தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் சிகரம்”!

தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் - “இசைத்தமிழ்ச் சிகரம்”!

தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் சிகரம்”!

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 – 1919) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்று பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக வெளி வந்த இந்நூலில், மிகவும் அறியப்படாத பல தமிழிசை இராகங்கள் ஆராயப்பட்டு சுமார் 95 பாடல்கள் வெளியிடப்பட்டன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார். ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது அந்நூல். இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வாணர்கள் பற்றி விரிவாகவும் நுட்பமாகவும் அது அலசுகிறது. இசை பற்றிய கலைக்களஞ்சியமாக அதைச் சொல்லலாம். அக்கால இந்திய இசை வல்லுனர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலக தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்தச் செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புதுக் கருத்துகள் வெளியாயின.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழர்கள் போற்றி வந்த பழந்தமிழிசை என்பது தொன்மம் நிறைந்தது. அதற்கு நீண்ட கால வரலாறும் உண்டு. தமிழரின் திணை வாழ்க்கையோடு தொடங்கிய தமிழிசை பாணர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. சங்ககால நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தொல்காப்பியம் ஆகியவற்றிலும், ஐம்பெரும் காப்பிய நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் பழந்தமிழிசை குறித்த செய்திகள் விரவிக் கிடக்கின்றன.

கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் உருவான பக்தி இலக்கிய கால கட்டத்திலும் பழந்தமிழிசை போற்றிப் பாதுகாக்கப்பட்டது. 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் பழந்தமிழிசை பின்னுக்குத் தள்ளப்பட்டது. அப்போது வந்த தமிழரல்லாத விசய நகர ஆட்சியிலும், நாயக்கர் ஆட்சியிலும், அதன் பிறகு வந்த மராட்டியர் ஆட்சியிலும். தெலுங்கு, சமசுகிருதம் ஆகிய மொழிகள் ஆட்சி அதிகாரத்தில் கொலுவேறி, தமிழிசையைத் சிதைத்து கர்நாடக இசையென புதுப்பெயர் சூட்டிக் கொண்டது.

மீண்டும் 18 – ஆம் நூற்றாண்டில் முத்துத் தாண்டவரும், அருணாசலக் கவிராயரும், மாரி முத்தாப் பிள்ளையும் தமிழிசை மீட்பிற்கு அடி கோலினர். அப்போது இசைப் பாடல்கள் வளர்ந்த நிலையில் இருந்த போதிலும், இசை இலக்கண நூல்கள் குழப்பம் நிறைந்தும் பிழைகள் மலிந்தும் இருந்தன. இசை இலக்கணங்கள் இசை இலக்கியங்களுக்குப் பொருத்தமற்றுக் காணப்பட்டன. இசை இலக்கணத்தை எழுதியவர்கள் வடமொழியாளர்கள். தமிழ் சாகித்தியங்களே அவர்களது இலக்கணத்துக்கு அடிப்படை. என்ற உண்மையை ஏற்க மறுத்தும் வந்தனர்.

இந்நிலையில்தான் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பழந்தமிழிசையை உயிர்ப்பிக்க, அதன் உரிமையை நிலை நாட்ட, தமிழிசையே ஆதி இசையென உலகுக்கு அறிவித்தவர் இசைப் பேரொளி ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.

இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்னும் ஊரில் முத்துச்சாமி நாடார்- அன்னம்மாள் இணையருக்கு மகனாக 2.8.1859இல் பிறந்தார். ஆபிரகாம் தமது தொடக்கக் கல்வியை சுரண்டை எனும் ஊரிலும், அதன் பிறகு, உயர்கல்வியை பன்றிகுளம் எனும் ஊரிலும் முடித்தார்.

1874இல் திண்டுக்கல் நார்மல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முதன் மாணக்கராகத் தேர்ச்சி பெற்றார். ஆபிரகாமின் தனித்திறமையை வியந்து போற்றி வந்த அதன் முதல்வர் அருள்திரு யார்க் துரை அவர்கள் தமது மாதிரிப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் செய்தார். பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்தும் போது, மாணவர்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது ஒழுக்கமே என்பார். அதனை நேரடியாகக் கூறாமல், கதையின் ஊடாகவே எப்போதும் வலியுறுத்துவார். இதன் காரணமாக அவரைப் பள்ளியில் “கதை உபாத்யாயர்” என்று அழைத்தனர்.

ஆபிரகாம் ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த போதே பல்கலை வித்தகராக உருவாகி வந்தார். இசைத்துறை, மருத்துவத்துறை, புகைப்படத்துறை, அச்சுத்துறை, சோதிடத்துறை, விவசாயத் துறை ஆகியவற்றில் விற்பன்னராகத் திகழ்ந்தார்.

இவர் முதன்முதலில் இசையின் மீது நாட்டங் கொண்டு, வயலின் கற்றுக் கொள்ள விரும்பினார். திண்டுக்கல்லில் புகழ் பெற்ற வயலின் வித்வான் சடையாண்டிப் பக்தரிடம் சென்று சரளி வரிசை, அலங்காரம், கீதம், கீர்த்தனை, வர்ணம் ஆகியவைகளை கற்றுக் கொண்டார்.

