கீழடி போன்று அழகன்குளத்திலும் புதையுண்டு கிடக்கும் பண்டைய தமிழகம்!

கீழடி போன்று அழகன்குளத்திலும் புதையுண்டு கிடக்கும் பண்டைய தமிழகம்!

கீழடி போன்று அழகன்குளத்திலும் புதையுண்டு கிடக்கும் பண்டைய தமிழகம்!

அழகன்குளம் கிராமத்தில் நிகழ்ந்த அகழாய்வு பணியில் ரோமானிய நாட்டு நாணயங்கள், சங்ககால நாணயங்கள் என 2000 ஆம் ஆண்டுகளுக்கு முந்திய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகன்குளம் கிராமத்திலும் தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு பணி கடந்த மே மாதம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அழகன்குளம் கிராமத்தில் 52 இடங்களில் பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பணியின் போது சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை பிரதி பலிக்கும் வகையிலும் அவற்றை நினைவு கூரும் வகையிலும் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருள்கள், ஓடுகள், தானிய சேமிப்பு குடுவைகள், மண்பாண்ட தம்ளர்கள், சங்கு வளையல்கள், பழங்கால நாணயங்கள், யானைத் தந்தத்தால் ஆன அணிகலன்கள், ரோமானிய நாட்டு நாணயங்கள், சங்ககால நாணயங்கள் என 2000 ஆம் ஆண்டுகளுக்கு முந்திய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது கடற்கரைக் கிராமமான அழகன்குளம். அங்கு ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுப் பணிகளின் மூலம், இந்தக் கிராமம் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிகத் தலமாக விளங்கியுள்ளது என்பது தெரிய வருகிறது.

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இங்கு வாழ்ந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தினுடைய வாழ்வியல் கூறுகளை அறியும் வகையில் தமிழகத் தொல்லியல் துறையினர் ஏற்கெனவே அகழாய்வு நடத்தி பல்வேறு தொல்பொருள்களை வெளி கொண்டு வந்துள்ளனர்.

ஏழுபருவ அகழாய்வு பணி :

1986-87 -ம் ஆண்டுகளில் தொடங்கிய இந்தப் பணி, ஏழு பருவங்களாக நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆபரணங்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடியிலான பொருள்கள், பண்டைய நாணயங்கள் விளையாட்டுப் பொருள்கள், இரும்பிலான பொருள்கள், நாணயங்கள், மத்தியத் தரைக்கடல் நாடுகளோடு கொண்டிருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் அரிய மண்பாண்டங்கள், நாணயங்கள், பல்வேறு உருவம் பதித்த மண்பாண்டங்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிப்பு பெற்ற மண்பாண்டங்கள் ஆகியவை இதிலடங்கும் . இவையாவும் இங்கு நடத்தப்பட்ட சிறு அகழாய்வுப் பணியின் போது கண்டறியபட்டவை.

இந்தச் சிறப்பு வாய்ந்த பகுதியின் பழந்தன்மையை வெளிப்படுத்தும் பண்டையச் சமூகம், பொருளாதாரம், கலை, கலாசாரம், எழுத்தறிவு, வணிகம் உள்ளிட்ட வாழ்வியல் கூறுகளை முழுமையாக அறியும் வகையில் முழுமையான ஆய்வை மேற்கொள்ள தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அழகன்குளத்தில் அப்போதே தமிழர்களுக்கும் ரோமானிய நாட்டிற்கும் இடையே வணிக ரீதியான தொடர்பும் இருந்துள்ளதை பழங்கால நாணயங்கள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. இந்த அகழாய்வு பணி வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது என்று அழகன்குளம் அகழாய்வு மய்ய தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர் கூறியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: