கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டிபிடிக்கப்பட்டது. கோவை குரும்பபாளைத்தில் உள்ள காளிங்கராயன் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டபோது குளக்கரையில் 2.5 அடி நீளமுள்ள கல்வெட்டின் துண்டுப்பகுதி கிடைத்தது. இதையடுத்து கல்வெட்டு ஆய்வாளர் ரவி, தொல்லியல் அறிஞர் ராஜகோபால் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கல்வெட்டு கொங்கு சோழர்கள் காலத்தை சேர்ந்தது என்பதும், இடைக்கால வட்டெழுத்து முறையில் பொறிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதில் ‘‘ஸ்வஸ்தி கோக்கலி மூர்க்க விக்கிரம சோழன். வடபரி, சாரநாட்டு கவையம்புத்தூரி… ஆகைக்கொண்டு பாலமுது படிக்கும்… சந்திராதித்தவற் சேவகவும்…’’ என எழுதப்பட்டிருந்தது.

கோக்கலிமூர்க்க விக்கிரம சோழன் ஆட்சிகாலத்தில் வடபரிசார நாட்டில் உள்ள கவையம்புத்தூர் இறைவனுக்கு பசுக்களை தானமாக கொடுத்ததன் பேரில் பாலமுது படையல் சந்திர சூரியன் இருக்கும் வரை கோயில் கொடையாக தர வேண்டும் என்பது இதன் அர்த்தம் ஆகும். இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கொங்கு நாட்டு பிரிவுகள் கி.பி 12ம் நூற்றாண்டில் தோன்றியிருக்கும் என்ற கருத்து இதுவரை இருந்தது. ஆனால் கி.பி 11 நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டு மூலம் கொங்கு நாட்டு பிரிவுகள் நூறாண்டு காலம் முந்தியிருக்கிறது. கல்வெட்டின் ஒரு துண்டுப்பகுதி தான் கிடைத்துள்ளது. முழு கல்வெட்டும் கிடைத்தால் விக்கிரம சோழனின் ஆட்சிகாலம், கொடையளித்தவர்களின் விவரங்களை முழுமையாக அறியமுடியும்,’’ என்றனர்.

  • தமிழ் முரசு
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: