செஞ்சிக் கோட்டை

செஞ்சிக் கோட்டை

செஞ்சிக் கோட்டை

இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் , மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி , “இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது” எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. ஆங்கிலேயர்கள் இதனைக் “கிழக்கின் ட்ராய் ” என்றனர். பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

வரலாற்றில் செஞ்சி
தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே வலிமையாகத் திகழ்ந்த ஊர் செஞ்சி. முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு, சிங்கபுரி கோட்டம் என்றும் அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.

கி.பி .3 முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.

பல்லவர் காலத்தில் (கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது. செஞ்சிக்கு கிழக்குப் பகுதியில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகவும் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்ததாகவும் தெரிகிறது. 1014-1190 களில் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்டத் துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையைப் பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் -ஆண்டு முதல் 1529ம் -ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர். இக் கோட்டையைக் கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய (மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களின் கைக்கு வந்தது. அவர்கள், 1750 -இல் இதனைப் பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 -இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு.

அமைப்பு செஞ்சிக் கோட்டை இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய குன்றுகள் (ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி ) இரண்டு சிறிய குன்றுகள் அவற்றை இணைக்கும் 12 கி.மி. மதில் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் ராஜகிரி மட்டுமே தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது.

இந்தியாவில் தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டையாக செஞ்சிக்கோட்டை உள்ளது.

இந்தோ – இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது. ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.

கோட்டையின் முழு அமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை இங்கே காணலாம். எதிரிகள் புக முடியாத கோட்டையாக மட்டுமின்றி இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அரணாக செஞ்சி கோட்டையை வடிவமைத்துள்ளனர். இயற்கையின் கொடையாக மலைக் குகைகளில் நீர் சுனைகள் இருந்தாலும், மழை நீரை பாதுகாக்க மலை உச்சி முதல் அடிவாரம் வரை குளங்களை நமது முன்னோர்கள் அமைத்துள்ளனர். இந்தக் குளங்கள் நிறைந்த பிறகும் மழை நீர் வீணாகாமல் இருக்க இரண்டு அடுக்கு அகழிகளை அமைத்தனர். அகழிகள் ஆழமாகவும், அகலமாகவும் மழை நீரைச் சேமிக்கும் கிடங்காகவும் இருந்தன. போர்க்காலத்தில் கோட்டையை எதிரிகள் முற்றுகையிடும் போது நீர் நிலைகளைப் பயன்படுத்திக் காய்கறிகள், தானியங்கள் விளைவித்தனர். மேலும் பல மாதங்களுக்குத் தேவையான தானியங்களை சேமித்து வைக்கத் தானியக் களஞ்சியம், நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மூலிகைக் காடுகள் கோட்டைக்குள் இருந்தன. இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பும் போது கோட்டையின் தேவை மட்டுமின்றி செஞ்சி நகரிலும், சுற்றியுள்ள விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். இதனால் ஆண்டு முழுவதும் தடையின்றி விவசாயம் நடக்கக் கோட்டையின் நீர் நிலைகள் உதவின. செஞ்சிக் கோட்டை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இந்தப் பகுதிகான முக்கியத்துவம் குறைந்து அதிகாரம் முழுவதும் சென்னையில் இருந்து செயல்பட்டது. இதனால் செஞ்சிக் கோட்டை நீர் நிலைகளும் பாதுகாப்பின்றி தூர்வாராமல் அழியும் நிலைக்கு போயின. அகழிகளின் ஆழம் குறைந்து, சேமிக்கும் தண்ணீரின் அளவு 20 சதவீதமாகக் குறைந்தது.

கிருஷ்ணகிரி: இது தற்போதைய திருவண்ணாமலை சாலையின் தெற்கில் அமைந்துள்ள குன்றாகும். இது ராஜகிரியை விடச் சிறியது. இதன் உச்சிக்குப் போகக் கருங்கல் படிகள் உள்ளன. இங்குக் காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன. (பிற்காலத்தில் இதில் ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்கள் சில இருந்ததால் இது ஆங்கிலேயர்களின் குன்று என்றும் அழைக்கப்பட்டது)
ராஜகிரியுடன் தொடர்பு கொண்ட மற்றொரு குன்று சந்திரகிரியாகும். இது அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை.

தற்போதைய நிலை.
இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 -ஆம் ஆண்டில் இது தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டுத் தொல்லியற் துறையின் கீழ்க் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டு விட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>