இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965-ம், அலுவல் மொழி (திருத்தச்) சட்டம் 1963-ம்!

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965-ம், அலுவல் மொழி (திருத்தச்) சட்டம் 1963-ம்!

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965-ம், அலுவல் மொழி (திருத்தச்) சட்டம் 1963-ம்!

இந்தியை முதன்மை அலுவல் மொழியாக மாற்றிட அரசியலமைப்பின் பகுதி XVII குறிப்பிட்ட வரையறை நெருங்கும் வேளையில் நடுவண் அரசு இந்தியின் பயன்பாட்டை அரசு செயல்பாடுகளில் கூடுதலாக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது. 1960-இல் அரசு அலுவலகங்களில் இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டன. அதே ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பந்த் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, இந்தி கலைச்சொற்கள் மொழிபெயர்ப்பு, அரசு நடவடிக்கை மற்றும் சட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பு, நடுவண் அரசு அலுவலகங்களில் இந்திக் கல்வி மற்றும் இந்தி மொழியை பரப்புவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றிற்கு வழி செய்யும் ஆணை ஒன்றை வெளியிட்டார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


1959-ஆம் ஆண்டு நேரு கொடுத்த வாக்குறுதிக்கு சட்ட ஏற்பு கொடுக்கும் வண்ணம் அலுவல்மொழி சட்டம் 1963-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதை மன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது நேரு “கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் இருத்தி, அரசியலமைப்பில் 1965 -ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கிலத்தைத் தொடர்வதில் உள்ள தடங்கல்களை நீக்கும் வண்ணம் இந்த வரைவுச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது அந்த கட்டுப்பாட்டை நீக்கும்” என்று கூறினார்.

1963-ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் வரைவுச் சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ஆங்கிலம், இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதனை எதிர்த்து ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர். ஜவஹர்லால் நேரு ஆங்கிலச் சொல்லான may மற்றும் shall இச்சட்டத்தின் சூழலில் ஒன்றே என வாதிட்டார். விவாதத்தை முன்னெடுத்து நடத்திய மாநில அவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான அண்ணாதுரை, ஜவஹர்லால் நேரு சொல்வது போல் இருசொற்களின் பொருளும் ஒன்றே என ஒப்புக் கொண்டால் அரசிற்கு shall என்று மாற்றுவதில் என்ன தயக்கம் என வினவினார். அவர் ஆங்கிலம் காலவரையற்று தொடர வேண்டுமெனக் கோரினார். அப்போதுதான் அனைவருக்கும் கடினமோ எளிமையோ சமநிலைப் படுத்தப்படும் என்றும் வாதாடினார். ஆனால் திருத்தங்கள் எதுவும் இன்றி ஏப்ரல் 27, 1963 அன்று சட்டம் நிறைவேறியது. தாம் முன்னரே எச்சரித்தபடி, மாநிலம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் துவங்கினார். நவம்பர் 1963-இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் அரசியலமைப்பின் XVII பகுதியை எரித்ததற்காக அண்ணாதுரை தமது 500 தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.

ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொராஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள். சாஸ்திரி நேருவின் 1959 மற்றும் 1963 ஆண்டுகளின் வாக்குறுதிகள் காக்கப்படும் என்று கூறிய போதும் சிறுபான்மை மொழியினருக்கு அச்சம் ஏற்பட்டது. நடுவண் அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்படும், பள்ளிகளில் பயிலூடகம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாகக் கூடும் என்ற அச்சங்களும் கவலைகளும் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க உந்தியது. 7 மார்ச் 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார். மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது.

இந்தி தன் அலுவல் மொழியாக மாறும் நாளான சனவரி 26 நெருங்க, நெருங்க தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு அச்சங்கள் மேலோங்கி எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கைப் பெருகி போராட்டச் சூழல் உருவானது. சனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் இருந்தனர். அவர்களில் சிலர்: பெ. சீனிவாசன், கா. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர் சு. துரைசாமி, சேடப்பட்டி ஆர். முத்தையா, துரை முருகன், கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன் மற்றும் எல்.கணேசன் ஆகியோராவர். மாணவர்களின் அச்சங்களைக் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது 6 பிப்ரவரி 1965 தலையங்கத்தில் இவ்வாறு கூறியது (தமிழாக்கம்):

இந்தியின் உயர்வு நிலையை எதிர்ப்பதில் சென்னை மாணவர்கள் தலைமை ஏற்றது தவிர்க்க இயலாதது. நாட்டின் அலுவல் மொழி இந்தி-யா? ஆங்கிலமா என்ற முடிவு மற்றவர்களை விட அவர்களையே கூடுதலாக பாதிக்கிறது. இந்தி மட்டுமே அலுவல் மொழியாவதால் தெற்கின் மாணவர்களே மிகக் கூடுதலான இழப்பிற்கு உள்ளாகிறார்கள்.

இந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு தொழிலதிபர்கள் ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோர் நிதியுதவி அளித்தனர். 17 சனவரி அன்று, திருச்சியில் சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இராஜாஜி (சுதந்திராக் கட்சி), வி. ஆர். நெடுஞ்செழியன் (திமுக), பி. டி. ராஜன் (நீதிக்கட்சி), ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார், சி. பா. ஆதித்தனார் (நாம் தமிழர்), முகமது இஸ்மாயில் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பங்கு கொண்டனர். இராஜாஜி அரசியலமைப்பின் XVII பகுதியைக் “கிழித்து அரபிக் கடலில் போட வேண்டும்” என்று முழங்கினார். 16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர் வந்த குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒரு வாரம் தள்ளிப் போடுமாறு கோரியிருந்தார். அதற்கு பிரதமர் ஒப்பாதது மோதலுக்கு வழி செய்தது.

சென்னை மாநில முதல்வர் எம். பக்தவத்சலம் குடியரசு நாளை அவமதிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். திமுக துக்க நாளை ஒரு நாள் முன்னதாக சனவரி 25 க்கு முன்னேற்றியது. 25 சனவரியன்று கா. ந. அண்ணாதுரையும் 3000 திமுக தொண்டர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

மதுரை நிகழ்வு:

25 சனவரி அன்று காலை மதுரை மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலுக்கு ஊர்வலம் சென்றனர். அவர்கள் முடிவில் அரசியலமைப்பின் பதினேழாம் பகுதியை பொது வெளியில் எரிக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்தி அரக்கியின் கொடும்பாவியை எரித்து “இந்தி ஒழிக”, “Hindi Never, English Ever” என்ற முழக்கங்களை இட்டவாறு சென்று கொண்டிருந்தனர். வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரசு மாவட்ட அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது ஜீப் ஒன்றில் வந்த காங்கிரசு தொண்டர்கள் ஊர்வலத்தினரை அவமதித்து ஆபாச மொழியில் திட்டினர். பதிலுக்கு மாணவர் தரப்பிலிருந்து செருப்புகள் வீசப்பட்டன். கத்திகளுடன் காங்கிரசார் மாணவர்களைத் தாக்கினர். இதில் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கொதித்தெழுந்த மாணவர்கள் காங்கிரசு அலுவலக்கத்தின் முன்னர் குடியரசு தின கொண்டாட்டங்களுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தச் செய்தி எங்கும் பரவி மதுரையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன. மதுரை நகரெங்கும் காங்கிரசு கொடிக் கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

கலவரங்கள் பரவிட, காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச் சொத்து சேதம் என பெருகியது. தொடர் வண்டி நிலையங்களில் தொடர் வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர் பலகைகள் கொளுத்தப்பட்டன. முதல்வர் இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தினரை அழைத்தார். காவலர்களின் கடும் நடவடிக்கைகளால் மேலும் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல் இரு காவலர்களைத் தீயிட்டு கொன்றது. ஐந்து போராட்டக்காரர்கள் (சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி) தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மூவர் (தண்டபாணி, முத்து, சண்முகம்) விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இரு வார கலவரங்களில் அதிகாரபூர்வ தகவலின்படி 70 பேர் இறந்தனர். ஆனால் 500க்கும் கூடுதலானவர் இறந்திருக்கலாம் என்று அதிகாரமற்ற தகவல்கள் கூறுகின்றன. பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சொத்துக்களுக்கான இழப்பு ஒரு கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.

28 சனவரி முதல் சென்னை பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வகுப்புகள் காலவரையன்றி மூடப்பட்டன. காங்கிரசிற்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உருவாயின. 31 சனவரி 1965 அன்று மைசூரில் கருநாடக முதல்வர் எஸ். நிஜலிங்கப்பா, வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ், மத்திய அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரசு கட்சித் தலைவர் காமராஜர் ஆகியோர் ஒன்று கூடி இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணித்தால் அது நாட்டுப் பிரிவினைக்கு அடிகோலும்; எனவே இந்தித் திணிப்பை விலக்கிக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். மொராஜி தேசாய் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்னரே அலுவல் மொழியாக அறிவிக்கப்படாத நிலையில் இதனை நிராகரித்தார். மொராஜி தமிழக காங்கிரசார் மக்களிடையே நிலையை விளக்கி பிராந்திய உணர்வுகளுக்கு இடம் கொடுக்காது நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா, தமிழக முதல்வர் பக்தவத்சலம் சிறப்பாக நிலைமையைக் கையாள்வதாக அவரது கல் போன்ற உறுதிக்கு பாராட்டும் தெரிவித்தார்.

கலவரங்கள் பிப்ரவரி முதல் வாரம் முழுவதும் தொடர்ந்தன. பிப்ரவரி 6 அன்று மாணவர் தலைவர்கள் தீர்வு காண முதல்வரைச் சந்தித்தனர். ஆனால் பேச்சுக்கள் முறிந்து வன்முறை தொடர்ந்தது. ஊர்வலங்கள், உண்ணா நோன்புகள், பொது வேலை நிறுத்தங்கள், இந்திப் புத்தகங்கள் எரிப்பு, இந்திப் பலகைகள் அழிப்பு, அஞ்சலகங்கள் முன் ஆர்பாட்டங்கள் என்பன வழமையாயிற்று. 11 பிப்ரவரி அன்று மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல் மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் அழகேசனுடன் பதவி விலகினார்.

1965 போராட்டத்தின் தாக்கம்:

தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க் குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகளை கொடுத்தார்.

1. ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டார மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர் கொள்ள முழுமையான, கட்டற்ற சுதந்திரம் கொண்டிருக்கும்.

2. இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது நம்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும்.
இந்தி அல்லாத மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர் கொள்ள முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தி அல்லாத மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது.

3. மைய அரசின் அலுவல்கள் தொடர்பாக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

4. இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.

அவரது வாக்குறுதிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவியது. 12 பிப்ரவரியில் மாணவர் சங்கம் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றி தள்ளி வைத்தது. மேலும் 16 பிப்ரவரியன்று சி.சுப்பிரமணியனும், ஓ. வி. அழகேசனும் தங்கள் பதவி விலகளை திரும்ப மீட்டுக் கொண்டனர். இருப்பினும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பும், வன்முறையும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மார்ச் 7 அன்று மாநில அரசு மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் மீளப் பெற்றது. 14 மார்ச்சில் மாணவர் சங்கம் தனது போராட்டத்தைக் கைவிட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் பின்வாங்கல் வட இந்தியாவில் இந்தி ஆதரவாளர்களின் கோபத்தைக் கிளறியது. ஜன சங் தில்லியின் தெருக்களில் ஆர்பாட்டம் நடத்தி ஆங்கில பெயர் பலகைகளைத் தார் கொண்டு அழித்தது.

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967:

மார்ச் மாதம் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட சங்கம் தொடர்ந்து மும்மொழித் திட்டத்தைக் கைவிடவும் அரசியலமைப்பு பகுதி XVII நீக்கிட திருத்தம் கொண்டு வரவும் போராடி வந்தது. 11 மே அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்த மூன்று பேர் கொண்ட மாணவர் குழு இந்திய பிரதமரைச் சந்தித்தது. மெதுவாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது பொதுவான காங்கிரசு எதிர்ப்பு இயக்கமாக, 1967ஆம் ஆண்டு பொது தேர்தலில் அதனைத் தோல்வியடையச் செய்யும் நோக்கத்தோடு மாறியிருந்தது. 20 பிப்ரவரி 1966-இல் சங்கத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற இராஜாஜி மாணவர்களைக் காங்கிரசின் தோல்விக்காக உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 1967 தேர்தலில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் காமராஜருக்கு எதிராக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விருதுநகர் வந்து சீனிவாசனுக்காகப் பிரசாரம் செய்து பெரும் வெற்றியைத் தேடித் தந்தனர். மாநில அளவில் திமுக பெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது.

அலுவல் மொழிகள் (திருத்தம்) சட்டம் 1967:

பிப்ரவரி 1965-இல் லால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதிகளுக்கிணங்க அலுவல் மொழிகள் சட்டத்தைத் திருத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்தி ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்க்கப்பட்டன. 16 பிப்ரவரியன்றே எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதை பொது மேடையில் எதிர்த்தனர். 19 பிப்ரவரியில் மகராட்டிரம் மற்றும் குசராத்தைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவற்றையடுத்து 25 பிப்ரவரியன்று 106 காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இதனை விவாதிக்காது 12 மார்ச் அன்று பிரதமரைத் தனியாக சந்தித்தனர். ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சிகளுக்குள் உள்ள பிரிவுகள் பொது மக்களுக்கு வெளிப்படும் என்ற அச்சத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்பவில்லை. 22 பிப்ரவரியில் காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் காமராஜர் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர வற்புறுத்திய போது உடனேயே மொராஜி தேசாய், ஜகஜீவன் ராம், ராம் சுபாக் போன்றவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பின்னர் செயற்குழு இந்தி அமலாக்கத்தை மிதப்படுத்தும் வகையில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் மும்மொழித் திட்டத்தைத் தீவிரமாக அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுச் சேவை தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று ஆங்கிலத்தின் வீச்சைக் குறைக்க தீர்மானம் இயற்றியது. இந்த முடிவுகள் 24 பிப்ரவரியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

மும்மொழித் திட்டம் தென்னிந்தியாவிலோ பிற இந்தி பேசும் மாநிலங்களிலோ முறையாகப் பின்பற்றப்படவில்லை. பொதுச் சேவை தேர்வுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு ஒவ்வாததாக அரசு அலுவலர்கள் கருதினர். தென்னகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே சலுகை அலுவல் மொழி சட்டம் திருத்தப்படும் என்பதே. எனினும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஏப்ரல் 1965இல் குல்சாரிலால் நந்தா, ஏ. கே. சென், சத்தியநாராயண் சின்கா, மகாவீர் தியாகி, எம். சி. சாக்ளா மற்றும் எஸ்.கே.பாட்டீல் அடங்கிய அமைச்சரவை துணைக்குழு (இந்த துணைக்குழுவில் தென்னிந்திய உறுப்பினர்கள் எவருமில்லை) விவாதித்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலாமல், ஆங்கிலமும், இந்தியும் இணையாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று பரிந்துரைத்தது. இக்குழு பொதுச்சேவை தேர்வுகளில் இடவொதுக்கீடு அல்லது மண்டல மொழிகள் தீர்வுகளுக்கு ஆதரவளிக்கவில்லை. நேருவின் வாக்குறுதியை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அலுவல் மொழி சட்டத்தில் மாற்றங்களுக்கான வரைவை தயாரித்தனர். இந்த வரைவில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மாநிலங்களிடையே மற்றும் மாநில மத்திய அரசுகளிடையே இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை தொடர உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆகத்து 25 அன்று அவைத் தலைவரால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த பஞ்சாப் பிரிவினைப் போராட்டங்கள் மற்றும் காசுமீரப் பிரச்சினைகளின் இடையே இத்திருத்தம் கொண்டுவர சரியான நேரம் இல்லையென அறிமுகப்படுத்தப்படவில்லை.

1967 ஆண்டு திருத்த மசோதா:

லால் பகதூர் சாஸ்திரி சனவரி 1966ல் உருசியாவில் நடந்த அமைதிப் பேச்சுகளின் போது மரணமடைந்தார். அவரை அடுத்து இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றார். 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்த பெரும்பான்மையே கிடைத்தது. தமிழ்நாட்டில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. நவம்பர் 1967இல் புதியதாக சட்டத் திருத்தம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 27 நவம்பரில் நாடாளுமன்றத்தில் வரைவுச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; 16 திசம்பர் அன்று நிறைவேற்றப்பட்டது. (ஆதரவு-205, எதிர்ப்பு – 41) குடியரசுத் தலைவரின் ஒப்புதலை 8 சனவரி 1968ல் பெற்று நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத் திருத்தம் 1963ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி மூன்றை மாற்றி அனைத்து அலுவல் நடவடிக்கைகளிலும் காலவரையன்றி மெய்நிகர் இருமொழிக் கொள்கையை (ஆங்கிலம் மற்றும் இந்தி) கடைபிடிக்க உறுதி செய்தது.

1968 ஆண்டு போராட்டம்:

1967ஆம் ஆண்டின் சட்டதிருத்தம், மும்மொழித் திட்டத்தினைக் குறித்த கவலைகளை நீக்காததால் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் திருப்தியடையவில்லை. ஆயினும் திமுக ஆட்சியில் இருந்ததால் மீண்டும் தங்கள் போராட்டங்களைத் துவக்கத் தயங்கினார்கள். தமிழ்நாடு இந்தி எதிர்ப்புப் போராட்டச் சங்கம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டது. மிதவாதிகள் அண்ணா துரையின் அரசை ஆவன செய்ய விடவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். தீவிரவாத பிரிவுகள் போராட்டத்தை மீண்டும் துவக்கின. மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டும்; இந்திக் கல்வியை நீக்க வேண்டும்; தேசிய மாணவர் படையில் (NCC) இந்தி ஆணைகள் இடுவது நிறுத்தப்பட வேண்டும்; இந்தித் திரைப்படங்கள், பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்; தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப நிறுவப்பட்ட தட்சிண இந்தி பிரசார சபை மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தில் இறங்கினர்.

19 திசம்பர் 1967 அன்று போராட்டம் துவங்கியது. 21 திசம்பர் அன்று போராட்டம் வன்முறையாக மாறியது. அண்ணாதுரை நிலைமையைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றார். 23 சனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்கண்ட முடிவுகள் இதில் உள்ளடங்கியிருந்தது:

மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாக கல்வித் திட்டதிலிருந்து விலக்கப்பட்டது. தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப் பட்டது.

தேசிய மாணவர் படையில் இந்தி ஆணைச்சொற்கள் விலக்கப்பட்டன.

அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.

ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழ் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

நடுவண் அரசை இந்திக்கு அளிக்கப்படும் தனிநிலையை முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து மொழிகளுக்கும் சமநிலை அளிக்க வற்புறுத்தியது.

அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்திட இந்திய அரசைக் கோரியது.

இந்த நடவடிக்கைகளால் இந்தி எதிர்பாளர்கள் அமைதியடைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: