கொரோனா-வும் பௌத்தமும்!

Corona and Buddhaகொரோனா தொற்று நோய் காரணமாக முழு உலகமே முடங்கிப் போயுள்ளது. ஆனானப்பட்ட அமெரிக்க வல்லரசு அந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய்க்கு 738,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 39,015 பேர் இறந்து போனார்கள்.

உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,331,085 ஆகவும் இறந்தவர்கள் தொகை 160,759 ஆகவும் உயர்ந்துள்ளன. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கங்களும் மருத்துவர்களும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய காரணம் அது கண்ணுக்குத் தெரியாத எதிரி. கண்ணுக்கு மட்டுமல்ல சாதாரண உருபெருக்கிக்கும் தெரியாதாம். அதனை நுண்ணோக்கி (electron microscope) மூலம்தான் பார்க்க முடியுமாம்.

இப்படியான ஒரு பேரிடர் நேரிடும் போது கோயில்களில் அர்ச்சனை, அபிசேகம், தேவாலயங்களில் பிரார்த்தனை, மசூதிகளில் தொழுகை இடம்பெறும். இம்முறை இந்த வணக்க தலங்கள் மூடிக்கிடக்கின்றன. இவற்றின் பக்கம் வரவேண்டாம் என்று கும்பிட்டு மன்றாடிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இருந்தும் ஒரு சில கோயில் பூசாரிகள், மத போதகர்கள், குருமார்கள் கொரோனா உயிர்க்கொல்லியை விரட்ட யாகம், பிரார்த்தனையில் ஈடுபடத் தவறவில்லை.

இலங்கையில் பவுத்த தேரர்கள் பிரித்தோதி கைகளில் நூல் கட்டிவிடுகிறார்களாம். வீடு வளவுகளில் பிரித்தோதி தண்ணீர் தெளிக்கிறார்களாம். சமய ஆச்சாரியர்களில் பகுத்தறிவு பேசிய ஒரே மனிதர் புத்தர்தான். புத்தர் எந்த அற்புதங்களையும் செய்யவில்லை. சோதிடத்தை நம்பவில்லை. சோதிடம் விலங்கு அறிவியல் என வருணித்தார். சடங்குகளால் பயனில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது அறிவுரைகளைப் பின்பற்றி ஒழுக வேண்டும். கொலை, களவு, பொய், கள், காமம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பவுத்தம் இந்த ஒழுக்கங்களை பஞ்ச சீலம் என வருணிக்கும்.

  • எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.
  • கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக்கொள்கிறேன்.
  • தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருக்கும் பயிற்சி விதியை ஏற்றுக்கொள்கிறேன்.
  • தவறான பேச்சு உரைக்காமல் இருக்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.
  • போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.
  • ஆன்மீகப் பயிற்சி விதி என்பது நாமாகவே கட்டுப் பாட்டுணர்வோடு ஏற்றுக் கொள்ளும் ஒழுக்கம். எல்லாப் பவுத்தர்களும் பஞ்சசீலம் என்று கூறப்படும் ஐந்து ஒழுக்கங்களை ஏற்று அதன் படி தங்கள் தினசரி வாழ்வில் நடந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வொழுக்கங்களைக் கடைப் பிடிப்பதால் படிப்படியாக மற்றவரின் உயிர் மீதும், பொருள் மீதும், கண்ணியத்தின் மீதும், அவர்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை மீதும் மரியாதை ஏற்படுகிறது.

நம் மனது தெளிவடைவதன் மீதும் மரியாதை ஏற்படுகிறது. புத்தர் இந்த ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பது மற்றவருக்கும் நன்மை தரும் என்கிறார்.

‘அன்பும் மரியாதையும் உருவாகி, பயன் தரும் எண்ணமும், சர்ச்சை இன்மையும், அமைதியும், நட்பும், உடன்பாடும் ஏற்படும்’ என்கிறார், புத்தர். இந்த ஐந்து ஒழுக்கங்களையும் கடைப்பிடிப்பது ஒரு பரிசு என்று புத்தர் கூறுகிறார். இந்தப் பரிசு கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் பயன் தரும் என்கிறார். ‘இந்த ஒழுக்கங்களைக் கடைப் பிடிக்கும் ஒருவர் கணக்கிலடங்கா உயிரினங்களுக்குப் பயத்திலிருந்தும், வெறுப்பிலிருந்தும் , மன வேதனை யிலிருந்தும் பெரும் விடுதலையைப் பரிசாகத் தருகிறார்’ மேலும் புத்தர் பண்பினை ‘விடுதலை தரும்’ என்றும் ‘ஒரு முகப்படுத்த உதவும்’ என்றும் இவ் வொழுக்கங்களைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் ஒரு முக்கியப் பலன் ‘மாசற்ற நிலையினால் ஏற்படும் மகிழ்வு’ என்கிறார்.

தங்கள் நலன் மீது அக்கறை இருப்பதாலும் மற்றவர் நலன் மீதும் மகிழ்வின் மீதும் அக்கறை இருப்பதாலும் பௌத்தர்கள் பஞ்சசீலத்தைக் கடைப் பிடிக்கின்றனர்.

ஐந்தாம் ஒழுக்கம்: பௌத்த மதத்தைப் பின் பற்றுவோர் போதை யளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இப்பொருட்கள் மனதைத் தெளிவற்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது. பௌத்த மதத்தைப் பின் பற்றுவதற்குக் காரணம் மனதைத் தூய்மைப் படுத்துவதே. இது மட்டும் அல்ல. போதை அளிக்கும் பொருள் அருந்துவதால் மற்ற சிக்கல்களும் ஏற்படும். புத்தர் கூறுகிறார்: ‘குடிப்பதால் ஆறு வகை அபாயம் ஏற்படுகிறது: செல்வம் குறையும், சச்சரவுகள் அதிகரிக்கும், உடல் நலம் கெடும், கெட்ட பெயர் கிடைக்கும், முட்டால் தனமாக நடந்து கொள்வோம், அறிவுக் கூர்மை குறையும்’. தம்மபதத்தில் புத்தர் எச்சரிக்கிறார்: ‘..மயக்கம் உண்டாக்குகிற குடிவகைகளைக் குடிக்கிறவர், இவ்வுலகத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக் கொள்கிறார்கள்’. பௌத்த வழக்கப்படி இந்த ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்காதோர் மற்ற நான்கு ஒழுக்கங்களையும் கடைப் பிடிக்கச் சிரமப்படுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பகுத்தறிவோடு சிந்தித்து செயலாற்ற வேண்டும். இந்த கொரோனா உயிர்க்கொல்லியை ஒழிக்க வேண்டும் என்றால் மருத்துவர்கள் சொல்லிபடி நடந்து கொள்ளல் வேண்டும்.

– வேலுபிள்ளை தங்கவேலு, கனடா

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: