ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் உற்சாகம்

ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்திய பானை ஓடுகளின் துண்டுகளும் கிடைத்து வருவதால் கொற்கை கடல்வழி வாணிக நகரமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்  சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வும், கொற்கையில் முதற்கட்ட அகழாய்வும் பிப்.26ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொற்கையில் 75 ஆண்டுக்கு முன் நடந்த அகழாய்வில், கொற்கை பாண்டியரின் தலைநகரமாகவும், துறைமுகம் இருந்ததும்  கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அகழாய்வு நடத்தப்படாததால் கொற்கை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் வந்துள்ளன. தற்போது மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தனிப்பட்டவர்களின் இடங்களில் 16 குழிகளும், மாரமங்கலத்தில் ஒரு குழியும் என 17 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.

இப்பணியில் அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையில் அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன், ஆய்வு மாணவர்கள் 6 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அகழாய்வில் சங்க இலக்கியத்தில் கூறப்படும் 3 ஆயிரம் ஆண்டுகள் மிகப்பழமையான 29 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானமும், மற்றொரு குழியில் 9 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் சுடுமண் குழாய்களும், இதனருகே அழகிய முழு சங்குகள், சங்கு அறுக்கப்பட்ட நிலையிலும் ஏராளமாக கிடைத்ததால் இங்கு சங்கு அறுக்கும் தொழிற்கூடங்கள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ஒரு குறியீடு உள்ள பானை ஓடு, சிறிய பானையும், கண்ணாடி மணிகள், இரும்பு பொருட்கள், கடல் சிப்பிகள், கடல் உயிரினத்தின் எலும்புகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட புகைப்பான்கள், விலங்கு உருவம் பொறித்த சுடுமண் சிற்பங்கள் என தொடர்ந்து அரிய வகை பொருட்கள் கிடைத்துள்ளன.  இந்நிலையில் செங்கல் கட்டுமான அடுக்கு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் 2 வாரங்களுக்கு முன் 4 அடி உயரமுள்ள கொள்கலன் கிடைத்துள்ளது. அதனை எடுத்த போது அதற்கு அடியில் மற்றொரு கொள்கலன் இருந்துள்ளது.

இந்த கொள்கலனில் இருந்து பளபளப்பான கருப்புநிற பானை ஓடு துண்டு கிடைத்துள்ளது. கங்கை சமவெளியில் மட்டும் கிடைத்து வந்த பளபளப்பான பானை ஓடு துண்டு, இங்கு கிடைத்துள்ளதால் கொற்கைக்கும், கங்கை சமவெளி பகுதிக்கும் பழங்காலத்தில் வாணிக தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொள்கலன் அருகில் வெளியே மேற்கு ஆசிய நாடான எகிப்தில் எண்ணெய் ஜாடியாக பயன்படுத்திய பானை ஓடுகளின் துண்டுகள் 4 கிடைத்துள்ளது. கொற்கை அருகே மாரங்கலத்தில் நடந்து வரும் அகழாய்வு குழியில் இருந்து கிழக்காசிய நாடான சீன நாட்டு பானை ஓடு துண்டும் கிடைத்துள்ளது. இதனால் கொற்கையில் துறைமுகம் இருந்ததோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுடன் அதிகளவு வாணிப தொடர்பு இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த கொள்கலன் வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதா? பழங்காலத்தில் தானியத்தை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இம்மாத இறுதியோடு அகழாய்வு பணிகள் நிறைவடையும் நிலையில் இரண்டாவது கண்டுபிடித்த கொள்கலனை எடுக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: