திருமுக்கூடல் அடுத்த பழவேரி மலைக்குன்றில், பெருங்கற்கால நினைவு சின்னங்களாக, நுாற்றுக்கணக்கான கற்படை வட்டங்கள் (பழந்தமிழரின் வானியல் ஆய்வுக்கூடம்) மற்றும் கற்பதுக்கைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, வரலாற்று ஆர்வலர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், மலை மற்றும் மலை சார்ந்த காட்டு பகுதிகளில், பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. காடுகளை ஒட்டியும், மலையடிவாரத்திலும் இருந்த நிலங்களில், விவசாயம் செய்து உணவு உட்கொண்ட கற்கால மனிதர்கள், ஆற்றங்கரை பகுதிகளிலும், மலையின் குகைகளிலும் வசித்து உள்ளனர். இதற்கான, பல வரலாற்று சான்றுகள் உள்ளன. வரலாற்று தேடல்களில் ஆர்வமாக உள்ள வெற்றி தமிழன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களில், தன் குழுவினரோடு கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், பாலாற்றங்கரையை ஒட்டி உள்ள வில்லியம்பாக்கம் அடுத்த சாஸ்திரம் பாக்கம் மலைஅடியில் பெருங்கற்கால நினைவு சின்னங்களான கற்படை வட்டங்கள் மற்றும் ‘ப’ வடிவிலான கற்பதுக்கைகள் உள்ளது கண்டறியப்பட்டது.
சாஸ்திரம்பாக்கத்தை தொடர்ந்து, தற்போது உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேரி மலை குன்றின் மேல் பகுதியில் மிகப் பெரிய வடிவிலான கற்பதுக்கைகள் மற்றும் கற்படை வட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாலாற்றங்கரையை ஒட்டிய பல கிராமங்களில் இதுபோன்ற முதுமக்களின் நினைவிடங்கள் உள்ளன. அவற்றில் பல அழிந்தும், அழிவின் விளிம்பிலும் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை, இதற்கு முன் கள ஆய்வு மேற்கொண்ட பகுதிகளை காட்டிலும், பாலாற்று பகுதியை ஒட்டி உள்ள பழவேரி குன்றின் மீது ஏராளமான கற்பதுக்கைகளும், கற்படை வட்டங்களும் காணப்படுகின்றன.
சில இடங்களில் கற்கள் சூழ்ந்த ஆழமான குகைகள் உள்ளன. மலையின் மேல் பகுதியில் சில இடங்கள் சமவெளியாக உள்ளதால், அங்கு பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என, கருத தோன்றுகிறது. இதனால் தான் அதிக அளவிலான கற்பதுக்கைகளை இங்கு காண முடிகிறது. ஆற்றங்கரையோரம், மனித நாகரித்தின் வளர்ச்சியின் அடையாளங்களாக விளங்குகின்றன. அந்த வகையில் பாலாற்றங்கரையோர நாகரிகம் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.
எனவே, இப்பகுதிகளில் உள்ள தொல் தமிழர்களின் நினைவிடங்களை, அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பெருங்கற்கால மனிதர்களின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க, தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.