இசைத்துறையில் இருந்து கொண்டே சித்தமருத்துவம் கற்றுக் கொள்வதிலும் ஆர்வ மிகுதியோடு காணப்பட்டார். இரவில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அது தொடர்பான நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும் படிப்பதிலே கவனம் செலுத்தினார். அப்போது திண்டுக்கல் ஆனைமலைப் பட்டியைச் சேர்ந்த பொன்னம்பல நாடார் என்பவரின் நட்பு இவருக்குக் கிடைத்தது. அவரின் மூலம் சித்தர்களும் முனிவர்களும் தங்கியிருக்கும் சுருளிமலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு கருணானந்த முனிவர் என்பவரைச் சந்தித்து பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் தயாரிக்கும் முறையை கற்றுத் தருமாறு வேண்டினார். கருணானந்த முனிவரும் ஆபிரகாமின் வேண்டுகோளை ஏற்று கற்றுக் கொடுத்தார்.

1877இல் கருணானந்த முனிவரால் மருத்துவப் பயிற்சி பெற்ற ஆபிரகாம் மக்கள் பிணி போக்கும் தலை சிறந்த மருத்துவராகத் திகழ்ந்தார். தன்னால் உருவாக்கப்பட்ட மருந்துகளுக்கு குருநாதர் பெயரிலேயே அதாவது “கருணாந்தர் சஞ்சீவி மருந்துகள்” என்று பெயரிட்டார். குழந்தைகள் முதல் முதியவர் வரை இம்மருந்துண்ட அனைவரும் நோய் நீங்கி நலம் பெற்றனர். அதுமுதல் மக்கள் அனைவரும் அவரைப் “பண்டுவர்” (வைத்தியர்) என்று பெயர் சூட்டி அழைத்தனர். அது நாளடைவில் ” பண்டிதர்” என்று மருவி அப்பெயரே அவருக்கு சிறப்புப் பெயராக நிலை பெற்றது.

மருத்துவத் தொழிலையும், ஆசிரியத் தொழிலையும் ஒருங்கே கவனித்து வந்த பண்டிதருக்கு பெற்றோரின் விருப்பப்படி 1882இல் திருமணம் நடந்தது. இவரின் துணைவியார் ஞானவடிவு பொன்னம்மாள் ஆசிரியப் பயிற்சி பெற்றவர். அக்காலத்தில் பெண்கள் ஆசிரியப் பயிற்சி பெறுவது என்பது கனவிலும் நடவாத காரியம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கணவரும் மனைவியும் ஆசியர் என்பதால் இருவருக்கும் தஞ்சையில் உள்ள சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தனர். அப்பள்ளியின் முதல்வர் அருட் திரு. பிளேக் என்பவர் இருவரின் மீது மிகுந்த பற்றுடையவராகி ஞானவடிவு பொன்னம்மாள் அம்மையாருக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பையும், பண்டிதருக்கு தமிழாசிரியர் பொறுப்பையும் வழங்கினார்.

1890ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து இருவரும் விலகினர். மீண்டும் கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளை தயாரிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். அதிகளவில் பொருளீட்டியதால் வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி பாயும் தஞ்சை மண்ணிலே இடம் வாங்கி அழகிய தோட்டம் அமைக்க பண்டிதர் பெரு விருப்பம் கொண்டிருந்தார்.

அதன்படி தஞ்சைக்கு அருகில் 100 ஏக்கர் பரப்பில் நிலமொன்றை விலைக்கு வாங்கி அதற்கு “கருணானந்த புரம்” என்று பெயரிட்டார். அங்கு உருவான தோட்டத்தில் மாங்கன்றுகள், பலாமரங்கள், தென்னைமரங்கள் வளர்க்கப்பட்டன. 1907 முதல் 1914 வரை நடைபெற்ற விவசாயப் பொருட்காட்சியில் கருணானந்த புரத் தோட்டம் பங்கு பெற்று 6 தங்கப் பதக்கங்களும், 37 வெள்ளி பதக்கங்களும் வென்றது. அரசும் பண்டிதரின் சித்த, வேளாண்மைப் பணிகளைப் பாராட்டி “இராப் சாஹேப்” பட்டம் வழங்கி சிறப்பித்தது.

திண்டுக்கல்லில் இருந்த போது கந்தசாமி என்பவரது அச்சு இயந்திரக் கூடத்தை கண்டு வந்த பண்டிதர் அது போல் தமக்கும் அச்சு இயந்திரம் தேவை என்பதாக உணர்ந்தார். 1912இல் தஞ்சையில் மின்சக்தியால் இயங்கும் “லாலி அச்சகம்” எனும் பெயரில் அச்சகத்தை நிறுவினார்.

தஞ்சையில் பண்டிதர் ஆசிரியப் பணி புரிந்த போதே அங்கு நாதசுர வித்துவானாக விளங்கிய தஞ்சை இராமசாமி கோயில் என்பவரிடம் நெருக்கமாகப் பழகி இசையின் நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அதுமட்டுமின்றி, விசய நகரப் பேரரசு காலத்தில் இருந்து இசையரங்குகளில் தெலுங்கு, சமசுகிருதம் மொழிகளில் தியாகய்யர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரின் கீர்த்தனங்கள் பாடப்பட்டு வந்தததையும் உற்றுக் கவனித்து வந்தார்.

பாடும் பொருளின்றி இனிய இசையை மட்டும் அன்னிய மொழிகளில் கேட்டு மகிழ்வதைக் காட்டிலும் , இனிய இசையோடு பொருளும் அறிந்து தமிழில் பாடுவோமானால் கேட்பவர் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர் என்பதுதான் பண்டிதரின் இசை பற்றிய கொள்கை முடிவாகும்.

பண்டிதர் உடனடியாக தமிழில் பாடல் எழுதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு 96 தமிழ்ப் பாடல்களை இயற்றினார். இவற்றுள் கீதம், சுரஜதி, க்ருதி, ஜதிஸ்வரம், வர்ணம் ஆகியவை அடங்கும்.

பண்டிதர் தமிழிசையை புதுப்பிக்கும் பணியிலும் தீவிரம் காட்டினார். தெலுங்கு இசைக்குறிப்புக்கும், மரபுவழியாக பயின்றும், பாடப்பட்டும் வந்த தமிழிசைக்கும் பெருத்த மாறுபாடு இருப்பதைக் கண்டறிந்தார். 1912 முதல் 1916 வரை “சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” பெயரில் ஏழு இசை மாநாடுகளை தமது சொந்த முயற்சியில் நடத்தினார். மேற்கத்திய இசை விற்பன்னர்களையும் இந்த மாநாட்டில் பங்கேற்க வைத்து தமிழிசைக்குப் புத்துயிர்ப்பு தந்தார்.

வேங்கட மகி எழுதிய ‘ சதுர்த்தண்டி பிரகாசிகை நூலில் 72 மேளகர்த்தா (தாய்ப் பண்) இராகங்கள் குறிப்ப்பிடப்பட்டுள்ளது. இதில் 16 சுத்த மத்திம இராகங்களும், 16 பிரதி மத்திம இராகங்களும் ஆக மொத்தம் 32 இராகங்கள் தான் தகுதி படைத்த இராகங்கள் என்று பண்டிதர் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவித்தார். அதுபோல் சுருதிகள் 22 அல்ல 24 எனவும் நிறுவினார்.

வடக்கே பாடப்படும் இந்துஸ்தானி இசை என்பது தமிழிசை என்றும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை குறித்த தகவல்கள் இன்றைய கர்நாடக இசையில் உள்ள மூல இலக்கணங்கள் என்றும், இன்று இசையின் அடிப்படைகளாக விளங்கும் இராகங்களை உண்டு பண்ணும் முறையும், பாடும் முறையும் நமது பழந்தமிழ் இசை இலக்கணத்தில் இருந்தே வந்தது என்றும் அறிவித்தார்.

1916ஆம் ஆண்டில் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில் பண்டிதர் கலந்து கொண்டு, அதில் தனது முடிவாக ஏழு சுவரங்கள் 12 சுரத் தாளங்களுள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வீதம் 24 சுருதிகள் என்றும், பழந்தமிழர்கள் 24, 48, 96 ஆகிய சுருதிகளில் பாடி வந்ததையும் குறிப்பிட்டுப் பேசினார். அவரது மகள் மரகதவல்லி துரைப்பாண்டியன் அவர்கள் இதனை வீணையில் வாசித்தும் , பாடியும் காட்டிய போது அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்தது.

இசைத் தமிழ் குறித்து அரிய உண்மைகளை விளக்கும் வகையில் 1917ஆம் ஆண்டில் “கருணாமிர்த சாகரம் ” என்னும் நூலினை பண்டிதர் வெளியிட்டார். இது இரண்டு நூலாகத் தொகுக்கப்பட்டு ஆயிரத்து இருநூறு பக்கங்களைக் கொண்டது. இந்த நூல் தமிழிசை வரலாற்றில் ஒரு மைல் கல். இதில் மூன்று சங்கங்கள் பற்றிய குறிப்பும், சங்க கால நால்வகை யாழ் குறித்தப் பதிவும், பண்களின் பெயர்களும், அதன் விளக்கங்களும் படிப்போரை வியப்பில் ஆழ்த்தும்.

பன்முக ஆற்றல் பெற்றவரும் இசைத்துறையில் ஆழக்கால் பதித்தவரும் தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது 71ஆம் வயதில் 19.8.1919இல் தனது இசைத் துடிப்பை நிறுத்திக் கொண்டார்.

நன்றி:
1.குன்றக்குடி பெரிய பெருமாள் எழுதிய “தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்”.
2. இசைத் தமிழ்ப் பேரறிஞர்கள், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: