ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணி நிறைவு: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு.!

 

செய்துங்கநல்லூர், அக். 3: ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் நடந்து வந்த தொல்லியல் அகழாய்வு பணிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் கடந்த பிப்.26ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 6 மாத காலமாக இப்பணிகள் நடந்து வந்தது. ஆதிச்சநல்லூர் ஊரின் மையப்பகுதி மற்றும் கால்வாய் கிராமத்திற்கு செல்லும் வழியில் என சுமார் 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கொற்கையில் நடந்து வந்த அகழாய்வு பணியில் 1000க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொற்கையை பொருத்தவரை பாண்டிய மன்னனின் தலைநகரமாகவும், மிகப்பெரிய வாணிப பட்டினமாகவும் இருந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடந்துள்ளது. மேலும் 1967-68ம் ஆண்டு கொற்கையில் முதல்முறையாக அகழாய்வு பணிகள் நடந்துள்ளது. அதன் பிறகு தற்போதுதான் அகழாய்வு பணிகள் நடந்துள்ளது. இங்கு குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கறுக்கும் தொழில்கூடம் இருந்ததற்கான அடையாளங்கள், வெளிநாடுகளுடன் வாணிப தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள், சங்குகள், சங்கு வளையல்கள், வண்ண பாசிமணிகள், பானைகள், ரோம் நாட்டு பானை ஓடுகள், சீன பானை ஓடுகள், சுடுமண் உருவபொம்மைகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>