சூளகிரி அருகே 300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சூளகிரி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சின்னகானப்பள்ளி யோகராஜ் என்பவரது நிலத்தை சீர் செய்யும்போது 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட சூலம் செதுக்கப்பட்ட கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் வரலாற்று ஆய்வுக்குழு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

தேவதானமாக வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில், வைணவ கோயில்களுக்கு (பெருமாள் கோயில்) சங்கு சக்கர குறியீடு பொறித்த திருவாழிக்கல்லும், சமணகோயில் நிலங்களுக்கு முக்குடைக்கல்லும், சைவக்கோயில்களான சிவன், காளி உள்ளிட்ட கோயில் நிலங்களில், திரிசூலக்குறியுடைய கற்களும் நடப்பட்டிருப்பது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், நமது மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் சூலம் மற்றும் கல்வெட்டுடன் நடப்பட்டுள்ள எல்லைக்கல் இதுவாகும்.

இவை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், நிலம் அளக்கப்பெற்று நிலத்திற்கான எல்லைகளை குறிக்க எல்லைக்கற்கள் நடப்பட்டதை இந்த கல்வெட்டு கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு ஒரு சில கிராமங்களில் மக்களிடம் விவசாய நிலங்கள் பெறப்பட்டு, அவை அருகே உள்ள கோயில்களுக்கு வரி நீக்கப்பட்ட தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய், கோயிலின் தினசரி வழிபாட்டு செலவீனத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது. இதற்கு 2 கிலோ மீட்டர் தள்ளி மற்றோர் சூலக்கல்வெட்டு காணப்படுகிறது. அது மற்றோர் எல்லையாக இருக்கக் கூடும். இன்னும் இரண்டு சூலக்கற்களும், ஒரு கல்வெட்டும் அருகே உள்ள நிலங்களில் இருக்கக்கூடும்.

அவை கிடைத்தால் மேலும் விவரங்கள் தெரியவரும். இங்குள்ள நிலத்தில் சிறு தரைகோட்டையும், கண்காணிப்பு கோபுரமும், அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வுப்பணியில் வரலாற்றுக் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், தொல்லியல் ஆய்வாளர் சதாநந்தகிருஷ்ணகுமார், பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: