பாரதியாரின் தேசீய கீதங்களை அச்சிடுவது, தேச பாதுகாப்புச் சட்டப்படி குற்றம்!

பாரதியாரின் தேசீய கீதங்களை அச்சிடுவது, தேச பாதுகாப்புச் சட்டப்படி பிரசுரம் குற்றம்!

பாரதியாரின் தேசீய கீதங்களை அச்சிடுவது, தேச பாதுகாப்புச் சட்டப்படி பிரசுரம் குற்றம்!

“பாரதியாரின் பாடல்கள் தமிழர்களுக்குப் புதிய உயிர் அளிப்பன. அவரது பாடல்கள் எல்லாம் மேலான தேசபக்தியையும், தெய்வ பக்தியையும், உண்மையான கவிகள் விளைக்கும் ஒப்பற்ற இன்பத்தையும் விளைக்கின்றன” என்று பரலி சு. நெல்லையப்பரும்; “”பாரதியாரின் பாடல்கள் அஃறிணைப் பொருளுக்கும் தேசபக்தியையும் வீர ரசத்தையும் ஊட்டுவனவாம்” என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும்; “”தேசாபிமானம் என்பதே அடியோடு இல்லாத ஒருவர் கூட அவர்தம் பாடல்களைப் படிப்பாரானால், பெரிய தேசாபிமானியாகவே ஆகிவிடுவார் என்பதில் ஐயமின்று” என்று சொ. முருகப்பாவும் பாரதியின் பாடல்களைப் பற்றி போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

மக்களிடையே தேசபக்தியை ஊட்டிய பாரதியின் மரணத்தையடுத்து, அவர் மனைவி செல்லம்மாள் பாரதி “சுதேச கீதங்கள்’ என்கிற தலைப்பில் 1922-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரண்டு தொகுதிகளை “பாரதி ஆச்ரம்’ வெளியீடாக வெளியிட்டார். தொடர்ந்து, பாரதி நூல்களை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது; இதன் பின்னர் பாரதி நூல்களை வெளியிடும் பொறுப்பைப் பாரதி பிரசுராலயம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், திடீரென்று எதிர்பாராத விதமாக, 1928 ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதியன்று பாரதி பாடல்களில் ராஜத் துவேஷக் கருத்துகள் இருப்பதாகக் கூறி, அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்த பர்மா அரசு, பாரதி பாடல் நூல்களுக்குத் தடை விதித்தது. இதன் தொடர்பாக பாரதியின் நினைவு நாளான 1928 செப்டம்பர் 11-ஆம் தேதி சென்னை மாகாணத்திலும் நூல்கள் தடை செய்யப்பட்டதற்கான உத்தரவை “கெஜட்’டில் சென்னை மாகாண அரசும் வெளியிட்டது.

பர்மா சர்க்கார் அடியிற்கண்ட உத்தரவை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதாகச் சென்னை மாகாண அரசின் “கெஜட்’டில் பிரசுரிக்கப்பட்டிருப்பதுவருமாறு :

“”1898-ம் வருடத்திய இ.பி.கோ. 99(ஏ) பிரிவுப்படி சென்னை திருவல்லிக்கேணி பாரதி ஆச்ரமத்தார் பிரசுரம் செய்திருக்கும் சி. சுப்பிரமணிய பாரதியாரின் தேசீய கீதங்கள் முதல் இரண்டு பாகங்களிலும் ராஜத் துரோகமான விஷயங்கள் அடங்கியிருப்பதால், அவைகளைப் பிரசுரம் செய்வது இ.பி.கோ.124 (ஏ) பிரிவின்படி குற்றம் ஆகும். ஆதலால், அப்புத்தகங்கள் எங்கிருந்தாலும் அவைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.”

