ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு அரிய கொற்றவை சிலை கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த அரிய கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகே கமண்டல நாகநதியின் வடகரையில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் வடிவில் இருந்த சிலையை அப்பகுதியினர் வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளரும், ஆசிரியருமான ஆர்.விஜயன் கூறியதாவது:ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கண்ெடடுக்கப்பட்டுள்ள கற்சிலை பழங்கால கொற்றவை தெய்வமாகும். போர் நடைபெறும் காலத்தில் தமது மன்னர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில போர்வீரர்கள் கொற்றவையிடம் வேண்டிக்கொள்வர். அப்போது, கத்தியால் தமது உடலில் கழுத்து, மார்பு என 9 இடங்களில் தம்மைத்தாமே வெட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வர். இது நவகண்ட பலி எனப்படும். இத்தகைய வீரர்களின் நினைவாக நடுகல் அமைத்து வழிபடுவது தமிழர் மரபாகும்.

பழைய வரலாற்று அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் `வடஆற்காடு மாவட்ட வரலாற்று குழுமம்’ சார்பில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழுத்தாளர் எஸ்.பொன்னம்பலம், முனைவர் அமுல்ராஜ்,  முப்பதுவெட்டி கிரண்குமார், தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர், ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் இச்சிற்பமானது கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஆரணி கமண்டல நாகநதியின் வடகரையில் பழங்காமூர் அமைந்துள்ளது. இதுவே ஆரணி நகரின் தொடக்கக்கால ஊராகும். இந்த ஆற்றின் தென்கரையில் புதுகாமூர் என்ற இடம் பின்னர் உருவானது. காமூர் என்றால் அழகிய ஊர் என்று பொருளாகும். அதன்பின்னர் ஆரணியில் கோட்டை கட்டிய காலத்தில் ஆரணிபாளையம் என்ற இடம் உருவானது. பிற்காலத்தில் இவைகள் இணைந்தே ஆரணி நகரமாக விரிவடைந்தது. ஆரணி பழங்காமூர் சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆரணியின் வரலாறானது சோழர் காலம் தொடங்கியே எழுதப்பட்டு வந்த நிலையில், தற்போது  கிடைத்துள்ள கொற்றவையின் சிற்பத்தால் பல்லவர் காலத்து பழமையான வரலாற்றை நோக்கிச்செல்கிறது. பழங்காமூர் சிவன் கோயிலின் தெற்கில் உள்ள ஆற்றங்கரையில் நெடுங்காலமாக இருந்த இந்த கொற்றவை சிற்பமானது, தற்போது குடியிருப்புகளின் அருகே திறந்தவெளி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 அடி உயரமும், 4 அடி அகலமும் உடைய பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக கொற்றவையின் உருவம் காணப்படுகிறது. தலையில் கரண்ட மகுடமும், அவரது 8 கரங்களில், வாள், வில், பிரயோக சக்கரம், போர் சங்கு போன்ற பலவகை ஆயுதங்களுடன் காணப்படுகிறார்.நின்ற நிலையில் உள்ள இவரது பாதங்களின் கீழாக அசுரனை வென்றதன் அடையாளமாக எருமையின் தலைப்பகுதி செதுக்கப்பட்டுள்ளது. கானமர் செல்வி எனப்படும் இவர், பாலையும் குறிஞ்சியும் இணைந்த காட்டின் தலைவியாக கருதப்படுகிறார். இவருக்கு பின்னால் கலைமான் ஒன்றின் உருவம் பெரியதாக செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மானின் உருவத்துடன் கொற்றவை சிற்பம் கிடைப்பது அரிது ஆகும்.இவ்வகையில் ஆரணியில் கிடைத்த இந்த சிற்பம் முக்கியத்துவம் பெறுகிறது. கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் ஏறத்தாழ 1,200 ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு வழிபாட்டில் இருந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கொற்றவை சிலை குறித்த ஆய்வுக்கு வைத்தியநாத ஐயர் என்பவர் உதவியாக இருந்துள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: