அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி – ஆனால், பெயர் மட்டும் குழந்தை!
புலவர் குழந்தை :
- புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
- தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி.
- ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு சூலை 1ஆம் நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது.
- பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவருடைய பொழுது போக்கு பாட்டெழுதுவது. 1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.
- இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில் தொடங்கி 37 ஆண்டுகள் தொடர்ந்தன.
- பவானி உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
- கவி பாட வேண்டும் என்ற வேட்கை. இளமையில் இசைக்கேற்பப் பாடத் தொடங்கினார். பின்னாளில் மரபில் மடை திறந்தார் கவிதைகளை.
- நல்ல பேச்சாளர், கவிவாணர், மொழி உணர்வாளர்.
- 1938, 1948, 1965 ஆகிய ஆண்டுகளில் நுழைய முயன்ற இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் இறங்கியவர் இவர்.
- இவரின் பேச்சும், பாடல்களும் அங்கே உணர்ச்சிப் பெருக்காயிற்று, மக்கள் உணர்வுப் பிழம்பாயினர்.
- 1946 தொடக்கம் 1958 வரை ‘வேளாண்’ இதழைத் தொடர்ந்து நடத்திய இதழாளர்.
- தந்தை பெரியார் வேண்டுகோளுக்கு இணங்க, சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், குறளுக்கு உரை எழுத ஒரு குழு அமைக்கப்பட்டது. நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழு அறிஞர்களுடன் புலவர் குழந்தையும் இருந்தார்.
- புலவருக்குத் திருக்குறள் மீது இருந்த ஆழ்ந்த புலமையால், அவர் 25 நாட்களில் திருக்குறளுக்கு ஓர் அருமையான உரையை எழுதி முடித்தார். அது, ‘திருக்குறள் குழந்தையுரை’ என்று அழைக்கப்பட்டது.
- ‘யாப்பருங்கலக் காரிகை’ சற்றுக் கடினமாக இருந்ததால், அதை எளிதாக்கி ‘யாப்பதிகாரம்‘ என்ற நூலை எழுதினார்.
- பவணந்தி முனிவரின் நன்னூலை எளிமையாக்கி ‘இன்னூல்’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.
- ‘தொடையதிகாரம்’ என்பது இவரின் இன்னொரு இலக்கண நூல்.
- தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு இவர் எழுதிய முழு உரை ‘தொல்காப்பியம் குழந்தை உரை’ ஆகும்.
- இப்படித் தமிழோடு மட்டும் உறவாடியவர் அல்லர் புலவர் குழந்தை. இவர் தந்தை பெரியாரின் தன்மதிப்புச் (சுயமரியாதைச்) சிந்தனையாளர்.
- கம்பனோடு போட்டி போட்டவர் குழந்தை.
- 12 ஆயிரம் பாடல்களைப் பாடினான் கம்பன் – பெயர் இராமகாதை, இராமாயணம்.
- 3100 பாடல்களைப் பாடினார் புலவர் குழந்தை – பெயர் ‘இராவண காவியம்’
- இருவரும் கவிப் போரரசர்கள்தாம். ஆனால் கம்பன் ஆரியர்களுக்காகப் பாடினான், ஆரியத்தை நிமிர்த்தப் பாடினான், திராவிடர்களைப் பழித்து.
- புலவர் குழந்தை ஆரியரைப் புறமொதுக்கிப் பாடினார் ஆரியத்தை தோலுரித்துப் பாடினார், திராவிடரை நிமிர்த்தப்பாடினார்.
- கம்பன் பாடியது ஆரியத்திணிப்பு.
- குழந்தை பாடியது தமிழரின் இனமானம்.
- “தமிழ்ப் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவு படுத்தும் புராணக் கதைகளையே பாடி வந்தார்கள். அதற்கு மாறாக இராவண கவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்” – 1971ஆம் ஆண்டு விழுப்புரத்தில் புலவர் குழந்தையை இவ்வாறு பாராட்டுகிறார் தந்தை பெரியார்.
- “இராவண காவியம் பழைமைக்குப் பயணச்சீட்டு. புதுமைக்கு நுழைவுச் சீட்டு” – இராவண காவிய நூலில் அறிஞர் அண்ணாவின் அணிந்துரை வரிகள் இவை “கம்பனின் இராமாயணத்தை இராவணகவியமாக மாற்றியமைத்ததன் மூலம், செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்தார் புலவர் குழந்தை”
- ஆரியர்களின் சமூக ஆதிக்கப் பண்பாட்டைத் தடுத்து நிறுத்தித் தகர்த்தெறிந்த இராவண காவியம் வெளியான ஆண்டு 1948.
தமிழ்க்காண்டம்
இலங்கைக் காண்டம்
விந்தக் காண்டம்
பழிபுரிக் காண்டம்
போர்க் காண்டம்
ஆகியவை இராவண காவியத்தின் 5 காண்டங்கள். 57 படலங்கள், 3100 பாடல்களைக் கொண்ட இராவண காவியத்தின் தலைவர் இனமான இராவணன். எதிரி(ல்) இராமன். அவ்வளவு தான்! இராவணனைத் தலைவனாக்கி, இராமனை வில்லனாக்கினால் விடுமா காங்கிரசு அரசு? அன்றைய காங்கிரசு அரசால் அதிரடியாகத் தடை செய்யப்பட்டது புலவர் குழந்தையின் இராவண காவியம். தடைக்கு இன்னொரு காரணம் அது திராவிடர்களின் பேரிலக்கியங்களில் ஒன்று. காலம் மாறியது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் ஏறியது. திராவிடப் பேரிலக்கியத்தின் தடையைத் திராவிட இயக்க ஆட்சி நீக்கியது – நீக்கியவர் முதல்வர் கலைஞர், ஆண்டு 1971. அம்மட்டுமன்று, தொல்காப்பியப் பொருளதிகார உரை, தொல்காப்பியத் தமிழர், திருக்குறளும் பரமேலழகரும், பூவா முல்லை, கொங்குநாடு, தமிழக வரலாறு, கொங்குநாடும் தமிழகமும், அருந்தமிழ் விருந்து, அருந்தமிழ் அமிழ்து, தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என 15 உரை நூல்கள் – அரசியலதிகாரம், காமஞ்சரி, நெருஞ்சிப்பழம், ஆடிவேட்டை, கன்னியம்மாள் சிந்து, புலவர் குழந்தை பாடல்கள் என 13 கவிதை நூல்கள் ; யாப்பதிகாரம், தொடையதிகாரம், இன்னூல் என முன்று இலக்கண நூல்களை எழுதியவர் புலவர் குழந்தை.
புறநானூற்றில், புலவர் பொன்முடியாரின் “ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே” என்ற பாடலின் வழி,
“தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே
ஆய்மொழி உணர்த்தல் அறிஞர் கடனே”
என்று அவர் எழுதிய யாப்பதிகாரத்தில் பாடியுள்ளார் புலவர் குழந்தை.
இல்வாழ்க்கை :
புலவர்குழந்தை முத்தம்மை என்பாரை திருமணம் புரிந்தார். சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண் பிள்ளைகளைப் பெற்றார். சமத்துவம் என்பவர் கோவையில் விவசாயக் கல்லூரியில் இள.அறி. (வேளா) பட்டம் பெற்றார். அந்தக் கல்லூரியிலேயே பணிபுரிந்து ஓய்வு பெற்றார். சமரசம் என்பவர் இரண்டாவது பெண் பி.ஏ.பி.எல். படித்து பவானியில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு உள்ளார்.
இலக்கியப்பணி :
1926இல் புலவர் குழந்தை எழுதிய ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு, வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து, வீரகுமாரசாமி காவடிச்சிந்து, வெள்ளகோவில் வழிநடைச்சிந்து ஆகியவை அச்சாயின.
தந்தை பெரியாரின் மீது மரியாதையும், சுய மரியாதை கொள்கை மீது பற்றும் கொணடவர். 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. பெரியார் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அறிஞர் குழு ஒன்றினை அமைத்தார் அதில் முக்கியமானவர் புலவர் குழந்தை. இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார். இந்த உரையுடனே திருக்குறள் குழந்தையுரை என்ற நூல் வெளியிடப்பட்டது.
பள்ளியாசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்கள் யாப்பருங்கலக்காரிகை கற்று கவிபாடுவதில் உள்ள சிரமமறிந்து, அதை முற்றிலும் எளிமையாக்கி ”யாப்பதிகாரம்” என்ற நூலை வெளியிட்டார். இதில் எளிய பயிற்சி மூலம் எவரும் கவிபாடும் ஆற்றலை பெற வழி செய்தார். அதைப் போலவே தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் முழுமைக்கும் எளிய உரை எழுதி அனைவரையும் கற்கும்படி எளிதாக்கினார்.
பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இந்னூல் என்னும் இலக்கண நூற்பா நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து தொடையதிகாரம் என்ற நூலும் வெளிவந்தது. கொங்குநாட்டின் மீதும் அங்கு வளர்ந்த தமிழ் புரவலர் மீதும் பற்றுகொண்ட குழந்தையவர்கள் கொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறுகளைத் தொகுத்து கொங்குநாடும் தமிழும், கொங்குகுலமணிகள், கொங்கு நாடு ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டார்.
தொல்காப்பியர் காலத்தமிழர் வாழ்க்கைப் பண்பு நலன்களை ஆராய்ந்து ”தொல்காப்பியர் காலத்தமிழர்” என்ற நூலையும் எழுதினார். இவர் எழுதி இதுவரை வெளிவந்த நூல்கள் மொத்தம் முப்பத்திநான்கு. அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரிசையில் 3, இலக்கணப் பாங்கில் 3 , உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன.
குழந்தை எழுதிய நூல்களுள் ”இராவண காவியம்” புகழ் பெற்றது. இது 1948 இல் காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.
புலவர் குழந்தையின் செய்யுள் நூல்கள் :
- இராவணகாவியம்
- அரசியலரங்கம்
- காமஞ்சரி
- நெருஞ்சிப்பழம்
- உலகப் பெரியோன் கென்னடி
- திருநணா சிலேடை வெண்பா
- புலவர்குழந்தைப் பாடல்கள்
- கன்னியம்மன் சிந்து
- ஆடி வேட்டை
- நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
- வெள்ளகோவில் வீரகுமாரசாமிரத உற்சவச்சிந்து
- வீரகுமாரசாமி காவடிச்சிந்து
- வெள்ளகோவில் வழிநடைச்சிந்து
உரை நூல்கள் :
- திருக்குறள் குழந்தையுரை
- தொல்காப்பிய பொருள்திகாரம் குழந்தையுரை
- நீதிக்களஞ்சியம்
இலக்கணம் :
- யாப்பதிகாரம்
- தொடையதிகாரம்
- இன்னூல்
உரை நடை நூல்கள் :
- தொல்காப்பியர் காலத்தமிழர்
- திருக்குறளும் பரிமேலழகரும்
- புவாமுல்லை
- கொங்கு நாடு
- தமிழக வரலாறு
- தமிழ் வாழ்க
- தீரன் சின்னமலை
- கொங்குநாடும் தமிழும்
- கொங்குகுலமணிகள்
- அருந்தமிழ்விருந்து
- அருந்தமிழ் அமிழ்து
- சங்கத் தமிழ்ச் செல்வம்
- ஒன்றேகுலம்
- அண்ணல் காந்தி
- தமிழ் எழுத்து சீர்திருத்தம்
பிற சிறப்புகள் :
குழந்தை “வேளாண்” என்ற மாத இதழை 1946 முதல் 1958வரை நடத்தினார். எழுத்து தவிர ஈடுபடுத்தியது போலவே பேச்சிலும் வல்லவராக விளங்கினார். புரட்டாசி 07, 2003 / 1972ஆம் ஆண்டு செட்டம்பர் 22ஆம் நாள் மறைவு எய்தினார்.