மாட்டு வண்டி சவாரி – தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு!

மாட்டு வண்டி சவாரி - தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு!

மாட்டு வண்டி சவாரி – தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு!

தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியமாக மாட்டு வண்டி சவாரி விளங்குகிறது. ஈழத்தில் மாட்டு வண்டி சவாரி சிறப்பான ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது. மாட்டு வண்டி சவாரி தமிழனின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது.

வீர விளையாட்டு என்பதால் வண்டியில் பூட்டப்படும் மாடுகளும் கம்பீரமும் வீரமும் உள்ளவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

வண்டில் சவாரிக்கு ஏற்ற மாடுகள் வடக்கன் மாடுகள் என அழைக்கப்பட்டன. ஈழத்தின் வடக்கே இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டதாலேயே வடக்கன் மாடுகள் என அழைக்கப்பட்டன.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மாடுகள் பெரும்பாலும் பருத்தித்துறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களிலேயே இறக்குமதி செய்யப்பட்டன. இத்துறைமுகங்கள் அக்காலத்தில் பாரிய துறைமுகங்களாக விளங்கின. இவ்விறக்குமதி வர்த்தகம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது மாடுகளை இறக்குமதி செய்வதற்காக ‘சலங்கு ‘ எனப்படும் பெரிய பாய்மரக் கப்பல்கள் பயன்படுத்தினர் முன்னோர்கள்.

சவாரி வண்டிலானது அதிக பாரம் இல்லாமல் இருப்பதுடன் உறுதியாகவும், பலமாகவும் இருக்க வேண்டும். வண்டில்களை பாலை, முதிரை போன்ற வைர மரங்களினால் உருவாக்குவர். வண்டில் சில்லுகளை பூவரசு மரத்தினால் உருவாக்கி உலோக வளையம் பூட்டுவர். அவ்வுலோக வளையம் பாதுகாப்புக்காக இடப்படுவதாகும் வண்டிக்குடம் முதிரை மரத்தினாலும், வண்டில் துலா கமுகமரத்தினாலும், அச்சாணி உலோகத்தினாலோ மா அல்லது நாவல் மரத்தினாலோ உருவாக்குவர். வண்டில் ஓடும் போது சக்கரம் தனியே கழன்று விடாமல் இருக்க அச்சாணி பயன்படுகிறது. மாடுகளை வண்டிலோடு இணைப்பதற்கு நுகம் பயன்படுகிறது. வண்டிலானது பொதுவாக 7½ , 7¼, 8½, 9½ சுற்றுக்கள் கொண்டதாக அமைக்கப்படுகிறது. சுற்று என்பது வண்டிச் சில்லின் சுற்றளவைக் குறிக்கும்.

சவாரிக்கு பழக்கும் கன்றினை உடன்பிறப்பாகவும், உறவாகவும் எண்ணி வளர்ப்பர். சவாரி விடுவோரிடம் கேட்டால் சவாரிக் கன்றினை வளர்ப்பது ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பது போலவாகும் என்பார்கள். மாட்டு வண்டில்கள் வைத்திருப்போர் மாடுகளிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பார்கள். மாடுகளை ‘வாடா ‘ ‘திருப்படா ‘ என்று செல்லமாக அதட்டுவார்கள். ‘இஞ்சாய் ‘ என்றே விளிப்பார்கள்.

சவாரி வண்டில் மாட்டிற்கு பல உபசரணைகள் செய்து பக்குவமாக கவனிப்பார்கள் .சவாரி மாட்டிற்கு முதலில் நாணயக்கயிறு மாட்டுவர் அதன் பிறகு மாட்டிற்கு குறி சுடவும், ஆண்மை நீக்கவும் செய்வார்கள் சவாரி செய்யும் மாடுகள் சனக் கூட்டத்தை கண்டு வெருளாமல் இருக்கவே ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.

மாட்டுவண்டில் சவாரியை பொழுதுபோக்காகவும் தொழிலாகவும் செய்தவர்கள் பலர். அவ்வாறு மாட்டு வண்டிச் சவாரித் தொழிலில் ஈடுபடுவோரை ‘சவாரி ‘ என்றே அடைமொழி வைத்து அழைப்பதும் பழக்கத்தில் இருந்துள்ளது உதாரணமாக ‘சவாரித்தம்பர் ‘ ‘சவாரிச்சுப்பர் ‘ போன்ற பெயர்களை சுட்டலாம்.

கிராம மக்கள் தமது வண்டில்களை விதம் விதமாக அலங்கரிப்பர். மாடுகளின் கழுத்தில் மணிகளைக் கட்டுவர். மாடுகள் நடக்கும் போதும், தலையசைக்கும் போதும் ஜல் ஜல் என்ற ஓசை எழும்பும். மாடுகளின் கொம்புகளை அளவாகச் சீவி அவற்றுக்கு வண்ணம் தீட்டி அலங்கரிப்பர் அநேகமாக அனைத்து பயணங்களுக்கும் மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டன. தூரப் பயணங்களுக்கு கூடு பூட்டிய வண்டில்கள் பயன்பட்டன. கூடு பூட்டிய வண்டில்களின் அடியில் சாக்கு கட்டப்பட்டு அதில் மாடுகளின் உணவான வைக்கல் கொண்டு செல்லப்படும். தூரப் பயணங்களில் மாடுகள் களைத்துவிடும் சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு உணவிட்டு ஆசுவாசப்படுத்தி பயணத்தை தொடரும் வழக்கம் காணப்பட்டது. ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டில் திருக்கல் வண்டில் எனப்பட்டது சவாரி செய்தல், சுமைகளை ஏற்றிச் செல்லல், பிரேதங்களை கொண்டு செல்லல் எனப் பல தேவைகளுக்காக மாட்டு வண்டிகள் பயன்பட்டன.

தற்போது மாட்டு வண்டிகள் அதிகம் புழக்கத்தில் இல்லாவிட்டாலும் விறகு கொண்டு செல்லவும், சவாரிப் போட்டியிலுமே அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. சவாரிப் போட்டிகள் பாரம்பரியத்தை பேணுவதாக நடாத்தப்படுகின்றன. இருந்த போதும் வண்டிச் சவாரிப் போட்டிகளில் பல ஆபத்துக்களும் உள்ளன. வேகமாக பறக்கும் வண்டில்கள் குடை சாய்வதும், அச்சுமுறிவதும் உயிராபத்துக்களை ஏற்படுத்தக் கூடியன. ஆபத்துக்கள் இருந்தாலும் எம்மவர்கள் மாட்டு வண்டிச் சவாரியினை மேற்கொள்வது பெருமைப்படத்தக்கது மாட்டு வண்டிச் சவாரிகளில் முதலிடம் பெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

மாட்டு வண்டில்கள் எப்போதும் சூழலுக்கு இசைவாக இருப்பவை. இவற்றால் பணவிரயமும் தவிர்க்கப்படுகிறது பழமை, பாரம்பரியம் மாறாமல் எமது மூதாதையர்களின் அரிய பொக்கிஷமாக இன்று வரை இருப்பவை மாட்டு வண்டில்களே. அவற்றை அழியவிடாமல் பாரம்பரியத்தை காப்பது தமிழர்களாகிய நமது கடமையாகும்.

தில்லைச்சிவனின் “அந்தக் காலக்கதைகள்” என்ற நூலில் 1928-ஆம் ஆண்டு சரவணை என்ற தீவுப்பகுதியில் பிறந்த அவரின் பிள்ளைப்பிராய நினைவுப் பதிவாக இருக்கும் அந்நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.

“அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டு வந்த இரண்டு வடக்கன் மாட்டு காளைகள். ஊர் காவல் துறையில் உள்ள மாட்டுகாலைக்கு இந்தியாவில் இருந்து கப்பலில் இருந்து வந்து இறங்கி நின்றவை அவை. அண்ணாமலை மாடுகள், வெள்ளை வெளேரென்ற நிறம். நன்கு கொழுத்ததும் தளதளவென்ற மினுமினுப்பும் கொண்டவை. ஈ இருந்தால் வழுக்கி விழுந்து விடக்கூடிய வழுவழுப்புள்ள காளைகளின் கொம்புகளோ, நீண்டுயர்ந்து கூடு போன்றவை..” அந்தக்காலத்த்தில் ஒரு ஆயிரம் ரூபாவுக்கு முன் பின்னாக விலை கொடுத்து எனது பாட்டனர் வாங்கிக் கொண்டு வந்தார், இப்படி நீண்டு செல்கின்றது அந்த நினைவுப் பகிர்வு.

வரதரின் மலரும் நினைவுகளில் கூட இதையே இப்படிச் சொல்கின்றார்.

அண்ணாமலை மாடுகள் தென்னிந்தியாவிலுள்ள “திருவண்ணாமலை” என்ற இடத்திலிருந்து காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும். “உரு” என்று சொல்லப்படும் பெரிய வள்ளங்களில் அந்த மாடுகள் இந்தியாவில் ஏற்றப்பட்டு இங்கே ஊர் காவல் துறையில் இறக்கப்படும். இப்படி மாடு வரும், காலத்தில், அவற்றை வாங்குவோரும், தரகர்களும், விடுமுறையில் சுற்றுலா வருபவர்களுமாக ஊர் காவல் துறை திருவிழாக்காலம் போலக் களை கட்டிவிடும்.

நீலாவணனின் கவியாழத்தின் விசாலத்தைப் பகிர இன்னொரு பதிவு தேவைப்படும். அவரின் கவிப் படையலில் தோன்றிய முத்து “ஓ வண்டிக்காரா” கவிதையையும், அது ஈழத்து மெல்லிசைப் பாடலாக எப்படி மாறியது என்பதும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூலக்கவி ஈழநாடு பத்திரிகையில் 21.06.1965 ஆம் ஆண்டு வெளிவந்தது.

கவி வரிகளைப் பாருங்கள் எவ்வளவு அழகுணர்ச்சி தென்படுகின்றது. மழலைப் பருவத்தின் இலங்கை வானொலி அனுபங்களில் மெல்லிசைப் பாடலாக வந்த இந்தப் பாடல், காலம் கடந்தும் அதே சுவை குன்றாது ரசனையில் பதிவாகி இருக்கின்றது. கண்ணன் – நேசம் என்ற புகழ் பூத்த ஈழத்து இரட்டையர்களின் இசையும், மா. சத்தியமூர்த்தியின் குரலும் பாடலுக்கு அணி சேர்க்கின்றது. பாடலில் கலந்து வியாபித்திருக்கும் புல்லாங்குழல் போன்ற தேர்ந்தெடுத்த வாத்தியங்கள் பாடலைச் சேதாராம் பண்ணாமல் நம் தாயகத்துக் கிராமியச் சூழ்நிலைக்கு மனதைத் தாவ விடுகின்றன.

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு!
நாமும் நமது பயணந் தொலையக்
கலந்து கொள்வோம் கூட்டு! – ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா….

பனியின் விழிநீர் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே – ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு..

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: