பரமக்குடி அருகே பானைகள், எலும்புகள், சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு!

பரமக்குடி அருகே பானைகள், எலும்புகள், சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு!

பரமக்குடியில் வைகை ஆறு செல்லும் கரையோரத்தை ஒட்டிய கிராமம் ஒன்றில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வைகை ஆறு பாயும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளான ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுக்குச் சான்றாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல் பொருள்கள் கிடைத்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் நடந்த தொல்பொருள்கள் குறித்த முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 5 கட்டங்களாக இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நகரமைப்புகள், மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றின் முகமாக விளங்கிவரும் ஆற்றங்கரை அருகில் உள்ள அழகன்குளத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்விலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்தன. மேலும் கிழக்குக் கடற்கரை பகுதியின் துறைமுக நகரமாக விளங்கிய தொண்டிப் பகுதியிலும் பழைமை மிக்க தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் வைகை ஆறு பாயும் பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் உள்ள ராக்கப்பெருமாள் கோயில் திடலில் நிலப்பகுதியைச் சீர்படுத்தியபோது சுடுமண் ஓடுகள் தென்பட்டன. இதனால் இப்பகுதியில் முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் வைகை நாகரிகம் தொடர்பான சான்றுகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

ஆய்வின்போது பானைகள், எலும்புகள், செங்கல் போன்றவை உடைந்த நிலையில் கண்டறியப்பட்டன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் கருவேல மரங்களுக்கு இடையேயான பகுதியில் சுடுமண் உறைகிணறு ஒன்றும் அப்பகுதியில் உள்ள இளைஞர்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேல்பகுதி தடிமனாக வடிவமைக்கப்பட்ட நிலையில் 4 சுடுமண் உறைகள் வெளியே தெரிகின்றன.

மூலவைகை பகுதியான வருசநாடு மலைப்பகுதி தொடங்கி கடல் பகுதியான கச்சதீவு வரை வைகை நாகரிகம் பரவியுள்ளது. சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கிடைத்த பொருள்களைப் போன்றே பாம்புவிழுந்தான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும் உள்ளன. இது வைகை நாகரிகம் பரவலாக இருந்து வந்ததற்குச் சான்றாக உள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறையினர் முறையான ஆய்வுகளை இப்பகுதியில் நடத்த முன்வர வேண்டும். அதன் மூலம் தமிழர்களின் பழைமையான வாழ்க்கை வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>