இதன் விளைவாக, சென்னை மாகாண மாஜிஸ்திரேட்டும் பாரதி பாடல் நூல் தொகுதிகளைப் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பித்தார். சென்னை நகரப் போலீஸார், அதுபோது திருவல்லிக்கேணியில் இயங்கி வந்த ஹிந்தி பிரசார சபை, பாரதி பிரசுராலயம், விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் புகுந்து “சுதேச கீதங்கள்’ முதலிரு தொகுதிகளின் நூல் பிரதிகளை 1928 செப்டம்பர் 20-ஆம் தேதி கைப்பற்றினர்.

இச்செய்தியை அறிந்த “சுதேசமித்திரன்’ பத்திரிகை தனது 21.9.1928-ஆம் தேதியிட்ட தலையங்கத்தில் “”இந்த விஷயத்தைப் பற்றிய காரணத்தைச் சட்டசபை உறுப்பினர்கள் கேட்க வேண்டும்” என்று யோசனையாகத் தெரிவித்திருந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


பாரதி நூல்களைப் பறிமுதல் செய்த காலப் பகுதியில், என். சத்தியமூர்த்தி சட்டசபை அங்கத்தினராக இருந்தார். பாரதி நூல்களின் பிரதிகளைப் பறிமுதல் செய்த செய்தியைக் கேட்டு மனம் பதைத்தார். பாரதி பாடல் நூல்கள் பறிமுதல் விவகாரத்தைச் சட்டசபையில் விவாதிக்கத் திட்டமிட்டார்; அதன்படி 1928 அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி சட்டசபையில் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தீர்மானத்தின்மீது விவாதம் நடத்தச் சபையின் தலைவர் அனுமதி வழங்கினார்.

1928 அக்டோபர் 9-ஆம் தேதி பிற்பகல் விவாத நடவடிக்கை தொடங்கியது. விவாதத்தைச் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். விவாதத்தில் சி.என். முத்துரங்க முதலியார், டி. ஆதிநாராயண செட்டியார், சாவடி கே. சுப்பிரமணிய பிள்ளை, ஜி. ஹரி சர்வோத்தமராவ், டி.சி. சீனிவாச ஐயங்கார், டி.கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோர் பங்கு கொண்டு உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய பின், “பத்திரிகை உலகின் ஜாம்பவான்’ என்று போற்றிப் புகழப்படும், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவும் (9.10.1928) உணர்வுபூர்வமான உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார்.

எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று (11 டிசம்பர்) கொண்டாடப்படுகிறது.

பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் போராளியான மகாகவி பாரதியார், கடந்த 1882ம் ஆண்டு இதே நன்னாளில்தான், எட்டயபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி சுப்ரமணிய ஐயர்- இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

தன் வாழ்நாள் முழுவதும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக, எழுத்துகளால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக, பாரதியார் திகழ்ந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனது பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய பத்திரிகையாளர்களில் பாரதியார் முதன்மையானவர். இந்திய பத்திரிகை உலகில் கார்ட்டூனை முதலில் அறிமுகம் செய்தவர். சமூக நலனுக்காகப் பாடுபட விரும்பும் இன்றைய பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் முன்னோடியான அவரின் பங்களிப்பை வணங்கி போற்றுவோம்.

இன்றைய பாரதி திருநாள் தருணத்தில், அப்பெருமகனார் ஆற்றிய பொருள் செறிந்த ஆங்கிலச் சொற்பொழிவின் தமிழாக்கம் இது:

“”மாண்புமிகு தலைவர் அவர்களே! இந்தச் சபையில், நான் எப்போதேனும் ஒருமுறை பேசுகிறவன். இந்தச் சபையில் கொண்டு வரும் பிரேரணை ஒவ்வொன்றின் மீதும் பேச வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்ததும் கிடையாது. ஆனால், இப்போது என் அடிமனத்தின் உள்ளார்ந்த – உண்மையான ஆவலினால் உந்தப்பட்டு, இந்தப் பிரேரணை மீது பேசுகிறேன்.

எனக்குத் தமிழ் தெரியாது. ஆனாலும், பாரதியார் பாடல்களைப் பற்றி நான் கேள்விப்பட்டுள்ள காரணத்தாலும், சபையின் அங்கத்தினர்கள் பலர் பேசியவற்றைக் கேட்ட அளவிலும் எனக்குத் தோன்றும் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். பாரதியார் பாடல்களைப் பாடுவதற்கு இந்த மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் யாவரும் சகலவிதமான உரிமைகளையும் பெற்றவர்கள் ஆவார்கள்.

ஹிந்தி பிரசார சபையின் குழுவில் ஓர் உறுப்பினராக நான் பொறுப்பு வகிப்பதால், ஒரு விஷயத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சபையின் சொந்தச் செலவிலேயே புத்தகங்கள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. புத்தகங்களுக்காக ஹிந்தி பிரசார சபை செலவு செய்துள்ள தொகையான சுமார் ரூ.2,000ஐ இழந்து விட்டிருக்கிறது. நேற்று, இந்தச் சபையில் – “தென்னிந்தியப் பறவைகள்’ என்னும் நூலுக்காக ரூ.4,000 செலவிட அனுமதிக்குமாறு ஒரு பிரேரணையை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. என்னுடைய அபிப்பிராயத்தில் இந்த ரூ.4,000ஐ வங்காள விரிகுடாக் கடலில் வீசி எறியப்படுவதற்கு ஒப்பாகும் என்பேன்.

சொல்லப்போனால், பாரதியின் பாடல்களைப் பிரசுரம் செய்து, அவற்றைப் பரப்ப வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும். பாமர மக்களிடம் பாடல் நூல்களை இலவசமாக வழங்க முற்பட வேண்டும்வதும் கடமையாகக் கருத வேண்டும்.

எதிர்தரப்பு வரிசையில் அமர்ந்து இருக்கும் என் மரியாதைக்குரிய நண்பர்கள் பறவைகள் சம்பந்தமான நூலானது விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்கள். அந்தப் புத்தகத்தினால் விவசாயிகளுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், உண்மையில் விவசாயிகளுக்குப் பயன்தரும் பாடல்கள் ஏதாவது தெரிந்திருக்க வேண்டும் என்று கருதினால், அப்பாடல்கள் பாரதியின் பாடல்களாக மட்டும்தான் இருக்க முடியும்.

எனது மரியாதைக்குரிய நண்பர் திவான் பகதூர் – சட்ட உறுப்பினர் கிருஷ்ணன் நாயர் பர்மா சர்க்காரின் பாரதி பாடல் நூல்கள் பறிமுதல் செய்கையை எதிர்ப்பார் என்று நான் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. தாம் பொறுப்பு வகிக்கும் துறையின் கடமைகளைச் சரிவர ஆற்றி வருகிறவர்களில் அவரும் ஒருவர் என்பதாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், துரதிஷ்டவசமாக, அவர் நான் நம்பி எதிர்பார்த்தபடி கடமையைச் செய்ய முற்படவில்லை. உண்மையிலேயே, அவர் தைரியமாகப் பர்மா சர்க்காரின் செய்கையைக் கண்டித்திருக்க வேண்டும். “எங்களைப் பொறுத்தமட்டில், பாரதி பாடல் நூல்களுக்குத் தடை செய்வதற்கு எந்த முகாந்தரமும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று அவர் கூறி இருக்க வேண்டும்; அவர் அவ்வாறு கூறவில்லை. போலீஸாரும் புத்தகப் பிரதிகள் எல்லாவற்றையும் கைப்பற்றி, எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

சட்ட மெம்பர், டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார் ஆகியோரையும் எங்கள் தரப்பு பிரேரணையை ஆதரிக்கும்படி நான் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். (சட்ட மெம்பர் திவான் பகதூர் எம். கிருஷ்ணன் நாயர் எதிராக வாக்களித்தார். டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார் ஆகிய இருவரும் நடுநிலை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது – கட்டுரையாளர் குறிப்பு).

ஒருவேளை, இவர்கள் ஆதரவு தர முன்வரவில்லை என்றால், அவர்களைப் பற்றி நாங்கள் கொண்டுள்ள அபிப்ராயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியவர்கள் ஆவோம். இந்தச் சபையின் உறுப்பினர் ஒருவர் முன்பொரு சமயம் கேள்வி ஒன்றைக் கேட்டார். அப்போது கேள்விக்குப் பதில் அளித்த டாக்டர் சுப்பராயன் மிகத் தெளிவாக “சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தப் புத்தகங்களில் உள்ள பாரதி பாடல்களைக் கற்றுக் கொடுப்பதையோ பாடுவதையோ தம் அரசாங்கத்திற்கு ஆட்சேபணை இல்லை’ என்பதாகத் தெரிவித்ததைச் சத்தியமூர்த்தி தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

டாக்டர் சுப்பராயன் “”இந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்கள் பள்ளிகளில் கற்பிக்க ஆட்சேபணை இல்லை” என்கிறார். ஆனால், சட்ட மெம்பரோ “அவை ராஜத் துவேஷத்தைத் தூண்டுவதாக உள்ளன’ என்பதாகக் கூறுகிறார். இந்த அரசின் நடவடிக்கையை ஆமோதித்து, இந்தச் சபையில் இதுவரை உறுப்பினர் ஒருவர் கூடப் பேசவில்லை. தவிர, இந்த அரசின் நடவடிக்கை தவறு என்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

எனது நண்பர் ஷாம்நாத் என்பவர்கூட, “சாதகமாகவோ – பாதகமாகவோ தம்மால் எந்தவொரு கருத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை’ என்றுதான் தம் பேச்சில் குறிப்பிட்டார். ஆக, சபையில் பிரேரணைக்கு விரோதமாக உறுப்பினர் ஒருவர்கூடப் பேசவில்லை.

சட்ட மெம்பர் தமது செய்கையைப் பற்றி எந்த முறையில் நியாயப்படுத்தப் போகிறார் என்பதை அறிய ஆவல் உள்ளவனாக இருக்கிறேன். “பர்மா சர்க்கார் செய்து விட்டது; தாமும் அப்படிச் செய்ய வேண்டியதாயிற்று’ என்று சொல்லப் போகிறாரா? அல்லது தவறு செய்து விட்டதாக உணர்ந்து திருத்திக்கொள்ள முற்படப் போகிறாரா? ஒன்று, “அந்தப் புத்தகங்களில் ராஜத்துவேஷக் கருத்துகள் உள்ளன’ என்று சொல்ல வேண்டும்; இல்லையென்றால்,

“தாம் தவறு இழைத்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்?

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் அவரால் நியாயப்படுத்த முடியும். கைப்பற்றிய புத்தகங்களையெல்லாம் உரியவர்களிடம் திரும்பவும் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதிலும், இனி பறிமுதல் செய்யக்கூடாது என்பதிலும் கருத்தொருமித்து சத்தியமூர்த்தியின் பிரேரணையை ஆதரிக்கிறேன்.

சபையில் கொண்டுவந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மூலமாகவும், அரசின் பறிமுதல் நடவடிக்கை மூலமாகவும் பாரதி பாடல்களின் பெருமை முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பிரகாசித்துப் பெருகி உள்ளது. அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இதுவரையிலும், புத்தகங்களைப் படித்தறியாதவர்கள்கூட, “அப்புத்தகங்களில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது’ என்று அறிந்து கொள்வதற்காகவேனும் அப்புத்தகங்களை வாங்கிப் பார்ப்பார்கள்.

தமிழ் தெரியாத நான்கூட, என் நண்பர்களிடம் சொல்லி, எனக்காக ஒரு புத்தகம் வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்வேன். இந்தப் பிரேரணையைச் சபை உறுப்பினர் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். குறிப்பாக, ஆளும் தரப்பு வரிசையில் உள்ளவர்களும் பிரேரணையை ஆதரிக்கப் போகிறார்களா என்பதை அறியவும் நான் ஆவல் கொண்டுள்ளேன்.”

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: