகளையும் கொன்ற நாய்களுக்கு எடுத்தனூர், அம்பலூர் ஆகிய இடங்களில் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


செங்கம் வட்டம் எடுத்தனூரில் நாய்க்கு எடுத்த நடுகல் உள்ளது. இந்நடுகல் முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34ஆவது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும். தொறுப்போரில் வீரமரணம் அடைந்த கருந்தேவகத்தியுடன் கோபாலன் என்னும் நாயும் இறக்க, அதற்காக எடுக்கப்பட்ட நடுகல் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.

“கோவிசைய மயிந்திரபருமற்கு முப்பத்து நான்காவது வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கை ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்னெருமைப் புறத்தே வாடிப்பட்டான் கல்’ என்ற வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. நடுகல்லில் வீரனது உருவம் இடதுபுறம் பார்த்த நிலையில், இடதுகையில் வில்லும், வலதுகையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். இவ்வீரனது காலின் பக்கத்தில் நாயின் உருவமும், சிமிழும், கெண்டியும் காணப்படுகின்றன. நாயின் பின்புறம் ” கோபாலன் னென்னுந் நாய் ஒரு கள்ளனைக் கடித்துக் காத்திருந்தவாறு’ என்ற வட்டெழுத்து வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி வட்டம், அம்பலூரிலும் மூன்று நடுகற்களை முனைவர் சு.இராசுவேலு என்பவர் கண்டறிந்துள்ளார். இதில் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல் நாய்களுக்காக எடுக்கப்பட்டதாகும். அம்பலூரைச் சார்ந்த கோவன் என்பவனின் நாய்களான முழகனும் வந்திக்கத்தியும் பன்றிகளைக் கொன்று இறந்தமைக்காக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் கீழே இரு பிரிவுகளாக இரண்டு பன்றிகளுடன் சண்டையிடும் இரண்டு நாய்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் பல்ராம் கொல்லரஹட்டை எனும் ஊரில் புனிதா என்ற வேட்டை நாய், காட்டுப்பன்றியைக் கொன்று தானும் உயிர்விட்டதால், அந்நாய்க்கு நடுகல் எடுத்துள்ளனர். கடப்பை மாவட்டம் “லிங்கலா’ என்ற கிராமத்தில் போரகுக்கா என்ற நாய் தன் எஜமான் இறந்துவிட, அதுவும் இறந்துவிடுகிறது. அதனால், அந்நாய்க்கும் நடுகல் எடுக்கப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

திருநெல்வேலி – மன்னார்கோவிலில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் இராமானுஜ ஆச்சாரியார். இவரிடம் ஊர்க்காடு ஜமீன்தார் சோதிட கணக்கியலைப் பரிசோதிப்பதற்காக “வருங்காலம் கூறும் வல்லவரே! நம்முடைய சமீனில் வளரும் நாய் எத்தனை குட்டி போடும் என்று உம்மால் சொல்ல முடியுமா? அவ்வாறு நீங்கள் சொல்பவைப் போல நாய்க்குட்டி போட்டால் ஆண்டொன்றுக்கு 12 கோட்டை நெல் தருகிறேன்’ என்று கூறியதோடு, செப்பேட்டிலும் பொறித்து வழங்கியுள்ளார்.

“ஜமீன்தார் அவர்களே! உங்களுடைய நாய் ஆறு குட்டி போடும். அதில் ஒன்றை நாய் தின்றுவிடும். மீதமுள்ள 5 குட்டிகளில் 2 பெண், 3 ஆண். ஆண் குட்டிகள் கருப்பு வெள்ளை நிறத்திலும், பெண் குட்டிகள் மாநிறத்திலும் இருக்கும்’ என்று கூறியுள்ளார் இராமானுஜ ஆச்சாரியார். கணியன் சொன்னதைப் போலவே நடந்தது. ஆனால், ஜமீன்தார் தான் கொடுத்த வாக்குறுதிப்படி ஆண்டிற்கு 12 கோட்டை நெல் தர முடியாது என மறுத்துவிட்டார். இவ்வழக்கு திருநெல்வேலி ஆங்கிலக் கலெக்டரிடம் சென்றது. வழக்கை தீர விசாரித்த ஆங்கிலேயக் கலெக்டர், இராமானுஜ ஆச்சாரியாருக்குச் செப்பேட்டு வாசகங்களின்படி ஆண்டிற்கு 12 கோட்டை நெல் கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டுத் தீர்ப்பெழுதினார்.
இந்தத் தீர்ப்பின்படி ஆச்சாரியாரின் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமணவாள மாமுனிவரின் பாலூராள் கோமடத்தைச் சேர்ந்த திருவேணி சம்பந்தத்தார் 12 கோட்டை நெல் பெற்று வந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: