தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

Robert_Caldwell

திராவிட இயக்கங்கள் தமிழ்ப் பூச்செடி மீது கால்டுவெல் கொண்ட காதலால் கொண்டாடவில்லை? தமிழ்ப் பூச்செடியோடு அவர் ஊன்றி வைத்த நச்சு விதை “திராவிடம்” மீதும் காதல் கொண்ட காரணத்தாலே கால்டுவெல் கொண்டாடப்படுகின்றார்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

அயர்லாந்து மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்தவர் தமிழறிஞர் கால்டுவெல். தமிழறிஞர் கால்டுவெல் கிறித்துவ சமயப் பரப்புரைக்காக இங்கு வந்தவர். அவர் தமிழ் மொழியின் சிறப்பினை அறிந்து தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர் நாளடைவில் தமிழில் பெரும் புலமை பெற்று தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்க்கைப் பணியாக ஏற்றுக் கொண்டார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


வட மொழியிலிருந்து தமிழ் தோன்றிய மொழியல்ல, அது தனித்தன்மை வாய்ந்த மொழியாகும் என்றும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய தென்னிந்திய மொழிகளெல்லாம் தமிழிலிருந்து தோன்றியவை என்றும் தனது ஆய்வின் முடிவாக கண்டறிந்து வெளியிட்டார். இதற்காக தமிழர்களாகிய நாம் அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

கால்டுவெல் இருநூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது கருணாநிதியும், செயலலிதாவும் அவருடைய தமிழ்ப் பணியை போற்றிப் புகழ்ந்தவாறு போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை விடுத்தனர். தமிழறிஞர் கால்டுவெல் மீது மட்டும் இவ்வளவு அக்கறை ஏன்?

திராவிட இயக்கங்கள் தமிழ்ப் பூச்செடி மீது கால்டுவெல் கொண்ட காதலால் கொண்டாடவில்லை. தமிழ்ப்பூச் செடியோடு அவர் ஊன்றி வைத்த நச்சு விதை “திராவிடம்” மீதும் காதல் கொண்ட காரணத்தாலே கால்டுவெல் கொண்டாப்பட்டாரா?

கால்டுவெல் தமிழை உயர்த்திப் பிடித்த அதே வேளையில், தமிழிலிருந்து பிரிந்து ஆரியமாகிப் போன மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளையும் இணைத்து “திராவிடக் குடும்பமொழிகள்” என்று பெயரிட்டு அழைத்ததை தமிழ்த் தேசியர்களாகிய நாம் ஏற்க முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு தேசிய இனத்தையோ, ஒரு தேசிய மொழியையோ, ஒரு தேசியப் பண்பாட்டையோ குறிக்கும் சொல் அல்ல. அது மட்டுமன்றி, திராவிடம் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கும் காணப்பெறாத சொல்லாகும். சங்க இலக்கிய நூல்களில் ஆரியம், தமிழ், தமிழ்நாடு, தமிழன் போன்ற சொற்களே மிகுதியாக உண்டு. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலில் கால்டுவெல் தமிழ் நூலில் இல்லாத அந்த திராவிடச் சொல்லை ஒரு வழியாய் அலைந்து திரிந்து ஆரியர்களின் நூலான மனுஸ்மிருதியில் தேடிக் கண்டு பிடித்ததாக ஒப்புக் கொள்கிறார்.

மனுஸ்மிருதி ஆரிய தர்மக் கோட்பாட்டை நிலை நிறுத்தும் சமஸ்கிருத நூலாகும். திராவிடர் என்றால் யாரென்பதை மனுஸ்மிருதி பின் வருமாறு கூறுகிறது:

“நான்கு வர்ணத்தார்களில் ஒரு பிரிவினராகிய சத்திரியர்கள் தங்கள் புனிதச் சடங்குகளை செய்ய மறுத்தும், பார்ப்பனர்களை புறக்கணித்தும் வாழ்ந்து வந்தால் அவர்கள் கீழ்நிலை அடைந்த ஒரு இனமாக கருதப்படுவர். அப்படி கருதப்படுவோரே திராவிடர் என்போராவார்.” மேலும், கால்டுவெல் கூறுகிறார்: “மனுஸ்மிருதியில் நான் காணும் சிறந்த சொல் இதுவே என்றாலும் அதுவும் குழப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. அது தகுதிபாடுள்ள சொல் தான். தமிழ் என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் பெயர் ‘திராவிட’ என்பதால் இச்சொல் ‘திராவிடர்’ என வழங்கப்பெறும் மக்கள் வாழும் நாட்டையும் அம்மக்கள் வழங்கும் மொழியையும் ஒரு சேரக் குறிக்கும்”

கால்டுவெல் கூற்றுப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துதம், கோதம், கோண்ட் போன்ற மொழிகள் தோன்றுவதற்கு ஒரு மூல மொழி (Proto language) இருந்திருக்கிறது. அதிலிருந்து உருவானது தான் மேற்கண்ட மொழிகள். இவற்றில் தமிழும், தெலுங்கும் அந்த மூல மொழியில் தோன்றிய மூத்த மொழிகள். தெலுங்கிலிருந்து கன்னடமும், தமிழிலிருந்து மலையாளமும் பிறந்தன. அந்த மூலமொழிக்கு ஒரு பொதுப் பெயர் தேவைப்பட்டது. அதை வட மொழி நூலான மனுஸ்மிருதியில் எடுத்துக் கொண்டார் கால்டுவெல். அது தான் திராவிடம். அது தான் Proto Dravidian language மூலத் திராவிட மொழி.

அவர் கருத்துப்படி ஒரு மொழிக் குடும்பத்தின் பெயர் தான் திராவிடம். சமஸ்கிருத மொழிக் குடும்பம் இருப்பதால் “சமஸ்கிருதர்” என்று ஓர் இனம் இல்லையோ, அதுபோல் திராவிட மொழிக் குடும்பம் என்று இருப்பதால் “திராவிடர்” என்று ஓர் இனம் இருக்க முடியாது. திராவிடர் என ஒரு மரபினம் இருந்ததாக எந்த வரலாற்று ஆதாரங்களை வழங்கவும் முன்வராமல் தமிழர்களை திராவிடர் என்று கால்டுவெல் அழைத்தது ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் “தமிழ் வரலாறு” எனும் நூலில், தமிழ், தமிழர், தமிழம் என்பதை சரியாக ஒலிக்கத் தெரியாமல் அயல் இனத்தவராகிய ஆரியர் த்ரமிள, திராவிட என்று அழைத்து வந்தனர். தஞ்சாவூர் என்று ஒலிக்கத் தெரியாத ஆங்கிலேயர்கள் டேஞ்சூர் என்று கொச்சையாக அழைத்து வந்ததைப் போல ஆரியர்களும் த்ரமிள, திராவிட என்று கொச்சையாக அழைத்தனர்” என்பார்.

மேலும், “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்” எனும் நூலில், தமிழையும் சேர்த்து திராவிட மொழிக் குடும்பம் என்று கால்டுவெல் பெயரிட்டதை வன்மையாக மறுத்தார். தமிழைத் தனியாக குறிக்க வேண்டுமென்றும் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளையே திராவிட மொழிகளாக குறிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பாவாணர் காலத்தில் வாழ்ந்து வந்த பெரியார் மேற்கூறிய பாவாணரின் கூற்றுகளை ஏற்று நடக்க முன் வரவில்லை.

கால்டுவெல் போட்ட ‘திராவிட’ நச்சு விதைக்கு பெரியார் நீருற்றி செடியாக்கினார். அவற்றை அண்ணா மரமாக்கினார். அவரின் வாரிசுகள் பழம் பழுக்க வைத்து தமிழர்களை உண்ணப் பழக்கி விட்டனர். தவறு, தமிழர்களை பாழாக்கி விட்டனர் என்பதே சரி.

கால்டுவெல் பிறந்த இந்நாளில் அவர் எழுதிய திராவிட வரலாற்றுத் தவறை திருத்தியெழுதுவோம்! எமது தேசிய இனம் தமிழர்… எமது தேசியமொழி தமிழ்… எமது தேசம் தமிழ்த்தேசம்… என்றே எங்கும் எப்போதும் எழுதிடுவோம்! முழங்கிடுவோம்!

  • தமிழறிஞர் கால்டுவெல் பிறந்த நாள் (07.05.1814)
  • “திராவிடம் தமிழ்த்தேசியம்” என்ற நூலிளிருந்து…….
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>