நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் செப். 30ல் நிறைவு-ஆவணப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

தமிழகத்தில் பழந்தமிழர் பெருமையை பறைசாற்றும் தொன்மை மிக்க 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. கீழடிக்கு இணையான தொன்மை மிக்க பொருட்கள், நெல்லை தாமிரபரணி நதிக்கரையோரங்களில் காணப்படும் கிராமங்களிலும் கிடைத்து வருகின்றன. பொருநை என போற்றப்படும் தாமிரபரணியின் ஆற்றங்கரையில் கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை என தொன்மை சிறப்பு மிக்க பல ஊர்கள் காணப்படுகின்றன. இந்த ஊர்களில் கிடைத்துள்ள பழம்பொருட்கள் வெளிநாட்டவர்களையும் வியந்து பார்க்க வைக்கின்றன.

தமிழகத்தில் கீழடி, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை உள்ளிட்ட 7 இடங்களிலும் அகழ்வு நடத்திட தமிழக தொல்லியல் துறை மத்திய அரசிடம் பெற்ற உரிமம் வரும் 30ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. எனவே இந்த 7 இடங்களிலும் தோண்டிய குழிகளை மூடி, கண்டெடுத்த பொருட்களை காட்சிப்படுத்தும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைப் பொருத்தவரை தொல்பொருள் ஆய்வு நடந்த 3 இடங்களிலும் இதற்கான பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரில் காணப்படும் பறம்பு மலையில்   கண்ெடடுக்கப்பட்ட பழம்பொருட்கள் ஏராளம். மண்ணால் ஆன மண்பாண்டங்கள், அதிக அளவில் எலும்புகள், மண்டையோடுகள், இரும்பு ஆயுதங்களும் அங்கு கிடைத்தன. ஆதிச்சநல்லூரில் ஈமத்தாழிகளை புதைப்பதற்கு என பாறைகளில் தனித்தனியாக உட்குடைவுகள் உள்ளன. வரலாற்று காலத்திற்கு முந்தைய ஈமக்காடு பகுதிகளில் ஆதிச்சநல்லூர்தான் பரந்தது என வரலாற்று அறிஞர்கள் ஒப்பு கொள்கின்றனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரை 847 தொல்பொருட்களும், பழங்கால மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் சில மாதங்களுக்கு முன்பு தமிழக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தொடங்கிய ஆய்வு பணிகளும் வரும் செப். 30ம் தேதியோடு நிறைவுபெற உள்ளன.

 இதையொட்டி அங்குள்ள குழிகள் மூடப்பட்டு அங்கு கிடைத்த பொருட்களை, ஆதிச்சநல்லூர் அருகேயுள்ள புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையத்தில் அடுக்கி வைத்துள்ளனர். ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழி, சிறிய கிண்ணங்கள், தாழிகள் மேல் வரையப்பட்ட ஓவியங்கள், மண்கலங்கள், புகைப்போக்கி உள்ளிட்டவை தனித்தனியே பிரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் இருந்து 31 கிமீ தொலைவில் உள்ள சிவகளை பகுதியிலும் வரும் 30ம் தேதியோடு இவ்வாண்டுக்கான ஆய்வு நிறைவு ெபறுகிறது. அங்கு கிடைக்கப்பெற்ற வண்ண கலயங்கள், குடுவைகள், உமி நீங்கிய நெல்மணிகள் உள்ளிட்ட பல்ேவறு பொருட்களை ஆவணப்படுத்தி வருகின்றன. அங்கு தோண்டப்பட்ட 7 குழிகளில் 6 குழிகள் மண் போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் அதில் நீர் புகாத வண்ணம் கூரை வேய்ந்து, பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் தள்ளி நின்று பார்வையிடும் வகையில் கண்ணாடி வேயப்பட உள்ளது. பறம்பில் உள்ள ஒரு குழி மட்டும் மூடப்படாமல் உள்ளது. சிவகளை அகழ்வாராய்ச்சி இயக்குனர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் கிடைத்த பொருட்களை தொகுத்து வருகின்றனர்.

இடைச்சங்க காலத்தில் பாண்டியர்களின்  தலைநகராகவும், துறைமுகமாகவும் விளங்கிய கொற்கையிலும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு அகழ்வு பணிகள் நிறைவு பெறுகின்றன. இங்கு கிடைத்த முத்துக்கள், கருப்பு வண்ணபூச்சு கொண்ட பானை ஓடுகள் மிகவும் பழமையானவையாக தென்படுகின்றன. அரேபியம், யவனம், எகிப்து நாடுகளோடு பாண்டியநாடு கொண்டிருந்த வணிக தொடர்பை விளக்கும் வகையில் பல தொல்பொருட்கள் கொற்கையில் கிடைத்துள்ளன.

 நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் தொன்மை மிக்க இடங்களில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய அகழ்வாய்வு பணிகள், பருவமழையை கணக்கில் கொண்டு இம்மாதம் நிறைவு பெறுகிறது. இதில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இடம் பெறுகின்றன. அடுத்தாண்டு மத்திய தொல்பொருள் துறையின் அனுமதி பெற்று மீண்டும் ஆய்வு பணிகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: