கொரோனாவின் தொடக்கம் சினாவின் வூஹான் ஆய்வு கூடம் தானா?

வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் என்று குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டப்படும் சீனாவின் வூஹான் பரிசோதனைக் கூடம் இதுதான். (Wuhan Institute of Virology)

அழகு பொலியும் வூஹான் நகரின் ஒதுக்குப்புறத்தில் காடுகள் போர்த்த மலை குன்றின் உச்சியில் 4 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பில் சீனாவின் வூஹான் பரிசோதனைக் கூடத்தின் அமைவிடம்.

கொரோனோ வைரஸ் இங்கே இருந்துதான் வெளியே குதித்து உலகெங்கும் பரவியது என்று ஆதாரம் எதனையும் காட்டாமல் அமெரிக்க ஊடகங்கள் அலறியதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்ற ஒரு மைய ஸ்தானம் இது.

ஆயிரக்கணக்கில் கிருமிகளை சோதித்து அனுபவப்பட்ட இந்த ஆய்வகம் இப்படி ஒரு ‘சோதனையை’ இதற்கு முன் ஒருநாளும் எதிர்கொண்டதில்லை.

கடந்த பல நாட்களாக அது மூடிக்கிடக்கிறது. உள்ளே பணிகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வாயிலில் ஒர் அறிவிப்புப்பலகை மட்டுமே தொங்குகிறது.

அதில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“வலுவான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் உள்ளன. பதற்றப்பட வேண்டாம். அதிகாரபூர்வ அறிவுப்புகளை செவிமடுங்கள். அறிவியலை நம்புங்கள். வதந்திகளைப் பரப்பாதீர்கள்!”
(“Strong Prevention and Control, Don’t Panic, Listen to Official Announcements, Believe in Science, Don’t Spread Rumours”.)

அங்குள்ள அதிகாரிகளை அணுகி என்ன நடந்தது என்பதைக் கேட்டறியச் சென்ற சர்வதேச செய்தியாளர் ஒருவர் மூடிய வாசலில் இந்தப் பலகையை மட்டுமே பார்த்து விட்டுத் திரும்ப நேர்ந்தது. அங்கு பணியில் இருந்த நிபுணர்கள் பலரதும் கைத்தொலைபேசிகள் கடந்த பல நாட்களாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சுட்டு விரல்கள் சீனாவை நோக்கியே நீள்வதால் வைரஸின் வடிவமாக இப்போது உலகின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் இந்தக் கட்டடம் மட்டும்தான்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ‘வைரஸ் வங்கி’ இதுதான் என்று சொல்லப்படுகிறது.

இங்கே சுமார் 1,500 ஆபத்தான கிருமிகளை பிடித்துவைத்து ஆராய்ச்சி நடத்துகின்ற விஞ்ஞானிகள் இன்று நேற்று மட்டும் அல்ல வாழ்க்கை பூராவுமே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள்.

‘எபோலா’ போன்ற மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவும் பயங்கர வைரஸ் வகைகள் இங்கே ‘பி4’ என்ற தனியான பிரிவில் (Class 4 pathogens) கடும் நுண்ணிய பாதுகாப்புக் கண்காணிப்புகளுடன் சோதிக்கப்படுகின்றன.

ஆய்வு கூடத்தில் இருந்து வெளியேறும் காற்றுக் கூட வடிகட்டி சுத்திகரித்த பிறகே வெளியே அனுமதிக்கப்படுகிறது.

உலகெங்கும் P4 என்கின்ற தொற்றும் நுண்ணங்கிகளைச் சோதிக்கும் சுமார் 30 ஆய்வுகூடங்கள் உள்ளன. அவற்றில் அரைவாசிக்கு மேல் அமெரிக்காவில் இயங்குகின்றன. ஆனால் ஆசியாவிலேயே மிகப் பெரியது இந்த வூஹான் ஆய்வு கூடம்தான்.

பிரான்ஸின் பிரபல நுண்ணுயிரியல் ஆய்வுகூடமான Inserm நிறுவகமும் (Jean Mérieux-Inserm laboratories) சீனாவின் வூஹான் ஆய்வுகூடமும் கூட்டுறவின் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயற்படுகின்றன.பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸின் நிபுணத்துவ உதவியுடன்தான் வூஹான் ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டது என்பது பலரும் அறிந்திராத புதிய தகவல்.

தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான இருநாட்டு ஒத்துழைப்புடன் கூடிய செயற்பாடுகளின் அடிப்படையில் வூஹான் ஆய்வுகூடத்தை நிறுவும் பணியில் பிரெஞ்சு நிபுணர்களும் பங்கு கொண்டனர் என்ற விவரம் இப்போது வெளியாகி உள்ளது.

இதனால்தானோ என்னவோ வூஹான் ஆய்வு கூடத்தின் குறைபாடுகளைக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தும் விடயத்தில் பிரான்ஸ் சற்று ‘அமுக்கி வாசிப்பது’ தெரிகிறது.

இருநாட்டு உறவுகளில் ஏற்பட்ட தோல்விகளால் தொற்றுநோய்கள் தொடர்பான பிரான்ஸ் – சீன கூட்டுக் கமிட்டியின் கூட்டங்கள் எதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப்பின் நடத்தப்படவில்லை என்கின்ற ஒரு தகவலும் உள்ளது.

இப்படி சர்வதேச பங்களிப்புகளில் இருந்து விலகி தனித்து இயங்கிய சீன ஆய்வு கூடத்தில் பல் வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தன என்ற தகவல்களை அமெரிக்க ராஜதந்திரிகள் அடிக்கடி பரிமாறியிருக்கின்றனர்.

2018 இல் சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரக ராஜதந்திரிகள் இந்த ஆய்வு கூடத்துக்கு நேரடியாகச் சென்று குறைபாடுகள் இருப்பதைக் கண்டுபிடித்து தகவல் அனுப்பினர் என்று ‘வோஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை சீனா அடியோடு மறுத்திருக்கிறது.

“ஆய்வு கூடத்தில் இருந்தே வைரஸ் தப்பியது என்று சொல்லப்படும் கருத்துகள் பொறுப்பற்ற வார்த்தைகள். கவனத்தை திசை திருப்பும் நோக்கில் பரப்பப்படுபவை. விவேகமுள்ள யாரும் இதனைப் புரிந்து கொள்வர்” என்று அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கிறார் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் Zhao Lijian.

ஆனால் அமெரிக்க இராணுவமே சீனாவில் வைரஸைப் பரப்பியது என்று சில நாட்களுக்கு முன்னர் ஒரு கதையைக் கட்டவிழ்த்து விட்டவரும் இவரேதான்.

சீனாவில் வைரஸ் பரவத் தொடங்கியதும் உடனடியாகவே ஜனவரி 30 ஆம் திகதி அதன் மாதிரிகள் சோதனைக்காகத் தங்களிடம் தரப்பட்டன என்று வூஹான் ஆய்வு கூடத்தின் பணிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார். அறியப்படாத அந்த வைரஸின் மரபணு வரிசையை தரம் பிரித்து அதுபற்றிய தகவல்களை பெப்ரவரி 2 ஆம் திகதி சேகரித்து 11 திகதியே தாங்கள் உலக சுகாதார அமைப்பிடம் வழங்கிவிட்டதாகவும் சொல்கிறார்.

வூஹான் ஆய்வு கூடத்தில் ஏற்கனவே உள்ள வைரஸ் மாதிரிகள் எதனுடனும் புதிய கொரோனா வைரஸ் ஒத்துப் போகவில்லை என்ற முக்கிய தகவலை ஆய்வாளரும் சீனாவின் முக்கிய நிபுணருமான Shi Zhengli என்பவர் வெளியிட்டிருக்கிறார்.அவரது இந்தக் கூற்று ஆய்வு கூடத்தில் இருந்துதான் வைரஸ் வெளிப்பட்டது எனக் கூறப்படுவதை மறுதலிக்கிறது.

பெரும்பாலான விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் வெளவால்களில் இருந்து வேறு இடைநிலை உயிரினங்கள் வழியே மனிதனுக்குப் பரவியதாகவே நம்புகின்றனர்.

வூஹானில் உள்ள விலங்குச்சந்தையில் (wet market) இருந்துதான் முதலில் வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்பதே சீனாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.

ஆனால் சீனாவின் பிறிதொரு விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் அங்கு முதலில் தொற்றுக்கு இலக்காகியவர்களில் எவரும் சர்ச்சைக்குரிய வூஹான் சந்தையுடன் தொடர்பு எதனையும் கொண்டிராதவர்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த விடயம் The Lancet சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இத்தகைய முரண்பட்ட தகவல்கள், ஆய்வு கூடத்தில் இருந்துதான் வைரஸ் பரவியிருக்கக் கூடும் என்று நம்புகின்ற தரப்புகளை வலுவாக்குகின்றன.

இதனை எழுதும் வரை சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேரைக் கொன்று, உலக பொருளாதாரத்தை அடியோடு சரித்துவிட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு யாரைப் பொறுப்பாளி ஆக்குவது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அமெரிக்காவும் முக்கிய ஜரோப்பிய நாடுகளும் தங்களது இழப்புகளுக்குரிய ‘பில்’ லை சீனாவிடம் கொடுக்கத் தயாராகின்றன போலத் தெரிகின்றது.

பூகோள ரீதியான இந்த மாபெரும் அவலத்துக்கு தனியே சீனாவை மட்டும் பொறுப்புக் கூறுவதை ஐ. நா. சபை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

இது விடயத்தில் சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று பின்னராக நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆயுத பரிசோதனைகளுக்காக அனுமதி இன்றியே நாடுகளுக்குள் இறங்குவதற்கு ஐ. நா. குழுக்களுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோன்று வைரஸ் பரிசோதனைகளுக் காகவும் நாடுகளுக்குள் குழுக்களை அனுப்ப உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிறது ஆஸ்திரேலியா.

சர்வதேச விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது பற்றி வல்லரசு நாடுகளின் தலைவர்களோடு ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளது.

வைரஸின் மூலம் எது என்பது இத்தகைய விசாரணைகளில் தெரிய வரலாம். ஆனால் அதற்குள் அடுத்தடுத்துப் பல அலைகளாக இந்த வைரஸின் அழிவுகளை உலகம் சந்தித்தே ஆகவேண்டி இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வைரஸ் வெளவால்களில் இருந்தாலும் சரி ஆய்வு கூடத்தில் இருந்தாலும் சரி அது மனிதர்களிடம் தொற்றுவதற்கு மனிதரே காரணம் என்பதைத்தான் எந்த விசாரணைகளும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்போகின்றன. அதில் சீனர்கள், அமெரிக்கர்கள் என்பன போன்ற தேச வேறுபாடுகள் இருக்கப் போவதில்லை.

அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்காவது இந்த வைரஸோடுதான் வாழ்க்கை என்று உலகத் தலைவர்கள் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே வாழப் பழகுவோம் வைரஸ்களோடு, வேறு வழியே இல்லை.

– குமாரதாஸன், பாரிஸ்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: