ஆங்கிலோயரை எதிர்த்த ஹைதர் அலிக்கு உதவிய தீரன் சின்னமலை!

ஆங்கிலோயரை எதிர்த்த ஹைதர் அலிக்கு உதவிய தீரன் சின்னமலை!

ஆங்கிலோயரை எதிர்த்த ஹைதர் அலிக்கு உதவிய தீரன் சின்னமலை!

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் (1756) பிறந்தவர். இயற்பெயர் தீர்த்தகிரி. பள்ளிப் பருவத்தில் ‘சர்க்கரை’ என அழைக்கப்பட்டார். இளம் வயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் ஆகிய போர்ப் பயிற்சிகளைக் கற்றார்.

அப்பகுதி, மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குப் போவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்குச் சென்ற இவர், வரிப்பணத்தைக் கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார். ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்’ என்று வரி கொண்டு சென்ற ஊழியரிடம் கூறினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அப்போதிருந்து, ‘சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார். நம் நாட்டை கிழக்கிந்திய கம்பெனியினர் அடிமைப்படுத்தி வருவதை தடுக்க விரும்பினார்.

ஹைதர் அலியின் மறைவுக்குப் பிறகு, கிழக்கிந்திய கம்பெனியினரை எதிர்த்து திப்பு சுல்தான் கடும் போர் செய்தார். சின்னமலையும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு மைசூர் சென்றார். சித்தேஸ்வரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய இடங்களைக் கைப்பற்ற திப்புவுக்கு துணை நின்றது இவரது படை.

நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்த பிறகு சொந்த பூமி திரும்பிய இவர், ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி போருக்குத் தயாரானார். அங்கு இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். பிரெஞ்சுக்காரர்கள் உதவியுடன் பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. விருப்பாச்சி கோபால நாயக்கர், மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியோருடன் இணைந்து கோவைக் கோட்டையைத் தகர்த்து கம்பெனியின் 5-ம் பட்டாளத்தை அழிக்கத் திட்டமிட்டார். எதிர்பாராத சில நிகழ்வுகளால் இந்த புரட்சிப் படை தோல்வியுற்றது.

போர்களிலும், இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும், பல கோயில்களுக்கு திருப்பணிகளும் செய்தார். இவரது கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை பட்டாலி, கவுண்டம்பாளையத்தில் உள்ளன. புலவர்களை ஆதரித்தார். சமூக ஒற்றுமைக்காகவும் பாடுபட்டார்.

1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். இவரது செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட ஆங்கிலேயர் இவரை அழிக்க முடிவு செய்தனர். இவரது ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்க பெரும் பீரங்கிப் படையுடன் வந்தனர். அவர்களிடம் இருந்து சின்னமலை தப்பித்து பழநி மலைத் தொடரில் உள்ள கருமலைக்குச் சென்றார்.

இவரைப் போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை கைது செய்தது. சங்ககிரி கோட்டைக்குக் கொண்டு சென்று போலியாக விசாரணை நடத்தி, தூக்கிலிட்டது.

தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் இவருக்கு சிலையும், ஓடாநிலையில் மணிமண்டப மும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது பெயரில் 2005-ல் மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது.

பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்தவரும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவருமான தீரன் சின்னமலை 49 வயதில் (1805) மறைந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: