கன்னிமாரா நூலகத்தின் கலையழகு மிக்க கட்டடம் சொல்லும் கதைகள்!

கன்னிமாரா நூலகத்தின் கலையழகு மிக்க கட்டடம் சொல்லும் கதைகள்!

கன்னிமாரா நூலகத்தின் கலையழகு மிக்க கட்டடம் சொல்லும் கதைகள்!

இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா பொது நூலகத்தின் கலையழகு மிகுந்த பழைய கட்டடம்.

இந்தோ – சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டடம், சென்னையின் அழகு மிகுந்த கட்டடங்களில் ஒன்று.

சென்னையில் 19-ஆம் நூற்றாண்டிலேயே ‘மெட்ராஸ் லிட்டெரரி சொசைட்டி‘ போன்ற சில நூலகங்கள் இயங்கி வந்தாலும், பொது மக்களுக்கென பிரத்யேகமாக ஓர் இலவச நூலகத்தை உருவாக்க வேண்டுமென விரும்பினார் சென்னையின் அப்போதைய ஆளுநரான பாபி ராபர்ட் பூர்க் கன்னிமரா (1886-1890).


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இதையடுத்து அந்த நூலக கட்டடத்திற்கான அடிக்கல் 1890 மார்ச் 22ஆம் தேதியன்று நாட்டப்பட்டது. திட்டமிட்ட காலத்தில் கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு, 1896ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.

ஆனால், அதே ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியன்றுதான் பொது மக்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய கன்னிமாரா பிரபுவின் பெயர் நூலகத்திற்குச் சூட்டப்பட்டது.

அந்த காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் தலைமை கட்டடக் கலை நிபுணராக இருந்த எச். இர்வினால் வடிவமைக்கப்பட்டு, அப்போது சென்னையின் பிரபலமான ஒப்பந்ததாரராக இருந்த நம்பெருமாள் செட்டியால் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.

அந்த காலகட்டத்திலேயே இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஐந்து லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவானது. இங்கு உள்ள மர அலமாரிகளும் மரத்தலான கட்டுமானப் பொருட்களும் விலை உயர்ந்த தேக்கு மரத்தாலும், நூக்க மரத்தாலும் செய்யப்பட்டன.

அரைவட்ட வடிவத்தில் முகப்பும் நீண்ட புத்தக அறைகளையும் கொண்ட இந்தக் கட்டடத்திற்கான சலவைக் கற்கள் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து, படகுகளில் பக்கிங்கம் கால்வாய் வழியாக கொண்டு வரப்பட்டன.

இந்த பழைய கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் நாற்காலி போன்ற அறைகலன்களில் யாழி, குரங்கு போன்ற விலங்குகளின் உருவங்கள் மரச் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கின்றன.

இந்த நூலகத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஊழியரான தமோதரன் இதற்கு ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார்.

அதாவது, தலைமை கட்டட நிபுணரான எச். இர்வினும் தி ஜங்கிள் புக் புத்தகத்தை எழுதிய ரட்யார்ட் கிப்ளிங்கும் நண்பர்கள். ரட்யார்ட் கிப்ளிங்கின் தாக்கத்தினாலேயே இங்கு பல விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்கிறார் அவர்.

அதேபோல, லண்டனில் உள்ள பக்கிங்கம் அரண்மனைக்கான நாற்காலிகள், மேசைகள் போன்றவை 1890களில் சென்னையிலிருந்து செய்து அனுப்பப்பட்டதாகவும் அவை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்டபோது, மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவற்றில் 121 நாற்காலிகள் கன்னிமாரா நூலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார் தாமோதரன். அந்த நாற்காலிகள் தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த நூலகத்தின் மிகச் சிறப்பான அம்சம், இவற்றின் விதானங்கள். பெரும் கலையழகுடன் கூடிய வடிவங்கள் இந்த விதானங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இது தவிர, கட்டடத்தின் ஜன்னல்கள், சித்திரங்கள் கொண்ட வண்ணக் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

1948ல் இயற்றப்பட்ட மெட்ராஸ் பொது நூலகச் சட்டத்திற்குப் பிறகு, புத்தகங்களின் எண்ணிக்கையும் வாசகர்களின் எண்ணிக்கையும் இங்கு வெகுவாக அதிகரித்தது.

இதனால், இந்த கட்டடத்தில் தேக்கு மரத்தாலான ஒரு தளம் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் 1952ல் அமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இங்கு இருந்தன.

ஆனால், பழமையும் அழகும் நிறைந்த இந்தக் கட்டடம் தொடர் பயன்பாட்டால் சேதமடைந்து வந்ததையடுத்து, 1973ல் இந்தப் பழைய கட்டடத்திற்கு முன்பாக, புதிதாக ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டது. இப்போது இதன் வழியாகவே பழைய கட்டடத்தை அடைய முடியும்.

சேதமடைந்த பழைய கட்டம் மூடப்பட்டு, 2003ல் புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டன. 2009ல் இந்தப் பணிகள் முடிவடைந்தாலும், இதற்குள் பொதுமக்கள் இன்னும் அனுமதிக்கப்படுவதில்லை. உலகப் புத்தக தினம் போன்ற சிறப்பு தினங்களில் மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த சிறப்புத் தருணங்களில் இந்த நூலகத்தில் உள்ள பழைய, அரிய புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. அழகிய சித்திர எழுத்துக்களால் கையால் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் பிரதி ஒன்றும் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அரசியல்சாசன அவையில் இடம்பெற்றவர்களின் கையெழுத்துகளையும் பொதுமக்கள் பார்க்க முடியும்.

1955ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ‘டெலிவரி ஆஃப் புக்‘ சட்டத்தின்படி இந்தியாவில் பதிப்பிக்கப்படும் எல்லாப் புத்தகங்களின் பிரதி ஒன்றும் இந்த நூலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

இப்போது கன்னிமாரா நூலகத்தில் சுமார் எட்டு லட்சத்து 22 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரிய புத்தகங்களாகும். 1553ல் பதிப்பிக்கப்பட்ட Omnes Quae Extant என்ற புத்தகமே இருப்பதிலேயே பழைய புத்தகம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: