சி. கணேச ஐயர் – பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958)!

சி. கணேச ஐயர் - பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 1, 1878 - நவம்பர் 8, 1958)!

சி. கணேச ஐயர் – பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958)!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோமணி என்ற பட்டம் பெற்றவர். மகாவித்துவான் என அழைக்கப்பட்டவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர்.

ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு) இவர் இமயம்போல் போற்றப்படுகிறார்.

யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே ஏறத்தாழ 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் வேளாண்மைக் கிராமத்தில் ஆயாக்கடவை சித்திவிநாயகர் தேவஸ்தான ஸ்தாபக பரம்பரை அந்தணர் வழிவந்த சின்னையா என்னும் அந்தணப் பெரியாருக்கும், அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவருக்கும் ஒரே மகனாகவும் ஐந்தாவது பிள்ளையாகவும் 1878 ஆண்டில் பிறந்தார் கணேச ஐயர்.

கணேசையரது குடும்பம் கற்றவர்களையும், ஆசிரியர்களையும் கொண்டு விளங்கிற்று. இவருடய பெரிய தந்தை (கதிர்காம ஐயர்) அவர்களால் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர் முன்றலில் (சொந்த செலவில்) நடத்தப்பட்டுவந்த சைவப் பள்ளிக் கூடத்தில் ஐயர் எட்டாம் வகுப்பு வரை கல்விகற்றார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார். மேலும் இவரது பெரிய தந்தையாரிடமும் (வீட்டில்) தனிப்பட்ட முறையில் பாடங்கேட்டமை இவரை வகுப்பில் முதன்மாணவர் ஆக்கியது. அதன்பின் யாழப்பண நகரைச் சேர்ந்த வண்ணார்பண்ணையில் வசித்து வந்த வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பல பிள்ளையின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார்.

பொன்னம்பலப்பிள்ளையவர்கள் இறந்தபின் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார்.

கணேசையர் தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது. தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதி வந்தார். தான்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். ஈழகேசரி நா. பொன்னையா அதன் பதிப்பாசிரியராக இருந்தார். எழுத்ததிகாரம் (1937), சொல்லதிகாரம் (1938), பொருளதிகாரம் இரண்டாம் பகுதி (1943), பொருளதிகாரம் முற்பகுதி (1948) ஆகியன வெளிவந்தன. ‘தொல்காப்பியக்கடல்’ என்றும், ‘ஈழத்து இலக்கிய ஞான்று’ என்றும் கணேசையர் புகழப்பட்டார்.

கணேசையர் தனது 25வது வயதிலே அக்காலத்தில் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். இலக்கண ஆராய்ச்சி மட்டுமன்றி பல இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் இவரால் எழுதப்பட்டு ‘செந்தமிழ்’ இதழில் வெளிவந்தன.

கணேசையர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ‘மதுரை செந்தமிழ்’ ஈழகேசரி பத்திரிகை’ மற்றும் அக்காலத்தில் வெளிவந்த சிறப்பு மலர்களிலும் ஐயரின் கட்டுரைகள் இடம்பெற்றன. இலக்கணத்தில் சிக்கலான பகுதிகளைத் தேர்வுசெய்து அது சம்பந்தமான கட்டுரைகளையே அதிகமாக எழுதியுள்ளார்கள். மேலும் சமயம் சார்ந்த அல்லது சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன.

கணேசையர் காலத்தில் ஈழநாட்டு தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கும் இடையில் பல விவாதங்கள் பத்திரிகைகள் – சஞ்சிகைகள் மூலமாக நடந்துள்ளன. ஐயரவர்கள் நடத்திய விவாதங்களில் தமிழ்நாட்டின் அரசன் சண்முகனாருடனான விவாத மோதலே இவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் “ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு” என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும் அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவியிருந்தார்கள்.

மேலும், சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் புகழ் பெற்றது.

கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

கணேசையர் மரபுக்கவிபாடும் வல்லமையையும் கொண்டிருந்தார். ஈழத்தின் சிறந்த புலவர்களுள் ஒருவரான குமாரசாமிப் புலவர் ‘கவிபாடும் புலமைக்கோனே’ எனப் பாராட்டியிருந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: